- ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்.
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கெணுமே பிறந்ததில்லை’ என்று பாடிய பாரதியாரின் வரிகளானது தமிழ் மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்றவை.
நம் தமிழ் புலவர்களைப் பற்றி நம் மாநிலம் தாண்டி அங்குள்ள மக்கள் நம்மிடம் கலந்துரையாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடமுடியாது என்பது திண்ணமே. அவ்வாறு, நம் திருவள்ளுவர் பற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பே இக்கட்டுரை.
சில வருடங்களுக்கு முன், நான் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராட்டிய துறவியான சந்த் கஜானன் மஹாராஜ் அவர்களினால் பிரசித்த பெற்ற ஷேகாவ் ( Shegaon) என்னும் திருத்தலத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, ஆனந்த் சாகர் என்னும் ஒரு கார்டன் உள்ளது. அதில் பாரத தேசத்தில் புகழ்பெற்றவர்களின் சிலைகள் ‘ சந்த் மண்டபம்’ என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது. அதில், நம் திருவள்ளுவர் சிலையும் உள்ளதை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது, நான் நாக்பூரில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழில் (‘தி ஹித்வாத்’) பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதனால், நான் ஷேகாவில் பார்த்த நம் திருவள்ளுவரைப் பற்றி ஒரு செய்தியை கொடுத்து திருவள்ளுவர் தினத்தன்று வெளியிடுமாறு கூறினேன். அந்தச் செய்தியும் அந்த நாளிதழில் வெளிவந்தது. .
ஆறு மாதங்கள் சென்றன. அந்த நாளிதழின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த சப்-எடிட்டர், என்னிடம்,” மேடம், நேற்று நம் பிரதமர் உங்கள் செய்தியில் நீங்கள் குறிப்பிட்டு இருந்த தமிழ் புலவர் திருவள்ளுவர் பற்றி கூறினாரே,” என்றார்.
அவர், அதோடு மட்டுமல்லாமல் பிரதமர் ஆற்றிய உரையையும் எனக்கு அனுப்பினார். அதில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அந்த வருடத்திய சுதந்திர உரையில் ‘நீரின்றி அமையாது உலகு’ – என்ற திருக்குறளை மேற்காட்டி மக்களுக்கு தண்ணீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
என் அலுவலக நண்பருக்கு அவரின் ஞாபக சக்தியை பாராடி நான் அவருக்கு நன்றி கூறினேன்.
இதோ இரண்டாவது உதாரணம்:
சமீபத்தில் என் பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியான ‘ப்ராஜெக்ட்’ டிற்காக எங்கள் நகரத்திற்கு அருகில் இருந்த ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்திற்கு சென்றேன். அங்கு என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் அங்கு என்னோடு உரையாடிய ஆசிரியை ‘ நீங்கள் தமிழரா?” என கேட்டவுடன் நானும் “ஆமாம்,” என்றேன். உடனே, அவர் தன் மாணவியர்களை பார்த்து ” நம் மேதகு பாரதப் பிரதமர் தன் உரைகளில் திருக்குறள் சொல்வாரே, அந்த திருக்குறள் பிறந்த மண்ணில் இருந்து தான், இவர் வந்துள்ளார்,” என்று மராட்டி மொழியில் கூறிய போது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
இவ்விரு நிகழ்ச்சிகளும் நம் திருவள்ளுவர் மொழிகளை கடந்து மக்களின் மனதில் நிற்கிறார் என்பதே புலப்படுகிறது.
‘ நித்தம் ஒரு குறள் நெட்டுறு செய்யின் உத்தமனாக உலகினில் வாழ்வாய்,’ என்றும் நம் தமிழில் தான் சொல்லப்பட்டு இருக்கிறது.
நாமும் திருக்குறளை கசடற கற்றும் கற்றப்படி நடக்கவும் திருவள்ளுவர் தினத்தன்று உணர வேண்டிய தருணமிது.
வாழ்க திருக்குறள்!! வாழ்க திருவள்ளுவர்!!!!