
தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் வரும் நவ.22ம் தேதி வெள்ளிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவிற்காக செய்யப்படும் ஏற்பாடுகள் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையும் இடங்களை நேரில் அமைச்சர் ஆர் பி உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்!
அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் விழா குறித்த ஆலோசனைகளை அவர்கள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, கூடுதல் தலைமைச் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்!
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
வரும் 22ஆம் தேதி தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சுமார் 5000 பயனாளிகளுக்கு 75 முதல் 100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்… என்றார்.
மேலும், 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! சீன அதிபர், பாரத பிரதமரை அழைத்து வந்து முதல்வர் பழனிச்சாமி அதிசயங்கள் பல படைக்கிறார்… என்றார்.

தொடர்ந்து, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் மக்கள் நலனுக்காக இணைந்து பணி செய்ய தயாராக இருப்பதாகக் கருத்து தெரிவித்ததற்கு பதிலளித்த அவர், முட்டையும், முட்டையும் சேர்ந்தா அது முட்டை தான், ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால் தான் ரெண்டு! யாரு முட்டை யாரு ரெண்டு என நான் சொல்லவில்லை!
முட்டையும் முட்டையும் சேர்ந்தா அது முட்டை தான்! அத இந்த மொட்டை சொன்னார் எனப் போட்டுக் கொள்ளுங்கள் என்று புதிர் போட்டார்.