August 2, 2021, 4:21 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: ராவணன் எப்படிப் பட்டவன்?!

  தாரை தனை சுக்ரீவற்கு அளித்தவன் என்பது சரியா? தம்பியாகிய சுக்ரீவனின் மனைவி ருமா என்பவளை வாலி அபகரித்துக்கொண்டான்

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 62
  திருப்புகழில் இராமாயணம்

  – இராவணன் எத்தகையவன்?
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  அருணகிரியார் இராவணனின் புகழ் விளங்க பல திருப்புகழ்ப் பாடல்களில் அவனைப் பர்றிப் பாடியுள்ளார்.

  வீரத் தால்வல ராவண னார்முடி
  போகத் தானொரு வாளியை யேவிய
  மேகத் தேநிக ராகிய மேனியன் …… மருகோனே
  (திருப்புகழ் 481 ஆரத்தோடு அணி – சிதம்பரம்)

  ராவணனார் என்று எவ்வளவு மரியாதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். இதற்குக் காரணம் ராவணன் செய்த அரும்பெரும் செயல்கள். கங்கை நதி, விபூதிப் பச்சை (மூலிகை), பிறை நிலவு ஆகியவற்றை திருமுடியில் சூடியவர் சிவபெருமான்.

  நடராஜரான அவர் இருந்த கயிலாய மலையைத் தன் உள்ளங்கையில் பிடுங்கியவன் அசுரனான ராவணன். இதைச் சொல்லும் திருப்புகழ் வரிகள்:

  நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
  நடநம் பருற்றி ருந்த …… கயிலாய
  நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
  நவதுங் கரத்ந முந்து …… திரடோளுஞ்
  சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
  திறல்செங் கணச்சு தன்றன் …… மருகோனே
  திருப்புகழ் 466 மதவெம் கரி (சிதம்பரம்)

  ராவணன் கயிலை மலையை எடுத்த காட்சியைத் தரும் மற்றொரு திருப்புகழ்,

  வலித்துத் தோள்மலை ராவண னானவன்
  எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
  மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர …… சம்புபாலா
  திருப்புகழ் 485 எலுப்புத் தோல் (சிதம்பரம்)

  என்று பாடுகிறது. சிவபெருமான் இராவணனின் சாம கானத்திற்கு மகிழ்ந்து அவனுக்கு சந்திரஹாசம் என்ற வாளினை அளிக்கிறார். இந்தச் செய்தியை

  thirupugazhkathaikal 1
  thirupugazhkathaikal 1

  அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்
  பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்
  பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் …… திடமாக
  அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
  றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
  றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் …… டவனீடுந்
  தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
  சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
  தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் …… பெரியோனுந்
  திருப்புகழ் 312 கன க்ரவுஞ்சத்தில் (காஞ்சீபுரம்)

  இந்தப்பாடலில் அரக்கன் தசமுகன் அட்ட திக்கஜங்களுடன் சண்டையிட்டு அவன் மார்பில் அந்த கஜங்களில் தந்தங்கள் குத்தியிருந்தது என்ற தகவலும் சொல்லப்படுகிறது. மேலும் இராவணன் மிக அழகானவன் என்பதை

  அரிய மேனி யிலங்கையி ராவணன்
  முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
  அகில மீரெ ழுமுண்டவன் மாமரு …… கண்டரோதும்
  திருப்புகழ் 474 கரிய மேகமெனும் (சிதம்பரம்)

  அதாவது அற்புதமான உடலழகு கொண்டவன் என்று பாராட்டுகிறார். இராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தான் என்ற செய்தியை அருணகிரியார்,

  சான கிகற்புத் தனைச்சு டத்தன
  சோக வனத்திற் சிறைப்ப டுத்திய
  தானை யரக்கற் குலத்த ரத்தனை …… வருமாளச்

  சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
  வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
  தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் …… மருகோனே
  திருப்புகழ் 437 மானை விடத்தை (திருவருணை)

  சீதையின் கற்பு தன்னைச் சுட, தனது அசோக வனத்தில் சிறையில் வைத்த சேனைகளைக் கொண்ட அரக்கனாகிய ராவணனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் இறந்தொழியச் செய்தவனும், சாலையில் இருந்த மரங்களின் புறத்தில் ஒளிந்திருந்து, வன்மை வாய்ந்த வாலியினுடைய மார்பில் அம்பை எய்து, ஒப்பற்ற தாரையை சுக்கிரீவனுக்குக் கொடுத்தவனுமான ராமபிரானின் மருகனே – என்று பாடல் கூறுகிறது.

  அருணகிரியார் எப்படி இராமன் சுக்ரீவனிட்த்தில் தாரையை கொடுத்தார்? தாரை தனை சுக்ரீவற்கு அளித்தவன் என்பது சரியா? தம்பியாகிய சுக்ரீவனின் மனைவி ருமா என்பவளை வாலி அபகரித்துக்கொண்டான் என்பதாலேயே இராமன் வாலியை வதம் செய்தார். அப்படியிருக்க வாலியின் மனைவி தாரையை இராமன் எப்படி சுக்ரீவனுக்குக் கொடுக்க முடியும்?

  நாளைக் காணலாம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,336FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-