அல்-குவைதாவுடன் தொடர்பு: பெங்களூர் மதரஸா பள்ளி ஆசிரியர் கைது

புதுடில்லி:

அல் – குவைதா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த, பெங்களூரைச் சேர்ந்த மதரசா பள்ளி ஆசிரியரை, தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

அல் – குவைதா பயங்கரவாத அமைப்பை இந்தியாவில் துவங்கியவர்களில் ஒருவராகக் கருதப்படும், முகமது ஆசிப்(41) என்பவர், சில மாதங்களுக்கு முன் தில்லியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், ஒடிசா, உ.பி., மாநிலங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். அனைவரும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அல் – குவைதா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த, பெங்களூரில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியரான மௌலானா அன்சார் ஷா என்பவரை, இரு தினங்களுக்கு முன், தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும், 20ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அன்சார் ஷா கைது பற்றி தில்லி போலீசார் கூறியபோது, பெங்களூரில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்சார் ஷாவை, ஆசிப் சந்தித்துள்ளார். அல் – குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார். இதன்பின், ஆசிப் மற்றும் இதர அல் – குவைதா ஆதரவாளர்களுடன், அன்சார் ஷா நட்பை வளர்த்துள்ளார்; இவர்களுக்கு இடையே பண பரிமாற்றமும் நடந்துள்ளது. வலுவான ஆதாரங்கள் கிடைத்ததால், அன்சார் ஷாவை கைது செய்துள்ளோம் என்று கூறினர்.