
திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் எஸ்.வேல்முருகன் ஜன.29 இன்று காலமானார். அவருக்கு வயது 82.
திருச்சியின் பிரபல மருத்துவராகத் திகழ்ந்தவர் டாக்டர் எஸ். வேல்முருகன். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தண்டலை புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பு ரெட்டியாரின் மகனான இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்தவர். மூத்த ஸ்வயம்சேவகர். முன்னாள் நகர் சங்கசாலக், விசுவ ஹிந்து சேவா சமிதியின் அறங்காவலர், க்ஷேத்ர கார்யவாஹ் எஸ்.ராஜேந்திரன் அவர்களின் மூத்த சகோதரர்.
திருச்சி மாவட்டம் தண்டலை புத்தூர் கிராமத்தில் சுப்புரெட்டியார், பொன்னம்மாள் தம்பதிக்கு 1941 ஆம் ஆண்டு பிறந்தவர். தன் கடின உழைப்பால் மருத்துவப் படிப்பு பயின்று, மும்பையில் மருத்துவ மேற்படிப்பையும் முடித்தார். பின்னர், தான் பிறந்த மண்ணில் சேவை செய்வதற்காக, திருச்சியில் சொந்தமாக ஸ்ரீ அகிலா மருத்துவமனையை நிறுவினார். அது முதல் திருச்சி நகருக்கு பல நவீன மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
சிறுநீரக நோய்கள், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ரத்தப் புற்றுநோய்க்கான ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கான சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகளை திருச்சி நகருக்கு அறிமுகப்படுத்திய பெருமை டாக்டர் எஸ். வேல்முருகனையே சாரும். இதுமட்டுமன்றி இதய நோயால் அவதிப்படுபவருக்கு அறுவை இல்லாத இதய சிகிச்சை ஆகிய External Counter pulsation Ecp என்கிற வெளிப்புற எதிர் துடிப்பு சிகிச்சை முறையை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வந்தார்.
திருச்சியின் பிரபலமான காவேரி மகளிர் கலைக் கல்லூரியின் நிறுவன அறங்காவலராக இருந்தவர். பல்வேறு சமூக சேவைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சமூகத் தொண்டாக பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத்தியும் சிறந்த சேவை செய்து திருச்சி மாநகர மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். தனக்குச் சொந்தமான நிலத்தை திருச்சியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க அமைப்பிற்கு(RSS) கட்டடம் கட்ட இலவசமாக வழங்கியவர்.
அவர் ஜன.29 இன்று அதிகாலை தனது 82 வது வயதில் காலமானார். அன்னாரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்றும், இறுதி ஊர்வலம் திங்கள் காலை 9 மணிக்கு மாம்பழச்சாலை அம்மா மண்டபம் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.