கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு செய்த பணிகளை தொடர்ந்து செய்வோம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது, மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில்,
தேஜ கூட்டணி மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவை ஆட்சியை செய்ய மூன்றாவது முறையாக நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி . கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது… என்று பதிவிட்டுள்ளார்.
பின்னர் பாஜக., தலைமை அலுவலகத்தில் அவர் உரையாற்றிய போது,
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், NDA கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் கிடைத்த வெற்றி; இந்த வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்; அனைவரும் 10 மணி நேரம் வேலை செய்வார்கள், ஆனால் நான் 18 மணி நேரம் உழைக்கிறேன்!
கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது இங்கு வந்துள்ளீர்கள், இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்துள்ளது!
இது 140 கோடி மக்களின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. 10 ஆண்டுகளுக்கு பிறகும் பாஜகவுக்கு 240 எம்பிக்கள் கிடைத்துள்ளனர். ஐஎன்டிஐ கூட்டணியின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட நாம் அதிகம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு தனிநபரிடமும் வறுமையை இல்லாமல் ஆக்குவோம். ஊழலை முற்றிலும் ஒழிப்போம்.
21வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு. விரைவில் உலகின் 3வது பொருளாதார நாடாக உயருவோம். என்று, தில்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் பாஜக., 240 இடங்களில் வென்று அல்லது தனிப்பெரும் கட்சியாக இருந்து உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி இடங்களான 272க்கு 30 இடங்களுக்கும் குறைவாகப் பெற்ற போதிலும், கூட்டணியாக மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து தில்லி, பாஜக., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜக.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியை பாஜக வினர் கொண்டாடினர்.
அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தொண்டர்களிடம் உற்சாகம் குறையாமல் பேசினார். தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்திருப்பதை கண்கலங்கியபடி தெரிவித்தார் மோடி. இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன். தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது தேஜ கூட்டணி மற்றும், பாஜக., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதைக் காட்டுகிறது.அவர்களுக்கு நன்றி.தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி… என்று கண்கலங்கிய படி தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். இந்திய மக்கள் என்மீது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒடிசாவிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திராவில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவிலும் மக்கள் மனதை வென்றுள்ளோம். நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இத்தேர்தல் வெற்றி கொடுக்கிறது என்று கூறினார் பிரதமர் மோடி.
இந்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. தற்போது, பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி 290 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.