நண்பர்களே, காங்கிரஸ், தாழ்த்தப்பட்டவர்களின், பிற்பட்டவர்களின், பழங்குடியினத்தவர்களின், அதிகாரங்களைப் பறிக்கும், சதிகாரச் செயலை, பலகாலமாகவே செய்து வருகின்றது.
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று, அப்போது அவர்களின் ஆட்சி இருந்தது. அப்போதிருந்த காங்கிரசின் மத்திய அரசு, மதத்தின் பெயரால், இடஒதுக்கீட்டை அளிக்கும், ஒரு குறிப்பை, ஒரு நோட், அமைச்சரவையில் முன்வைத்தது.
இந்த அமைச்சரவைக் குறிப்பிலே, என்ன கூறப்பட்டிருந்தது தெரியுமா? நமது ஓபிசி சமுதாயத்திற்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது. மண்டல் கமிஷனின் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது.
அந்த இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை வெட்டியெடுத்து, 27 சதவீதத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்தெடுத்து, மதத்தின் பெயரால் கொடுக்கப்படும். வெறும் மூன்றே நாட்களில், 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று, இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்றம், காங்கிரஸ் அரசின் இந்த ஆணையினை, ரத்து செய்தது. இவர்கள் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றார்கள். ஆனால் அங்கும் எந்தப் பயனுமில்லை.
அதன் பிறகு 2014இலே, காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையிலே பதிவிட்டது. அதாவது மதத்தின் பெயரால், இட ஒதுக்கீடு செய்வதற்கு, சட்டம் இயற்றப்பட வேண்டுமானால் சட்டமும் இயற்றுவோமென்றார்கள்.
ஆனால் 2014ஆம் ஆண்டிலே, ஓபிசி சமுதாயம் விழித்துக் கொண்டது. தாழ்த்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டார்கள். பழங்குடியினச்சமூகம் விழித்துக் கொண்டது. அவர்கள் எல்லாம் தீர்மானம் செய்தார்கள், இவர்கள் வந்து இப்படியெல்லாம் செய்தால், நமது வருங்காலத் தலைமுறையினர் நாசமாகிப் போவார்களே!! நம்முடைய கனவுகள் பொடிப்பொடியாகுமே!!
இதன் பிறகு தான், இந்தச் சமூகங்களெல்லாம் ஒன்றிணைந்து, காங்கிரசின் கனவுக்கோட்டைகளைத் தரைமட்டமாக்கினார்கள், அவர்களை ஆட்சியிலிருந்து துரத்தி விட்டார்கள்.
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் உரைகள்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்