spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோக்ஷம்!

திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோக்ஷம்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் 246
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பகர்தற்கு அரிதான – பழநி
கஜேந்திர மோக்ஷம்

கஜேந்திர மோட்சம் பாகவத புராணத்தின் எட்டாவது நூலில் பகவான் விஷ்ணு, முதலையின் பிடியில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையின் அபயக் குரலைக் கேட்டவுடன் நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்ததை விளக்குகிறது. இக்கதையை வியாசரின் மகனான சுகப் பிரம்மம், அத்தினாபுரத்து மன்னர் பரீட்சித்துவிற்கு கூறினார். கஜேந்திர மோட்ச வரலாறானது வைணவ சமயத்தின் சரணாகதி தத்துவத்திற்கு ஓர் உதாரணமாகும்.

கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, திரிகூடமலையில் உள்ள யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்தது. ஒரு நாள் தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கி சென்றது. அப்பொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது.

முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே என பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது. தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த பெருமாள் தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.

இதில் யானையாக கூறப்பட்ட கஜேந்திரன் தனது முற்பிறவில் அரசன் இந்திரதுய்மனாக நாட்டை ஆண்டு வந்தார். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினார். ஆனால் அகந்தை இவர் கண்களை மறைக்க, அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாகப் பிறப்பெடுத்து, பின் இறைவனால் அகந்தை ஆணவம் அழிக்கப்பட்டு, மோட்சம் கிடைக்கப்பெற்றார்.

முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரன், விஷ்ணுவை நோக்கி துதித்த பாடல், கஜேந்திர ஸ்துதியாக போற்றப்படுகிறது. இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் சுலோகம் ஆகும்.

முதலையாக சாபம் பெற்றது ஒரு கந்தர்வன். அவன் பெயர் தேவாலா. ஒரு தேவலா தன் நண்பர்களுடன் ஒரு குளத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அப்பொது முனிவர் ஒருவர் சூரிய நமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக தேவாலா, அவரது கால்களை இழுத்தான். இதில் கோபமடைந்த முனிவர், அவனை முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார்.

தன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார். அதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவியெடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியை கம்பர் ஆரணிய காண்டத்தில், விராதன் வதை படலத்தில் குறிப்பிடுகிறார். விராதன் சீதையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். இரம, இலக்குவர்கள் அவனுடன் போரிட்டு அவனை மாய்க்கிறார்கள். அவன் தேவ வடிவு அடைந்து இராமனைத் துதிக்கிறான். அப்போது,

கடுத்த கராம் கதுவ, நிமிர்
கை எடுத்து, மெய் கலங்கி,
உடுத்த திசை அனைத்தினும் சென்று
ஒலி கொள்ள, உறு துயரால்,
அடுத்த பெருந் தனி மூலத்து
அரும் பரமே! பரமே! என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப,
நீயோ அன்று “ஏன்?” என்றாய்?

என அவன் இராமனைப் பார்த்துச் சொல்லுகிறான். அதாவது – கோபித்த முதலை தன் காலைப் பற்றிக் கொள்ள, கஜேந்திரன் என்னும் ஒரு யானை தனக்கு ஏற்பட்ட மிக்க துன்பத்தால் துதிக்கையை மேலேதூக்கி எடுத்துக் கொண்டு, உடல் தளர்ந்து சூழ்ந்த திக்குகளில் எல்லாம் தான் பிளிரும் ஒலி சென்றடைய, எல்லாப் பொருள்களிலும் சென்று தங்கும் பெருமைமிக்க மூலப் பொருளான அரிய பரம் பொருளே! பரம் பொருளே!, என்றுகுரலெடுத்துக் கூப்பிட, நீ தானே அன்று “ஏன்” எனக்கேட்டு அதன் பக்கம் சென்று துயர் நீக்கிக் காப்பாற்றினாய்?

கஜேந்திர மோட்சத்தின் தத்துவம் என்ன? (1) தன்னைச் சரணென்று அடைந்தவர்களை எந்தச் சூழலிலும் பகவான் காப்பாற்றுவான். (2) ‘சரணடைந்தவர்களின் யோக க்ஷேமத்தைக் காப்பேன்’ என்று பின்னால் கிருஷ்ணாவதாரத்தில் இதைத்தான் சொல்கிறான் பகவான். ஆக, முதலில் செய்துகாட்டி விட்டு பிறகு உபதேசிக்கிறான். (3) நம்முடைய மனம்தான் அந்த ஏரி. அதிலே நற் குணமான யானையும் இருக்கிறது.

தீய குணங்களான முதலைகளும் இருக்கின்றன. அவைதான் எப்போதும், நம்மை தவறை நோக்கிச் செலுத்தி ஆபத்தில் சிக்க வைக்கின்றன. அவற்றில் இருந்து காப்பாற்றப்பட, பகவானை நோக்கி எப்போதும் நம் எண்ணம் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe