தருமபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து, அதைக் காட்டியே மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை வலை வீசித் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியும் தர்மபுரி மாவட்டம் கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்த ராகுல்(19) என்ற இளைஞரும் நண்பர்களாம். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, வகுப்பு முடிந்து தன் கிராமத்துக்குத் திரும்பினார். அவர் வரும் வழியில் மொரப்பூர் அருகே உள்ள கோபிநத்தம்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞர்கள் இருவர், அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அந்தச் சிறுமியை மிரட்டி, அருகில் உள்ள சுடுகாட்டின் மேல்புறத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் அந்தக் காட்சிகளை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், தாங்கள் அழைக்கும் போதெல்லாம் இவ்வாறு வரவேண்டும். இல்லையென்றால் பதிவு செய்த வீடியோக்களை வெளியில் விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்தச் சிறுமி பயந்துள்ளார். தொடர்ந்து மறுநாளும் அந்த 2 இளைஞர்களும் அந்த மாணவியை வழிமறித்து, செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை போட்டுக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் பண ஆசை காட்டி அந்தச் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று மீண்டும் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதை அடுத்து அந்த வீடியோ காட்சிகளை 2 இளைஞர்களும் தங்களின் நண்பர்களான சந்தோஷ்(19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு 17 வயது இளைஞருக்கும் காட்டியுள்ளனர். அதன் பின்னர், இந்த நான்கு இளைஞர்களுடன் கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்த அந்த மாணவியின் நண்பர் ராகுல்(19), போஸ் என்கிற சந்திரபோஷ்(20) ஆகிய 6 பேரும் சேர்ந்து மீண்டும் அந்த மாணவியிடம் வீடியோவைக் காட்டி மிரட்டி ஊரின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அப்போதும் அதனை செல்போனில் வீடியோ படம் எடுத்துள்ளனர். ஆறு பேரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலால், மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் அந்த மாணவியால் எழுந்து நடக்கக் கூட இயலவில்லை. இந்த நிலையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து மாணவி தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து, அங்கே விரைந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து, ஆட்சியரிடம் நடந்த சம்பவங்களை அவர்களும் கூற, உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது. போலீஸாரிடம் அந்தச் சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, இச்சம்பவத்தில் தொடர்புடைய கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவியின் நண்பர் ராகுல்(18), ஆர்.கோவிந்தநத்தம்பட்டியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், சந்தோஷ்(19) என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் தர்மபுரியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரில், ஒரு இளைஞர் போலீஸார் தேடுவதை அறிந்து, தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியை போலிஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.
பள்ளி மாணவியை கற்பழித்து ஆபாச வீடியோ: மிரட்டி மீண்டும் கற்பழித்த 5 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari