spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: நக்கீரர்

திருப்புகழ் கதைகள்: நக்கீரர்

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 287
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடி மாமலர்க்குள் – சுவாமி மலை
நக்கீரர் 1

            இத்திருப்புகழில் அருணகிரிநாதர் நக்கீரர் பற்றிய ஒரு குறிப்பினைத் தருகிறார்.

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து

     மலர்வாயி லக்க ணங்க …… ளியல்போதி

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று

     னருளால ளிக்கு கந்த …… பெரியோனே

என்ற வரிகளில் – வளம் பெற்றதும், சொல்லழகு நிரம்பிய நூல்களை இயற்றுவதில் வல்லமையும் உடைய நக்கீரதேவருக்கு மகிழ்ச்சியுற்று, தமிழ் இலக்கணங்களின் இயல்புகளை மலர் போன்ற திருவாக்கால் ஓதுவித்து, அடி, மோனை, சொல் என்னும் யாப்புக்கு இணங்குமாறு,

“உலகம் உவப்ப” என்று தேவரீர் திருவருளால் அடியெடுத்துத் தந்த கந்தப் பெருமானே; பெரியோனே என அருணகிரியார் பாடுகிறார்.

            நக்கீரரின் இயற்பெயர் கீரன் என்பதாகும். பாலப்பன் என்பது இவரது பிள்ளைப் பிராயத்தில் இட்ட பெயர். பிற்காலத்தில் இவர் தமிழ்ச்சங்கத்தின் புலவரானபோது இவரது இளமைக்கால பெயருக்கு ஏற்ப கீரன் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் செங்கீரைப் பருவம் என்ற பருவம் வருவதை இங்கு நினைவு கூறலாம். பின்னாளில் இவரது சிறப்பு கருதி ‘நல்ல’ என்ற பொருள்படும் ‘நற்’ என்ற அடைமொழியும் மரியாதைக்குரிய ‘ஆர்’ விகுதியும் பெயரோடு இணைக்கப்பட்டு நக்கீரனார் என அழைக்கப்பட்டார். இவரது தந்தையார் கணக்காயர் என்பதால் இவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என அழைக்கப்பட்டார். இவரது மகனை கீரங்கொற்றனார் என் அழைத்தனர். இது களவியல் உரையால் அறியப்படுகிறது.

            சங்கத் தமிழிலக்கியங்களை பதிணெண்மேல் கணக்கு என்றும் பதிணெண்கீழ் கணக்கு என்று அழைக்கிறார்கள். தமிழ் எழுத்துக்களின் தொகுதிக்கு நெடுங்கணக்கு என்ற பெயரும் உண்டு. எண்ணும் எழுத்தும் கணக்கென்றாகும் என பிங்கலம் கூறுகிறது. எனவே கணக்காயர் என்றால் தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆய்ந்தவர் எனப் பொருள் கொள்ள வேண்டும். மதுரை கணக்காயனார் என்ற பெயரிலும் எட்டுத்தொகை நூல்களில் சில பாடல்கள் காணக்கிடைக்கின்றன.

            நக்கீரரின் குலம் பற்றி பல கதைகள் உள்ளன. முக்கியமான கதை, நடிகர் திலகம் நடித்த திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற கதை. கொங்குதேர் வாழ்க்கை என்னும் செய்யுளின் பொருள் பற்றி, சொக்கநாதருக்கும் நக்கீரனார்க்கும் வாதம் நிகழ்ந்தபோது,

அங்கம் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்

பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்

கீர்கீரென அறுக்கும் கீரனோ எங்கவியை

ஆராயும் உள்ளத்தவன்.

என சொக்கநாதர் வெகுண்டு கூற அதற்கு எதிராக நக்கீரர்

சங்கறுப்பது எங்கள் குலம் தமிராற்கு ஏது குலம்

பங்கமறச் சொன்னால் பழுதாமே – சங்கை

அரிந்துண்டு வாழ்தும் அரனாரைப் போல

இரந்துண்டு வாழ்வ திலை.

என்ற திருவிளையாடற் புராணக் கதையைச் சொல்லும் பாடல்களால் அறியலாம். கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிருளிய, “முதுமொழி மேல் வைப்பு” என்னும் நூலில் வரும் ஒரு பாடலில் இக்கதை பற்றிய குறிப்பு வருகிறது. அப்பாடல்,

சங்கு அறுக்கும் சாதிசொலும் சங்கரனை, நக்கீரன்

அன்றுபழி சொன்னதுபோல் ஆர்சொல்வார்? — என்றும்

பிறன் பழி கூறுவான், தன் பழி உள்ளும்

திறன் தெரிந்து கூறப்படும்.

            அதாவது – சங்கை அறுக்கின்ற இழிந்த சாதியில் பிறந்தவன் நக்கீரன் என்று பழித்துக் கூறும் சிவபெருமானை. தருமிக்காகச் சிவபெருமான் புலவராகி வந்த அந்நாளில். நக்கீரரைப் பழித்துக் கூறிய சிவபெருமான் மீது நக்கீரர் பழித்துக் கூறியது போல், வேறு யார் சொல்லமுடியும் – என்பதாகும்.

            நக்கீரர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். சங்க காலப் புலவர்கள் பலரும் சைவ சமயத்தவரே. சங்கப் புலவர்களை பொய்யடிமையில்லாத புலவர்கள் எனக் குறிப்பிடுவார்கள். நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில்

தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில்கபிலர்

பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்

அருள்நமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே

பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.

என்ற பாடலில் சங்கப் புலவர்கள் அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக் கவி பல பாடும் புலவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe