August 2, 2021, 4:13 am
More

  ARTICLE - SECTIONS

  மக்கள்விரோத அரசியல் செய்துவரும் அமைச்சர்கள்: நெறிப்படுத்த வேண்டியது முதல்வரே: எச்சரிக்கும் இந்து முன்னணி!

  மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசியல் செய்து வரும் அமைச்சர்களின் செயல்பாட்டை நெறிப்படுத்த வேண்டும்

  m.k.stalin

  தமிழக அரசுக்கு இது பெருமை அல்ல.. என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

  அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு அரசியலும், அதிகார பதவிகளும் புதிது அல்ல. பல்வேறு பொறுப்புகளில் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்திருக்கிறார். இதனால், அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். மக்களும் திரு. ஸ்டாலின் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

  அதே சமயம், ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், அமைச்சர்களின் செயல்பாடு கட்டுப்பாடற்ற நிலையில் இருப்பதோடு, உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவே மக்கள் கருத இடம் கொடுக்கிறார்கள்.

  நிதி அமைச்சராக உள்ள பி.டி.ஆர். தியாகராஜன், ஈஷா மையத்தின் மீது சேற்றை வாரி இறைத்தார். சட்டவிரோதமாக யார் செயல்பட்டாலும், அதனை சீர் செய்ய நீதித்துறை, அரசாங்க துறைகள் இருக்கின்றன. அதனை விடுத்து ஊடகத்தின் முன் கேவலமான வார்த்தைகளில் பொதுவாழ்வில் மதிக்கப்படும் ஒருவரை அநாகரிகமாக பேசுவது ஏற்புடையது இல்லை.

  அதுபோலவே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, தொடர்ந்து ஆலய சொத்துக்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக வீன் பரப்புரை செய்து வருகிறார். இந்து முன்னணி, ஆலய சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட விவரங்களை ஆதாரபூர்வமாக பல புகார்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு கொடுத்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. உதாரணமாக, சென்னை வடபழநி வேங்கீஸ்வரர் குளம் மீட்க சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் பல ஆண்டுகளாக இம்மியளவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரிகளின் மெத்தனமான போக்கை காட்டுகிறது.

  பத்மா சேஷாத்திரி, மகரிஷி, சிவசங்கர் பாபா போன்றவர்களுடைய பள்ளிகளில் ஆசிரியர்களின் தீய நடத்தை காரணமாக எழுந்த புகார்களை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் யார் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் கடமை உள்ளது. அதே சமயம், இந்த புகார்களை மட்டுமே பயன்படுத்தி அந்த கல்வி நிறுவனங்களையும், அது சார்ந்த இடங்களையும் அரசு எடுத்துக்கொள்ளும் என மிரட்டுவதும், பொது தளத்தில் கேவலமாக சித்தரிப்பதும் தேவையற்றது. இது உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியிருக்கிறது.

  விளம்பரப்படுத்தி புகார் வாங்க வேண்டிய அவசியம் ஏன் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில், காழ்ப்புணர்ச்சி மூலம் நடவடிக்கை எடுக்க முனைகிறதா இந்த அரசு என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.

  இதற்கு முந்தைய திமுக ஆட்சியிலும் சரி, அ.தி.மு.க ஆட்சியிலும் சரி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பட்டியலைக்கூட தர இந்து முன்னணி தயார். இப்போதும்கூட அதுபோல குற்றச்சாட்டுகள் எழுந்ததுதான் வருகிறது. ஆனால், ஒரே மாதிரியான குற்றச்சாட்டில் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கிறதா காவல்துறை என்ற கேள்வி எழுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? இந்த கேள்விக்கு அரசு பதில் கூறியே ஆக வேண்டும்.

  மேலும், திமுக தலைவராக இருந்த திரு. அண்ணாதுரை மீது ஈ.வெ.ரா. போன்றவர்களும், தி.க.வின் தலைவராக இருந்த திரு. ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீது அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரும் பேசிய, எழுதிய குற்றச்சாட்டுகள் இன்றும் நூல்களாக, பதிவுகளாக இருக்கிறது.

  அதுபோல, கடந்த காலத்தில் திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் அநாகரிகமாக பேசிய வீடியோ பதிவுகள் பத்திரிகை செய்திகள் இருக்கின்றன. இவைகள் பொய் என யாரும் கூற முடியாது. இவர்களே இதுபோல் பேசியது தவறு என மன்னிப்பு கேட்டு பதிவுகளை நீக்கிட முகநூல், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு தெரிவித்து விட்டு மக்கள் முன்னிலை இதனை அறிவிக்கலாம். அதைவிடுத்து, அந்த முந்தைய பதிவுகளை எடுத்து சமூக ஊடகங்களில் மேற்கோள் காட்டி பதிவு செய்பவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்து, கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இது தான் திமுக கருத்து சுதந்திரத்திற்கு தரும் மதிப்பா?

  அதுவே, உண்மைக்கு புறம்பாக, அநாகரிகமான முறையில் பாரத பிரதமரையும், இந்து தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் பதிவு செய்தவர்கள் மீது இந்து முன்னணி முதலான இயக்கங்கள் கொடுத்தபோது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை?

  எனவே, பாரபட்சமான முறையில் காவல்துறையும், திமுகவும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரத்தை முடக்க நினைத்தால், அதன் எதிர்வினை மூலம் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

  எனவே, தமிழக முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை திருப்தி செய்யும் வகையில் நல்லாட்சியிலும் நிர்வாகத்திலும் கவனம் செலுத்திட வேண்டும். மேலும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசியல் செய்து வரும் அமைச்சர்களின் செயல்பாட்டை நெறிப்படுத்த வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,336FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-