திருப்புகழ்க் கதைகள் 163
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
இரவி என வடவை என – பழநி
ஸ்ரீகிருஷ்ண லீலை 3 – தாமோதரன்
கண்ணன் வாழ்ந்த யசோதையின் வீடு எப்போதும் யானை புகுந்த வீடுபோல இருக்கும். அவன் அங்கே பானைகள் உருட்டிப் பாலும் தயிரும் ஓடவைத்தான். அவனைக் கட்டிப் பிடிக்கக் கைகள் போதவில்லை. தட்டிக் கேட்கச் சொற்கள் போதவில்லை. எட்டிப்பிடிக்க ஆளே கிடைக்க வில்லை. எங்கே அவன் என்று தேடிச் சென்றால், உருட்டி வைத்த உரலை நிமிர்த்துப் போட்டுச் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு, மழலைக்குரலால் பாடிக்கொண்டிருப்பான்.
அதனால் யசோதை அவனை உரலில் கட்டி வைத்தாள். தாமோதரன் என்றால் வயிற்றைச் சுற்றி கயிறால் கட்டப்பட்டவன் என்று பொருள். செக்குமாடு போல ஒரே இடத்தில் சுத்துவது அவனுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் தள்ளிப் போகப் பார்த்தான். செல்லும் இடம் எல்லாம் தம் கருமவினை ஒருவனைத் தொடர்வதைப் போல் அவ் உரலும் உருண்டு கொண்டே வந்தது. அவன் வீட்டுக் கொல்லையில் திரண்ட இரண்டு மருத மரங்கள் இருந்தன. அவை, அவன் செல்வதைத் தடுத்தன. வரவை மட்டும் ஏற்றுக் கொண்டன.
இரண்டு மரங்களுக்கும் இடையே இடைவெளி இருந்தது. அதன் மத்தியில் அவன் நடைபயில உரல் சிக்கிக் கொண்டது. தேர் இழுப்பது போல வடங்கொண்டு வலித்தான். நெடுமரங்கள் படுமரங்கள் ஆகி கீழே விழுந்தன. வேரோடு முறித்துக் கொண்டு பாரோடு விழுந்தன. மரத்தின் முறிவும் அவற்றின் சரிவும் பேரிரைச்சலை உண்டு பண்ணின.
காற்று இல்லை; கடிய மழை இல்லை; நேற்று வரை நின்றிருந்த மரங்கள் இன்று இல்லை என்னும் பெருமையை உலகுக்குக் காட்டின. இந்த மருத மரங்களுக்கும் ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் நாரதர் வருகிறார்.
நாரதர் இட்ட சாபம்
நளகூவரன், மணிக்கிரீவன் இருவரும் அளகை நகர்க் காவலன், குபேரனின் அருமை மைந்தர்கள். செல்வம் அவர்களைச் செருக்கில் ஆழ்த்தியது. கிறுக்குப் பிடித்தவர்கள் மதுவின் மயக்கிற்கு உள்ளாயினர்; மாதர்களின் மதர்ப்புக்கு அகப்பட்டவராகி நீரில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
நாரதர் அவ்வழியாக வந்தார். அவரைப் பார்த்ததும் பெண்கள் நாணத்தால் ஓடிப்போயினர். ஆனால் நளகூவரனும் மணிக்கிரீவனும் நாணமின்றி அப்படியே நாரதர் எதிரில் வந்து நின்றனர். இவர்கள் மட்டும் அவர் தந்தை பிரமன் இப்படித் தான் தம்மைப் படைத்து இருக்கிறார் என்பதை நெடுமரமாய் நின்று காட்டிக்கொண்டனர். அது அவர்கள் தன்னை அவமதித்ததாக நாரதர் எடுத்துக் கொண்டார். எனவே அவர்களைக் “கோகுலத்தில் மருத மரங்கள் ஆவீராக” என்று சாபமிட்டார். கதை என்றால் அதற்கு ஒரு முடிவு தேவை; சாபம் என்றால் அதற்கு ஒரு விமோசனமும் தர வேண்டும்; அதுதான் இது, கண்ணன் அருளால் நாரதன் இட்ட சாபம் தீர்ந்து மரங்களாக நின்றவர்கள் தேவர்களாக மாறித் தம் சொந்த நகருக்குத் திரும்பினர்
கோவர்த்தன கிரிதாரி
கோவர்த்தன கிரி அவர்களுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். அங்கே ஆயர்கள் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு சென்று கொண்டிருந்தனர். ”எங்கே போகிறீர்கள்?” என்று கண்ணன் கேட்க, “பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்யச் செல்கிறோம்” என்றனர். ”ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம்; இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது” என்றான் கண்ணன்.
”மழைக்கு வருணன் தலைவன்; அவனுக்கு இந்திரன் தலைவன்; அதனால் அவனை வழிபடுகிறோம்” என்றனர் ஆயர்கள். ”பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம்; செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா” என்று கேட்டனன் கண்ணன். அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்டனர் எந்தத் தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத் தம் பசுக்களை மதித்து வழிபட்டனர்.
இந்திரன் இதனை அறிந்து சினம் மிகக் கொண்டான்; அவர்களை அடக்குவதற்காகக் கடுமையான மழை தொடர்ந்து பெயச் செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாடி வீட்டுக்கு ஓடிவிட முடியாது; அதனால், மழையால் நனைந்தனர்.
‘கண்ணன் இஃது இந்திரன் செயல்’ என்று அறிந்து கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் புகல் அடைந்தனர். கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். கண்ணனை அவன் தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது. இதனையே ஆதிசங்கரர்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸ்ம்ப்ராப்தே சந்நிஹிதேகாலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
என்று பாடுவார். அதாவது – ஏ மூட மனமே, கோவிந்தனை வணங்குவாய். நாம் போகும் காலத்தில் எதுவும் கூடவராது. எனவே கொவிந்தனை வணங்குவாய் – என்பது அதன் பொருளாகும்.
சகடாசுரன் வதம்
குழந்தை கிருஷ்ணன் வளர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு இப்பொழுது மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. அவன் குப்புறப் படுக்க முயன்று கொண்டிருந்தான். தவழவும் முயற்சி செய்தான். ஒரு நாள் அவன் குப்புறப் படுத்துக் கொண்டு தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டதும் யசோதை அளவிலாத மகிழ்ச்சி அடைந்தாள்.
குழந்தையை முதன்முதலாக வீட்டை விட்டு வெளியே கொண்டுவரும் தினத்தை யசோதை கொண்டாட நினைத்தாள். அவள் கோகுலத்தில் உள்ள எல்லாக் கோபியர்களையும் அழைத்தாள். எல்லோரும் யமுனை நதிக்கரையை அடைந்தார்கள். அங்கு மேளதாளத்துடனும் மந்திர கோஷங்களுடனும் கிருஷ்ணனுக்கு மங்கள ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு குழந்தை தூக்கக் கலக்கத்துடனும் அசதியாகவும் இருப்பதை யசோதை பார்த்தாள். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. அதனால் மாடுகள் பூட்டப்படாமல் இருந்த ஒரு வண்டிக்கு அடியில் தொட்டிலை வைத்து குழந்தையைத் தொட்டிலில் கிடத்தினாள். பிறகு வந்தவர்களைக் கவனிக்கும் வேலை அவளுக்கு சரியாக இருந்ததனால் அதை கவனிக்கச் சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் சென்றதும், குழந்தை விழித்தெழுந்து அழ ஆரம்பித்தது. ஆனால் அங்கு இருந்த இரைச்சலில் குழந்தை அழுவது யசோதையின் காதில் கேட்கவில்லை. குழந்தை கோபித்துக் கொண்டு தன் சின்னஞ்சிறு கால்களால் உதைக்க ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம்!
குழந்தை உதைக்க ஆரம்பித்ததும் அந்த வண்டி ஓர் ஆட்டம் ஆடி, பேரிரைச்சலுடன் உடைந்து கீழே விழுந்தது. சக்கரங்கள் அச்சிலிருந்து கழன்று வெளியே வந்தன. வண்டியில் இருந்த பால், தயிர் எல்லாம் கீழே கொட்டின.இதைப் பார்த்துக் கொண்டிருந்த சில சிறுவர்கள் பயந்து யசோதையிடம் ஓடிப் போய் குழந்தை செய்த காரியத்தைச் சொன்னார்கள்.
யசோதையும் மற்றவர்களும் பயந்து வண்டி இருந்த இடத்திற்கு ஓடி வந்தார்கள். வண்டி கீழே விழுந்து உடைந்து நொருங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். தன் குழந்தையை ஏதோ ஆவி பிடித்துக் கொண்டுள்ளது என்றும், அதுதான் வண்டியை உடைத்திருக்க வேண்டும் என்றும் யசோதை நினைத்தாள். ஆனால் குழந்தை உதைக்கத்தான் வண்டி நொறுங்கியது என்று எல்லாச் சிறுவர்களும் சொன்னார்கள்.
உடனே யசோதை சில ப்ரோகிதர்களை அழைத்து, ஆவியை விரட்ட மந்திரங்களை உச்ச்சரிக்கும்படி சொன்னாள். ஆனால் இவையெல்லாம் குழந்தையை ஒன்றும் பாதிக்கவில்லை. அது தன் மோகனச் சிரிப்புடன் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தது. நடந்தது என்னவென்றால் ஓர் அரக்கன் கம்சனின் ஏவுதலின் பேரில் வண்டி உருவம் எடுத்துக் கொண்டு அங்கே இருந்தான்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் கோகுலம் வந்திருந்தான். ஆனால் குழந்தை வடிவத்தில் இருந்த இறைவனுக்கு எல்லா விஷயங்களும் தெரியும். அதனால்தான் ஓர் உதை உதைத்து, அவர் வண்டியையும் அந்த அசுரனையும் அழித்தார். அந்த அசுரனின் பெயர் சகடாசுரன் என்பதாகும்.