மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயிலில், கடந்த குடியரசு தினத்தில், ஒன்பதரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 அடி உயர கொடிக் கம்பம் நிறுவப்பட்டது.
அதில், 20 அடி நீள பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று காற்றின் வேகத்தில் தேசியக் கொடி கிழிந்தது. நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை கிழந்த நிலையிலேயே தேசியக் கொடி கம்பத்தில் பறந்தது.
இதுதொடர்பாக, மதுரை ரயில்நிலையம் அருகே இருப்பவர்கள் கூறும்போது, பெரிய அளவிலான தேசியக் கொடி பறப்பதைப் பார்க்கவே நன்றாக இருக்கும். காற்றில் அது ஆடுவதைப் பலரும் நின்று ரசிப்பார்கள். நேற்று மாலை பலத்தக் காற்று வீசியது. அதில் தேசியக் கொடி சேதமடைந்திருக்கலாம்.
தொடர்ந்து இரவு காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், தேசியக் கொடி கிழிந்தது. காலையில் கிழிந்த நிலையில் தேசியக் கொடி கம்பத்தில் பறந்தது. அதை மக்கள் பலரும் கவனித்தவாறே சென்றனர். ஆனால், ரயில் நிலைய அதிகாரிகள் யாரும் கவனிக்கவில்லை.
பின்னர், சிலர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கொடி கிழிந்துள்ளது எனக் கூறினர். அப்போதும், தேசியக் கொடியை அதிகாரிகள் கழற்றவில்லை. மதியம்தான் கொடியைக் கழற்றினர். இரவு, கொடியைப் பார்த்திருக்க மாட்டார்கள் என வைத்துக்கொண்டாலும், காலையில் கொடியைக் கவனித்து கழற்றியிருக்கலாம். மதியம் வரை, தேசியக் கொடி கிழிந்த நிலையில் பறந்தது மனதை காயப்படுத்துவது போல இருந்தது என்றனர்.