
கொரோனாவில் இறந்த நர்ஸ்க்கு நஷ்டஈடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஜூன் 5ல் தமிழகம் முழுவதும் டாக்டர்கள், நர்ஸ்கள் கறுப்பு பேட்ஜ் அணிகின்றனர்.தமிழக அரசு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில், நர்ஸ்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வளர்மதி உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை நர்ஸ் கண்காணிப்பாளர் பிரிசில்லா கொரோனா வார்டில் பணியாற்றி இறந்துள்ளார்.
அவருக்கு அரசு 5 லட்சம் மட்டுமே நிவாரணநிதி வழங்கியுள்ளது.அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டம் தெங்குமராட்டா அரசு சுகாதார மைய டாக்டர் ஜெயமோகன் பணியின் போது நோய் தொற்றினால் இறந்தார்.
தர்மபுரியில் நர்ஸ் குமுதா, கொரோனா வார்டில் பணியாற்றிவிட்டு வரும்போது விபத்துக்குள்ளாகி இறந்தார். அவர்களுக்கும் அரசு மற்ற துறையினருக்கு வழங்கும் நிவாரணநிதி வழங்கவேண்டும்.
மேலும் கொரோனா பாதிப்பிற்குள்ளாகும் டாக்டர்கள், நர்ஸ்களை வீட்டிற்கு அனுப்பாமல், தனி பிளாக் ஏற்படுத்தி சிகிச்சையளிக்க கேட்டுக்கொள்கிறோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 5ம் தேதி தமிழகம் முழுவதும் டாக்டர்கள், நர்ஸ்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் சங்க மாநில துணைத்தலைவர்கள் மணிகண்டன், கீதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை டீன் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.