பொதுவாக, இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சிக்கு எதிராக மக்களின் கோபம் அல்லது எதிர்ப்பு உணர்வு திரும்புவது எங்குமே வழக்கம் தான். ஆனால் பல்வேறு எதிர்நிலைப் பிரசாரங்கள், வாக்காளர்களின் மனநிலையில் பேராசை காட்டி எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய குழப்பங்கள், நாடெங்கும் நிலவிய வெப்ப அலை என பல்வேறு காரணிகளையும் மீறி, ஆளும் பாஜக., தலைமையிலான கூட்டணிக்கு மீண்டும் வாக்களித்து வாய்ப்பளித்து இருக்கிறார்கள் வாக்காளர்கள்.
கடந்த முறை பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 2014 தேர்தலின் போது,மக்களின் நிராகரிப்புக்கு உள்ளாகி, 50 இடங்களுக்குள் முடங்கிப் போய், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தக்க வைக்க முடியாத நிலைக்குச் சென்றிருந்தது. அப்படிப்பட்ட நிலையை எல்லாம் பார்க்கும் போது, பாஜக.,வுக்கு, குறிப்பாக மோடிக்கு அப்படியான நிலையின்றி, வழக்கம் போல் தங்களது ஆதரவைக் கொடுத்து, 240 இடங்களுக்கு மேல் தனிப்பட்ட வகையில் கொடுத்திருக்கிறார்கள். ஓரிரண்டு மாநிலங்களில் ஏற்பட்ட பின்னடைவு, பாஜக.,வுக்கு பின்னடைவு போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தந்திருந்தாலும், வழக்கமான அல்லது எதிர்பார்க்கப்பட்ட வெற்றியையே பல்வேறு இடையூறுகளையும் கடந்து மக்கள் அளித்திருக்கிறார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்னர் பத்து வயதுக்குள்ளும், பதின்ம வயதுகளிலும் இருந்தவர்கள் இப்போது முதல்முறை வாக்காளர்களாக தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு கடந்த 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், அதற்கு முன் கூட்டணி ஆட்சிகளில் இருந்த நிலையற்ற தன்மை போன்றவை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். அவர்களைக் கவரும் வகையில், பாஜக., கூட்டணி தங்களது நியாயத்தை தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் வாக்குகளை அதிக அளவில் கவர்ந்திருக்க வேண்டும் என்றும் இப்போது கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
பொதுவாக, நாடு எங்கும் நிலவிய கடுமையான வெப்பத்தின் தாக்கம், சாதாரண வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதில் சுணக்கம் காட்டியிருப்பதும், எதிர்நிலை வாக்காளர்களை கட்டாயம் வாக்களிக்க உந்தித் தள்ளியிருப்பதும் உ.பி., வங்கம் போன்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. மேலும், ஏழு கட்டங்களாக நடைபெற்ற நீண்ட நெடிய தேர்தலானது, பெரும் சோர்வையும் மக்கள் மனதில் வெறுப்பையும் அளித்திருப்பது வெளித்தெரிகிறது.
18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், ஜூன் 4, செவ்வாய்க்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு வந்த போதே, தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரதிபலிக்காத வகையில், ஆளும் பாஜக., கூட்டணி தரப்புக்கு 300 என்ற அளவிலும், எதிர்த் தரப்புக்கு 200+ என்ற அளவிலும் முன்னிலை நிலவரம் தொடர்ந்து வந்தது. அது நாள் முழுதும் அப்படியே பிரதிபலித்தது. கடந்த தேர்தலில் பாஜக.,வுக்கு விழுந்த வாக்கு சதவீதமும் அப்படியே நீடித்தது. எனினும், பாஜக., 272 என்ற தனிப் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாமல், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் தொடர்ந்து ஆட்சியை நடத்திச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது, கடந்த 1999ம் வருடத்தின் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் 28 கட்சிகள் இடம்பெற்றன. தலைவர்கள் பலர் ஒன்று கூடி, ஒற்றை மனிதனாக பிரதமர் மோடியை மட்டுமே குறிவைத்து, எதிர் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட வகையிலும் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். முக்கியமாக, வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய், மகளிருக்கு உதவிப் பணம், விவசாயிகளுக்கு இலவச பணம், சிறுபான்மையினருக்கு மிகப் பெரும் அளவிலான சலுகைகள் என பல்வேறு ஆசைகளைக் காட்டி, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து மக்களை திசை திருப்பினர். இந்த வேகத்தால், பாஜக.,வுக்கு வர வேண்டிய நடுநிலை வாக்குகள் சற்றே சிதறிப் போனது.
பாஜக., அதிகம் எதிர்பார்த்த உ.பி., மேற்கு வங்கம், மஹாராஷ்ட்டிரா, ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் பின்னடைவைச் சந்தித்ததால், இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றாலும், தென் மாநிலங்களில் தமிழகம், கேரளம் தவிர்த்து ஓரளவு பாஜக.,வுக்கு கைகொடுத்திருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்!
எனவே தான், மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) பிரதமர் ஆகும் வாய்ப்பை நரேந்திரமோடி பெற்றிருக்கிறார். சுதந்திர பாரதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர் மூன்றாவது முறை பிரதமர் ஆவது என்பது இதுவே முதல் முறை. எனவே இந்த வெற்றியை பாஜக., தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கெனவே எதிர்பார்ப்பும் இருந்ததால், பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் உடனடியாக வந்திருக்கின்றன. உலகத் தலைவர்கள் பலர் சமூகத் தளங்களின் வழியே தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடி, கடந்த 2014ல் முதல்முறையாகப் பதவி ஏற்றது முதல், உள்நாட்டின் சீரமைப்புக்கும், வெளிவிவகாரத் துறைக்கும் தன் கவனத்தை முன்வைத்தார். ஊழலுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள், ஊழல் குற்றச்சாட்டே விழாத வகையில் பத்தாண்டுகள் ஆட்சியை நகர்த்திச் சென்றது இவை மோடியின் வெற்றி. மோடி செயல்படுத்திய அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் நடைமுறை மற்றும் பண பரிவர்த்தனையை எளிதாக்கியது இவற்றின் வெற்றி அவருக்கு நிச்சயமான ஓரிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக.,வுக்கு மூன்று முக்கிய கொள்கைகள் இருந்தன. காஷ்மீர் விசேஷ அந்தஸ்து 307வது சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்ட்ம் இம்மூன்றில் முதலிரண்டும் சட்டபூர்வமாக சுமுகமாக நிறைவேறி அவருக்கு நற்பெயரைத் தந்தது. கறுப்புப்பணம் ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், பழைய சட்டங்களை ஒழித்தல் போன்றவற்றில் கடந்த தேர்தலிலேயே எதிர்பிரசாரம் அதிகம் இருந்தும் மக்கள் வெற்றியைத் தந்தனர்.
காஷ்மீரில் மோடி எடுத்த சில முக்கிய முடிவுகள், ஏழை, விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு உதவித்தொகை, இலவச காஸ், குடிநீர் இணைப்புகள், பிரதான்மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, மருத்துவக் காப்பீடு, மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், பெண்களுக்கு அதிகாரம், ஏழைகளுக்கு பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், கோவிட் காலத்தில் சிறப்பான முறையில் கையாண்டது, கோவிட் நேரத்தில் மக்கள் தேவைகளுக்கேற்ப பணம், ரேஷன் பொருள்கள் இலவசமாக அளித்து உதவியது என பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாடுகள் அவருக்கு பெரும் வெற்றியைத் தந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. அதற்கு ஏற்ப, எதிர்க்கட்சியினர் துர்பிரசாரங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில் பிரதமர் மோடி சிறப்பான வகையில் திட்டமிட்ட பிரசாரம் மேற்கொண்டார்.
எனவே தான் 400 இடங்களை பாஜக., கூட்டணி பெறும் என்று அவரும் சொல்லி வந்தார். ஆனால் 400ஐ எட்ட விடமாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் சொன்னபோது, எங்களுக்குத் தேவை 272 இடங்கள் தான், ஆனால் உங்களை நான் 400 வராது என்று சொல்ல வைத்திருக்கிறேன் அல்லவா, அதுதான் வெற்றி என்றார் பிரதமர் மோடி. உண்மையில் பிரதமர் பேச்சின் உள்ளர்த்த நிலையை இப்போது எதிர்க்கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. ஆட்சிக்குத் தேவையான 272 இடங்களைக் கடந்து மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது பாஜக., கூட்டணி! அந்த வகையில் மோடியின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை!