சென்னை ராயப்பேட்டை, செல்லப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பைசுதீன்(48). தொழில் அதிபரான இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அண்ணாசாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, கார் ஒன்று அவர்அருகே வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 5 பேர், பைசுதீனிடம் சிறிது நேரம் பேசினர். பின்னர் அவர்களில் ஒருவர்,பைசுதீன் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். அதைத் தொடர்ந்து அந்த கும்பல், அவரை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி கடத்தியது.
அதிர்ச்சி அடைந்த பைசுதீனின் நண்பர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி தனிப்படை காவல்துறையினர் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே சென்று கொண்டிருந்த கடத்தல் காரர்களின் காரை சினிமா பாணியில் விரைந்து மடக்கிப் பிடித்தனர்.
அப்போது கடத்தல்காரர்கள், ஆய்வாளர் மோகன்தாஸ் மீது தாக்குதல் நடத்தினர். இருப்பினும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு பைசுதீனை தனிப்படை காவலர் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை கூறியதாவது: கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது மதுரை நாகூர்தோப்பு கிழக்கு வேலியைச் சேர்ந்த ராஜா உசேன்(48), அவரது மகன்முகமது சைபுல்லா(27), கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்த ரஹ்மதுல்லா(25), ஆரிப்கான் (22), தவ்பிக்(22) என்பது தெரியவந்தது.
தொழிலை விரிவுபடுத்துவதற்காக பைசுதீன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜா உசேனிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதை திருப்பிக் கேட்டபோது, பைசுதீன் கால அவகாசம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராஜா உசேனின் மகன் முகமது சைபுல்லா, பைசுதீன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து அவரை கடத்தி உள்ளனர்.
ராஜா உசேன் மீது 1995-ல் சிந்தாதிரிப்பேட்டையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு உள்ளது. இது சம்பந்தமாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு வாய்தாவுக்கு வந்தவர், கூட்டாளிகளுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு கூறினர்.