ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
“உலகில் என்னை யாருமே தூஷிக்கக் கூடாது; எல்லோரும் என்னைப் புகழ வேண்டும்” என்னும் எண்ணம்தான் “லோக வாஸனை” எனப்படும். இந்த லோக வாஸனை ஒருவனுடைய ஆன்மீக வாழ்க்கைக்குத் தடையாகத்தானிருக்கும். ஏனென்றால், ஒருவனது இத்தகைய விருப்பம் உண்மையில் நிறைவேறப் போவதில்லை.
உலகில் நம்மை யாரும் நிந்திக்கக் கூடாது என்ற இச்சை ஒருபோதும் நடைமுறையில் பலன் தராது. ஆகவேதான், அப்பேற்பட்ட இச்சை எவனுக்கு உண்டோ அவனுக்கு லோக வாஸனை இருப்பதனால் அத்யாத்ம சாஸ்திர விஷயத்தில் பிரவ்ருத்தி ஏற்படாது. பகவான் பக்தனுடைய இலட்சணத்தைப் பற்றிச் சொல்லும் போது.
துல்யநிந்தாஸ்துதி:
என்று கூறினார். “யார் உன்னை நிந்தித்தாலும் யார் உன்னைப் புகழ்ந்தாலும் இரண்டிற்கும் நீ விலையே கொடுக்கக் கூடாது. நீ எந்த அத்யாத்ம வாழ்க்கையில் போய்க் கொண்டிருக்கிறாயோ, உன்னுடைய குரு உனக்கு எந்த வழியை உபதேசம் செய்திருக்கிறாரோ அவ்வழியில் செல்ல வேண்டுமே தவிர, இதற்கிடையில் யாருடைய புகழ்ச்சியும் இகழ்ச்சியும் உனக்குத் தேவையில்லை. லோக வாஸனை உனக்கு ஏற்பட்டால் அத்யாத்ம பிரவ்ருத்தியெல்லாம் பின்னுக்குச் சென்று விடும்” என்னும் பொருள்பட பகவான் கூறினார். ஆகவே லோக வாஸனை என்பது இருக்கவே கூடாது.
***
பகவானுடைய அனுக்ரஹத்தைச் சம்பாதிப்பதற்கு முக்கியமான ஸாதனம் பக்தி ஆகும்.. பக்தி இருந்துவிட்டால் பிறகு வேறெந்த யோக்யதையும் ஒருவனுக்குத் தேவையில்லை.. மனிதனுக்கு, பக்தி என்பது மிகவும் அவசியம், பக்தி பல வகையாக சாஸ்திரங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.. பகவத் கதைகளைக் கேட்பது, அவன் புகழ் பாடுவது, அவனை எப்போதும் நினைப்பது, அவனது பாதஸேவை செய்வது, பூஜிப்பது, வணங்குவது, தாஸ்ய பாவத்துடன் ஸேவை செய்வது, நட்போடு பழகுவது, இறுதியில் தன்னையே அர்ப்பணிப்பது ஆகிய இவையெல்லாம் பக்தியின் வகைகள்..
இவற்றில் எந்த விதமான பக்தியை நாம் வளர்த்துக் கொண்டாலும் அது நமக்கு சிரேயஸ்ஸையே தரும்..நமக்கு எந்த விதமான பக்தியும் இல்லை என்றால் அத்தகைய வாழ்க்கை எதற்கும் பயனில்லாத வாழ்க்கை ஆகிவிடும்.. மனிதப் பிறவி என்பது கிடைப்பதற்கு துர்லபமானது என்று எல்லோருக்கும் தெரியும்..
நம்முடைய சென்ற பிறவியில் நாம் செய்த எண்ணற்ற புண்ணிய கர்மாக்களின் விளைவாகத்தான் இப்போது நமக்கு மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது.. அப்படியிருக்கையில், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒருவனுக்கு இருந்தால், பக்தி போன்ற சாதனங்களை ஒருவன் கடைப்பிடித்தல் மிக அவசியமாகும்….
***
நிர்மமோ நிரஹங்கார: மனிதனுக்கு, தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும்கூட “நான் செய்தேன்” என்று அஹங்காரம் வரும். அந்த அஹங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும். “நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள்? எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு எது இஷ்டமோ நான் அதைச் செய்வேன்” என்கிற ஒரு மனோபாவத்தை அஹங்காரம் ஏற்படுத்துகிறது. இத்தகைய மனோபாவம் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாகும். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனைவிட நிறையத் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
எனக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று சொல்பவனைவிடச் சக்தி வாய்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இந்த உண்மையெல்லாம் அஹங்காரம் உள்ளவர்களுக்குத் தெரியாது. மேலும் நாங்கள் செய்கின்ற தீய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று வேறு நினைத்துக் கொள்கிறார்கள். நம்முடைய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைப்பது தவறு. நாமும் நமது தவறான செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆதித்யசந்த்ராவனலோSநிலச்ச
த்யெளர்பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச |
அஹச்ச ராத்ரிச்ச உபே ச ஸந்த்யே
தர்மச்ச ஜானாதி நரஸ்ய வ்ருத்தம் ||
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனிதன் செய்யும் காரியங்களை பஞ்சமஹாபூதங்களான பிருத்வீ, தேஜஸ், ஜலம், வாயு, ஆகாசம், சூரிய சந்திரர்கள், ஸந்தியா காலம், மனதினுள்ளிருக்கும் அந்தர்யாமியான பரமாத்மா – இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் பார்க்கவில்லை என்று சொல்வது முறையா? இத்தகைய பேச்சு நமக்கு வருவதற்கு நம்மிடமுள்ள அஹங்காரம்தான் காரணம். அஹங்காரம்தான் தவறுகள் பல நடப்பதற்கும் காரணம். ஆகவே அஹங்காரம் இருக்கக் கூடாது.