திருப்புகழ்க் கதைகள் – பகுதி- 356
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இருப்பவல் திருப்புகழ் – திருத்தணிகை – ஆசுகவி
ஆசு கவி என்பது ஒரு வார்த்தையைக் கொடுத்தால் அதை வைத்து உடனடியாக கவிதையை இயற்றுவது. அப்படிப்பட்ட கவிஞர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் காளமேகப் புலவர். இவரது கவிப் புலமையை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று ஒருத்தர், “நீர் பெரும் கவிஞராமே? அப்படியென்றால் நான் கொடுக்கும் வார்த்தையில் முருகனை பற்றிப் பாட முடியுமா?” என்று கேட்க, புலவரும் பொறுமையுடன் அதற்கென்ன முருகன் அருள் இருந்தால் இயற்றுவேன் என்று கூறி “வார்த்தை” என்னவென்று கேட்க, வந்த வம்பாளர் “செருப்பு” என்ற வார்த்தையில் தொடங்கி “விளக்கமாறு” என்று முடிக்க வேண்டும் என்றாராம். அறிவிற்ச் சிறந்த புலவர்கள் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் சோர்ந்து விடுவார்களா என்ன? எழுதினார்,
‘செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திருத் தாமரை மேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே.‘
இதற்கு பொருள் என்னவென்றால், ‘செரு’ என்றால் போர்க்களம். போர்க்களத்தில் நுழைந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது மனது. குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலரில் அமர்ந்திருக்கும் வண்டே, முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறு (விளக்கி கூறும்படி) உன்னைக் கேட்கிறேன் என்பதாகும். வந்தவர் திகைத்துப் போய் காளமேகப் புலவரின் புலமையை ஒப்புக் கொண்டாராம். இதைப் போலவே மகா கவி பாரதியாரின் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் உண்டு.
எட்டயபுரத்து சமஸ்தானத்தில் காந்திமதி நாதன் என்ற புலவர் இருந்தார்… அப்போதைய புகழ் பெற்ற கவி அவர்தான். பாரதி அப்போது சிறுவனாக இருந்த போதும் சமஸ்தானத்தில் அவரது பாடல்கள் வெகு வேகமாக புகழ் பெற்றிருந்தது.. காந்திமதிநாதனுக்கு பாரதியின் மீது கொஞ்சம் பொறாமை இருந்தது.
அரசரும் பாரதி மீது மிக்க அபிமானம் கொண்டிருந்தார். இதுவும்கூட காந்திமதி நாதனுக்கு பிடிக்கவில்லை அவர் பாரதியை மட்டம் தட்ட காத்திருந்தார். அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது அரசவையில் ஒருநாள் புலவர்களுக்கு ஒரு போட்டி நடந்தது ஈற்றடி (கடைசி வரி) மட்டும் சொல்லி விடுவார்கள் பாடலை அந்த வரியில் முடிக்க வேண்டும்
பாடலை பாடுபவர்களுக்கு வேறொருவர் கடைசி வரி சொல்ல வேண்டும், பாரதிக்கு கடைசி வரி சொல்லும் வாய்ப்பு காந்திமதி நாதனுக்கு கிடைத்தது நல்ல வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பாரா! காந்திமதிநாதன் பாரதியாருக்கு கொடுத்த ஈற்றடி “பாரதிசின்னப்பயல்” அவையில் கொல் என்ற சிரிப்பு.
இதை சிறுவனான பாரதி எப்படி பாட போகிறார் என்று அரசரும் ஆவலுடன் இருக்க, பாரதி பாடினார்;
ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதிநாதனைப்
பாரதி சின்னப்பயல்.
தன்னை விட வயதில் இளையவன் நான் என்ற அகந்தையால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த பெருமையற்ற கருமையான இருள் போல உள்ளங் கொண்ட காந்திமதி நாதனைப் பார் மிகவும் சின்னப்பயல் (பார் + அதி சின்னப்பயல் என்னும் அர்த்தத்தில்) – என்பது பாடலின் விளக்கம்.
அவையினர் கரவொலிக்க காந்திமதிநாதன் அவமானத்தால் குறுகிப் போகிறார்.. இதை கவனித்த பாரதி அவரை மகிழ்வுற வைக்கவும்.. அடடா சிறியவன் நான் பெரியவரை அவமதித்து விட்டோமே என்ற ஒரு சிறு குற்ற உணர்விலும் அந்தப் பாடலை சற்றே மாற்றிப்பாடுகிறார் இப்படி,
ஆண்டில் இளையவனென் றந்தோ அருமையினால்
ஈண்டு இன்றென்னை நீஏந்தினையால் மாண்புற்ற
காராதுபோ லுள்ளத்தான் காந்திமதிநாதற்குப்
பாரதி சின்னப் பயல்.
ஆண்டில் இளையவன் என்ற அருமையினால் ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் மாண்புமிக்க கார் அது போல் உள்ளங்கொண்ட காந்திமதி நாதனுக்கு பாரதி சின்னப் பயல்.( கார் அது போல உள்ளத்தான் = மழை மேகம் போல கருணை மிகவுள்ளவன்). கருணை மிக்க காந்திமதிநாதனுக்கு முன் பாரதியான நான் சின்னப்பயல் என்ற அர்த்தத்தில் பாடியதும் காந்திமதி நாதனே ஓடி வந்து பாரதியை தழுவிக் கொண்டாராம்.