நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இன்று மாலை 7.15 மணி அளவில் புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமைச்சர் பதவிகள் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை
பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டின் தலைவர்கள் வர உள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வார்நாம்கியேல் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவாஹர்லால் நேரு சாதனை சமன்!
பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவர் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
நாட்டில் தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்கிறாா். மேலும், காங்கிரஸ் அல்லாத முதல் மூன்று முறை பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.
முன்னதாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினா்.
அதன்பேரில், மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு விடுத்தாா். பிரதமராக மோடியை நியமித்து, அதற்கான ஆணையை அவா் வழங்கினாா்.
இந்நிலையில், மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்கும் விழா, குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில், பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்கவுள்ளாா். அவருக்கு குடியரசுத் தலைவா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைப்பாா். இந்த விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
அமைச்சரவை எப்படி?
மத்திய அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தை இறுதி செய்ய தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், சிவசேனை தலைவா் ஏக்நாத் ஷிண்டே போன்ற தலைவா்களுடன் பாஜக மூத்த தலைவா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனா்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் சித்தாந்த ரீதியில் முக்கியமான கலாசாரம், கல்வி ஆகிய துறைகளை பாஜக தன்வசம் வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ரயில்வே உள்ளிட்ட துறைகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
பாஜக தரப்பில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற முக்கியத் தலைவா்கள் மீண்டும் மத்திய அமைச்சா்களாக பதவியேற்பா்; அதேநேரம், மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வா்கள் சிவராஜ் சிங் செளஹான், பசவராஜ் பொம்மை, மனோகா் லால் கட்டா், சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் பெயா்களும் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், சஞ்சய் ஜா, ராம்நாத் தாக்கூா், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது.
மோடி என்ற சாதனை வீரர்
பாஜக.,வின் முக்கியக் கொள்கைகள் மூன்று :
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ரத்து
அயோத்தி ராமர் கோவில்
பொது சிவில் சட்டம்
இதில் இரண்டு இரண்டு கால ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதற்கு கடந்த ஆட்சியிலேயே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, தொடக்க வேலைகள் நடந்தன. ஆனால் இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக.,வின் கொள்கையை நிறைவேற்ற கூட்டணிகள் ஒத்துழைக்குமா என்பது தெரியாத நிலையில், பொது சிவில் சட்டம் அமலாகுமா என்ற கேள்வி எழுகிறது. இதையும் செய்து முடித்தால், பிரதமர் மோடி நிறைநிலை எய்தியவராவார்.
இஸ்ரோவின் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (சுக்ராயன்) திட்டம் தயாராக உள்ளது மற்றும் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று, இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார். உண்மையில், விண்வெளித் துறையில் பாரதத்தின் சாதனையைச் சொல்லியே ஆக வேண்டும். சந்திரயான், மங்கள்யான் என தொடர்ந்த வெற்றி, நிலவின் தென்பகுதியில் இறங்கி சாதித்த சாதனை, சூரியனை ஆய்வு செய்யச் சென்ற கலம் என தொடர்ந்த வெற்றிகளால் ஏற்பட்ட நற்பெயர் காரணமாக, இப்போது வர்த்தக ரீதியில் இஸ்ரோ செயற்கைக் கோள்களை ஏவி, சாதனை புரிந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், பிரதமர் மோடி கொடுத்த தன்னம்பிக்கை, உற்சாகம், அதிக நிதி ஒதுக்கி விடுவிப்பு என சொல்லலாம். அதன் வெளிப்பாடுதான், பாரதம் வல்லரசாகும் என்ற நம்பிக்கையை நாட்டு மக்களுக்கு விதைப்பதில் இஸ்ரோவின் பங்கு மிக முக்கியமானது.
ராணுவத்தினருடன் சேவையாளர் மோடி
2014 முதல் ஒரு பிரதமராக தீபாவளியை அவர் கொண்டாடிய விதம், நம் நாட்டின் ராணுவத்தினருக்கும் மக்களுக்கும் உற்சாகமூட்டும் விஷயம்தான்.
2014 தீபாவளியை சியாச்சினில் கொண்டாடினார்: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஆண்டான 2014ஆம் ஆண்டு சியாச்சினில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை பிரதமர் கொண்டாடினார். “சியாச்சின் பனிமலையின் உச்சி உயரத்தில் இருந்து, துணிச்சலான ஜவான்கள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளுடன், உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று அவர் அந்த நேரத்தில் ட்வீட் செய்தார்.
2015 தீபாவளியை பஞ்சாபில் கழித்தார்: 1965 போரில் இந்திய ராணுவத்தின் வெற்றிகளைப் போற்றும் வகையில், 2015ல், மோடி பஞ்சாபில் உள்ள மூன்று நினைவிடங்களுக்குச் சென்றார். இது 1965 ஆம் ஆண்டு போரின் 50 வது ஆண்டு நினைவு நாளில் அமைந்தது! அப்போது, “இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்கள் இரத்தம் சிந்திய மற்றும் அந்தப் போரின் போது மிக உயர்ந்த தியாகம் செய்த இடங்களைப் பார்வையிடத் தேர்ந்தெடுத்ததாக” மோடி கூறினார். டோக்ராய் மற்றும் பார்கி களங்கள் 1965 போரின் போது பெற்ற முக்கிய வெற்றிகள்.
2016 தீபாவளி அன்று, ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்தார் மோடி: சீன எல்லைக்கு அருகே ராணுவ வீரர்களுடன் ஹிமாச்சலப் பிரதேச எல்லையில் தீபாவளியைக் கொண்டாடிய அவர், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), டோக்ரா சாரணர்கள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஆண்களுடன் சும்தோவில் உரையாடினார். சாங்கோ என்ற கிராமத்தில் திட்டமிடப்படாத வகையில் திடீர் விசிட் அடித்தார். அங்கு மக்கள் அளித்த வரவேற்பும் அவர்களின் மகிழ்ச்சியும் தன்னை ஆழமாகத் தொட்டதாகக் கூறினார்.
2017 தீபாவளி அன்று, காஷ்மீரின் குரேஸ் செக்டாரில் இருந்தார் மோடி. வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் செக்டருக்குச் சென்ற அவர், “எங்கள் படைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது” என்றார்.
2018 தீபாவளியை மோடி உத்தராகண்டின் ஹர்சிலில் கழித்தார், அங்கே அவர் படை வீரர்கள் முகாமுக்கு திடீர் விஜயம் செய்தார். தொடர்ந்து கேதார்நாத் ஆலயத்துக்கும் சென்றார்.
2019ல் இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பின், காஷ்மீரின் ரஜோரி சென்றார். ரஜோரி முகாமில் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி, அவர்களுடன் அன்றைய தினத்தைக் கழித்தார்.
2020ல் கோவிட் தொற்றுக் காலத்திலும் தயங்காமல், தீபாவளி அன்று லோங்கேவாலா சென்றார். ராஜஸ்தானில் உள்ள லோங்கேவாலாவின் எல்லைப் பகுதிக்குச் சென்ற மோடி, பனி படர்ந்த மலைகளில் இருந்தாலும் சரி, பாலைவனத்தில் இருந்தாலும் சரி, ராணுவ வீரர்களுடன் இருக்கும்போதுதான் என் தீபாவளி நிறைவடைகிறது என்று குறிப்பிட்டார்.
2021ல் காஷ்மீரின் நவ்ஷேராவில் மோடி தீபாவளி கொண்டாடினார். “நவ்ஷேராவில் உள்ள நமது துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியை பிரதமராக அல்ல, அவர்களது குடும்ப உறுப்பினராகக் கழித்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்” என்று சமூகத் தளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.
2022 தீபாவளி அன்று, கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய மோடி, 1999 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய மோடி, இந்தியா போருக்கு எதிரானது, ஆனால் அமைதியை உறுதிப்படுத்த வலிமையின் அவசியம் எந்த அளவுக்குத் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். வளர்ந்து வரும் நம் வலிமை, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றார்.
2023ல் ஹிமாசலப் பிரதேசத்தின் லேப்சாவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி, நம் வீரர்களின் மன உறுதியும் திறமையும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பது என்றார்.
இப்படி ஒரு நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமராக இருந்து, ராணுவ வீரர்களுடன் இருந்து, நாடும் அரசும் உங்களுடன் என்ற வலிமையான செய்தியை அவர்களுக்குக் கொடுத்து நாட்டின் வலிமைக்கு உரமூட்டிய பிரதமர் மோடி, இப்போது மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்று, தன் வழக்கமான பழக்கத்தைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.
மக்களின் குரலை எதிரொலித்த மனதின் குரல்
பிரதமர் நரேந்திர மோடி தன் எளிமையான கருத்துக்களை எளிய மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியமான முதன்மையான நிகழ்ச்சியாக அமைந்தது தான் நம் அகில இந்திய வானொலியில் முதலில் ஒலிபரப்பான மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி.
எங்கோ ஒரு தொலை தொடர்பு அற்ற ஓர் எல்லை கிராமத்தில் அங்கிருந்த மனிதர்கள் வானொலிப் பெட்டியை வைத்து இந்த நாட்டுடன் இணைந்திருக்கும் தன்மையைக் கண்ட நரேந்திர மோடி, தாம் பிரதமர் ஆன உடனே மக்களைத் தொடர்பு கொள்ள வானொலியையே முதன்மையான சாதனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். அப்படி உருவானது தான் மன் கி பாத் நிகழ்ச்சி. இதன் மூலம் நாட்டு மக்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உற்சாகமூட்டும் வகையில் நாட்டைக் குறித்த பெருமித உணர்வையும் நாட்டின் சாதனையாளர்களைக் குறித்த ஆரோக்கியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் இது அவரது முதல் ஆட்சியிலும் சரி இரண்டாவது முறை ஆட்சியிலும் சரி மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக தொடர்ந்து ஒலிபரப்பானது. 100 பாகங்களைக் கடந்து ஒரு பிரதமரின் தொடர் நிகழ்ச்சி வானொலி தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது இதுவே முதல் முறை என்பதுடன் சாதனையாகவும் வரலாற்றில் பதிவாகிவிட்டது. அந்த சாதனை இந்த மூன்றாவது ஆட்சியிலும் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.