spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeலைஃப் ஸ்டைல்தொம்மராஜு குகேஷ் பெற்ற மாபெரும் வெற்றி

தொம்மராஜு குகேஷ் பெற்ற மாபெரும் வெற்றி

- Advertisement -
d gukesh
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டி. குகேஷ் அல்லது தொம்மராஜு குகேஷ் (Dommaraju Gukesh, பிறந்த நாள் 29 மே 2006) இந்திய சதுரங்கப் பேராதன் ஆவார். சதுரங்க மேதையான இவர், வரலாற்றில் பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற மூன்றாவது-இளையவர் ஆவார். அதுமட்டுமல்ல, 2700 என்ற சதுரங்க மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது-இளையவர்; 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவர் ஆவார். குகேஷ் 2024ஆம் ஆண்டின் வேட்பாளர் போட்டியில் (candidates Championship) வென்று, உலக சதுரங்க வாகையாளர் (World Chenns Championship) பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.

          குகேஷ் சென்னையில் 2006 மே 29 அன்று பிறந்தார். இவரது குடும்பத்தினர் ஆந்திரப் பிரதேசம், கோதாவரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த் ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்; தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளர் ஆவார். குகேஷ் தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாலயத்தில் படிக்கிறார்.

          குகேசு 2015ஆம் ஆண்டு 9 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார், 2018இல் 12 அகவைக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார். அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில், 12 வயதிற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில் (U-12 team rapid and blitz, and the U-12 individual classical formats) ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார். மார்ச் 2018 இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டே திறந்த சுற்று பன்னாட்டுப் பேராதன் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.

          குகேஷ் 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய சதுரங்கப் பேராதன் ஆனார். 2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு (Julius Baer Challengers Chess Tour, Gelfand Challenge)  சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், குகேஷ் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை 8/8 என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியை தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேசு 11 க்கு 9 மதிப்பெண்களுடன் முடித்து, முதலாவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

          செப்டெம்பர் 2022 இல், குகேசு முதற்தடவையாக 2700 என்ற தரவுப்புள்ளியைத் (2726) தாண்டி, வெய் யி, அலிரெசா பிரூஜா ஆகியோருக்குப் பிறகு 2700 தரவுப்புள்ளியைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார். அக்டோபர் 2022 இல், ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான மாக்னசு மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளைய வீரர் ஆனார்.

          பெப்ரவரி 2023இல், குகேஷ் தியூசல்டார்ஃபில் நடந்த WR மாசுட்டர்சு போட்டியின் முதல் பதிப்பில் பங்கேற்று, 5½/9 புள்ளிகளுடன், லெவன் அரோனியன், இயன் நெப்போம்னியாச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்தார். சமன்முறியில் அரோனியனுக்கு அடுத்தபடியாக குகேசு வந்தார். ஆகத்து 2023 தரவரிசைப் பட்டியலில், குகேஷ் 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரர் ஆனார்.

          குகேசு சதுரங்க உலகக் கோப்பை 2023 சுற்றில் பங்கேற்று, மாக்னசு கார்ல்சனிடம் தோல்வியடைவதற்கு முன்னர் காலிறுதிக்கு வந்தார். செப்டம்பர் 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு அதிகாரப்பூர்வமாக விசுவநாதன் ஆனந்தை முந்தி முதலிடத்தில் உள்ள இந்திய வீரராக இருந்தார்.

          திசம்பர் 2023இல், 2023 பிடே சர்க்கியூட் சுற்றின் முடிவில் குகேஷ் 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார். குகேஷ் சர்க்யூட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் வெற்றியாளரான பாபியானோ கருவானா ஏற்கனவே 2023 உலகக் கோப்பையின் மூலம் வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். குகேஷ், பாபி ஃபிஷர், மாக்னசு கார்ல்சன் ஆகியோருக்குப் பிறகு, வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரர் ஆனார்.

2024 வேட்பாளர் சுற்றில் “குகேசு எதிர் பிரூசா”

          சனவரி 2024இல், குகேஷ் 2024 டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று, 13 ஆட்டங்களில் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 8.5 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். 12-ஆவது சுற்றில், ர. பிரக்ஞானந்தாவுக்கு எதிராக வெற்றிபெறும் நிலையைப் பெற்றார், ஆனால் மூன்று முறை மீண்டும் மீண்டும் தவறு செய்தார். சமன்முறிகளில் (tie-breakers) குகேசு அரையிறுதியில் அனிஷ் கிரியைத் தோற்கடித்தார், ஆனால் இறுதிப் போட்டியில் வெய் யியிடம் (Wei Yi ) தோற்றார்.

2024 வேட்பாளர் சுற்று

          இந்த வருடம் இந்த ஏப்ரலில், குகேஷ் கனடா, தொராண்டோவில் நடைபெற்ற 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் பங்கேற்றார். குகேஷ், சக நாட்டு வீரர்களான ரமேஷ்பாபு, பிரக்ஞானந்தா, விதித் குசராத்தி ஆகியோருக்கு எதிராகக் கறுப்புக் காய்களுடனும், அலிரேசா பிரூச்சாவுடன் (Alireza Firouzja) வெள்ளைக் காய்களுடனும், நிசாத் அபாசோவுடன் (Nijat Abasov) வெள்ளைக் காய்களுடனும் விளையாடி வெற்றி பெற்றார். பிரூச்சாவுடன் கறுப்புக் காய்களுடன் விளையாடியதே அவரது ஒரே இழப்பு. இது அவருக்கு 5 வெற்றிகள், 1 தோல்வி, 8 சமன்களைக் கொடுத்து, 9/14 என்ற மதிப்பெண்ணுடன், சுற்றை வென்றார். இதன் மூலம், 2024 நவம்பரில் நடக்கும் உலக வாகையாளர் போட்டியில் நடப்பு வாகையாளர் திங் லிரேனுடன் மோதுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் விளையாடும் இளைய வீரர் இவர் ஆவார்.

கேண்டிடேட் செஸ் தொடரின் போக்கு

          உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்றது. 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 71ஆவது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.

          இதன் மூலம் 9 புள்ளிகளுடன் குகேஷ்முதலிடத்தில் இருந்தார். எனினும் அவர்,பட்டம் வெல்வது என்பது ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டத்தின் முடிவை பொறுத்தே இருக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.

          ஏனெனில் இவர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் அவர், 9 புள்ளிகளுடன் முதலிடத்தை குகேஷுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும். இந்த நிலை உருவானால் வெற்றியாளர் யார்? என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்படும்.

          இதனால் நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா ஆட்டம் மிகுந்தபரபரப்பை உருவாக்கியது. குகேஷ் ஆட்டம் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு 15 நிமிடங்கள் வரை நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா மோதிய ஆட்டம் தொடர்ந்தது. பலமுறை ஃபேபியானோ கருனா வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தார்.

          ஆனால், 39-வது காய் நகர்த்தலின் போது அவர், செய்த தவறால் நெபோம்னியாச்சி தனது நிலையை தக்கவைத்தார். இதன் பின்னர் மீண்டும் தனது ஆட்டத்தை கட்டியெழுப்பிய ஃபேபியானோ கருனா வெற்றிக்கு அருகே நெருங்கினார். ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட்டது. முடிவில் ஆட்டம் டிரா ஆனது.

          இதனால், 17 வயதான டி.குகேஷ் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சுமார் ரூ.78.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.

          40 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ள இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார். இந்த வகையில் 1984ஆம் ஆண்டு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தார். தற்போது குகேஷ் தனது 17ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடுவார்.

          கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் குகேஷ், சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இந்த போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

சாதிக்க வித்திட்ட 7ஆவது சுற்று தோல்வி

          கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டி.குகேஷ் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியதாக நான் உணர்ந்தேன், ஆனால் அலிரேசாவுக்கு எதிரான 7ஆவது சுற்றில் தோல்விடைந்த பிறகு, மிகவும் வருத்தப்பட்டேன். அந்த தோல்வி வேதனையாக இருந்து.

          ஆனால் அடுத்த நாள் ஓய்வு இருந்தது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. மேலும் அந்த தோல்வி எனக்கு ஆற்றலையும் உந்துதலையும் கொடுத்தது. தோல்விக்குப் பிறகு சரியானதைச் செய்தால், சரியான மனநிலையில் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று உணர்ந்தேன்.

          ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும் முதலிடத்தை என்னுடன் பகிர்ந்திருப்பார்கள். இதன் பின்னர் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலை உருவாகி இருக்கும்.

          இதனால் டைபிரேக்கர் ஆட்டத்துக்கு தயாராக இருந்தேன். இதுதொடர்பாக எனது பயிற்றுனருடன் ஆலோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் நாங்கள் விவாதிக்கத் தொடங்கிய உடனேயே அது தேவையில்லை என்பதை நாங்கள் அறிந்தோம்.

          உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் பற்றி சிந்திக்க எனக்கு அதிக நேரம் இல்லை. எனினும் அந்த போட்டிக்கு நாங்கள் மேற்கொள்ள உழைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். விஸ்வநாதன் ஆனந்த், என்னை வாழ்த்தினார். அவருடன் பேச எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் விரைவில் அவரை தொடர்பு கொள்வேன்.

          என் பெற்றோரிடம் பேசினேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது பயிற்சியாளர், ஸ்பான்சர் மற்றும் சில நண்பர்களுடன் சிறந்த முறையில் நேரத்தை செலவிட்டேன். நிறைய பாராட்டுகள் குறுந்தகவல்களாக வந்துள்ளன. அவற்றுக்கு பதிலளிக்கவும், எனது நண்பர்களுடன் பேசவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தற்போது சில நாட்கள் ஓய்வெடுக்கப் போகிறேன், கடந்த மூன்று வாரங்களாக போட்டி மிகவும் மன அழுத்தத்தை தந்தது.

ஓய்வுக்கு பின்னர் உலக சாம்பியன்ஷிப் போட்டியைப் பற்றி சிந்திப்பேன், விஷயங்களை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்துத் திட்டமிடுவேன். பொதுவான திட்டம் என்பது சிறந்த ஆட்டத்தை விளையாடுவதில் கவனம் செலுத்துவதுதான். மேலும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு குகேஷ் கூறினார்.

தியாகம் செய்த பெற்றோர்

          செஸ் உலகில் குகேஷ் சிகரங்களை அடைவதற்கு அவரது பெற்றோர் செய்த தியாகங்களும் நினைகூரப்பட வேண்டியது அவசியம். குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தாய் பத்மா நுண்ணுயிரியலாளர் ஆவார்கள். 2017-18ம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது.

          இதனால் ரஜினிகாந்த் தனது பணியை நிறுத்திவிட்டு மகனுடன் பயணிக்கத் தொடங்கினார். இதனால் வீட்டு செலவுகளை அவரது தாய் பத்மா கவனிக்க வேண்டிய நிலை உருவானது. பல நாட்கள் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை கூட இருந்துள்ளது. இவர்களது தியாகங்களின் பலனாக குகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு 12 வயது 17 நாட்கள்.

          இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும் குகேஷின் பயணத்துக்காக சேமித்து வைத்திருந்த மொத்த தொகையையும் அவரது பெற்றோர் செலவழிக்க நேர்ந்தது.

மேற்கொண்டு நிதி தேவைப்பட்ட நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக அதற்கான உதவியும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது. தற்போது உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இளம் சாலஞ்சராக உருவெடுத்துள்ளார்.

பிரதமர் பாராட்டு

          பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை படைத்த டி.குகேஷ் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது. குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அவரது சிறந்த செயல்திறன், வெற்றியை நோக்கிய பயணம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வைஷாலிக்கு 2-வது இடம்

          மகளிருக்கான கேண்டிடேட்ஸ் தொடரில் சீனாவின் ஸோங்ஸி டான் 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, சீனாவின் டிங்ஜேய் லெய் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். கொனேரு ஹம்பி கடைசி சுற்றில் சீனாவின் டிங்ஜேய் லெயையும் ஆர். வைஷாலி, ரஷ்யாவின் கேத்ரினா லக்னோவையும் தோற்கடித்தனர்.

          கேண்டிடேட்ஸ் தொடரில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-வது இடங்களை பிடித்தனர். இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார். அவர், தனது கடைசி சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபசோவை தோற்கடித்தார்.

          மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். விதித் குஜராத்தி தனது கடைசி சுற்றில் பிரான்ஸின் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தார். ஃபிரோஸ்ஜா அலிரேசா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அபசோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe