December 3, 2021, 7:01 am
More

  திருப்புகழ் கதைகள்: பூதனை வரலாறு!

  அதன் மூலம் விஷம் கொடுத்த பூதனை என்ற அரக்கியாவாள். அவளுடைய இரண்டு விருப்பத்தையும் பகவான் பூர்த்தி

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ்க் கதைகள் 180
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கருவின் உருவாகி – பழநி
  ஓங்கி உலகளந்த உத்தமன் 2

  திரிவிக்கிரமனான திருமால் பூ மண்டலம் முழுவதையும் ஓரடியாலும், சுவர்க்கலோகத்தை ஓரடியாலும் அளந்தார். மூன்றாவது அடிக்கு அணுவளவும் இடமில்லாமற் போயிற்று. பகவான், ‘பலியே! உன் சொல்லை நிறைவேற்றுவாயாக. அசத்தியன் நரகிற் சொல்லுவான். மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்று கேட்க, பலி “தேவசிரேட்டரே! என்னுடைய சொல் பொய்க்காவண்ணம் உமது திருவடியை அடியேனது சென்னியில் வைத்தருள்வீர். நரகத்தை அனுபவிப்பதாயினும் சொன்னதை மாத்திரம் தவற மாட்டேன்” என்றான்.

  அப்போது பிரகலாதர் தோன்றி பெருமானை வணங்கி, “பலி உம்மால் காப்பாற்றத்தக்கவன்” என்றார். பலியின் மனைவியாகிய விந்தியாவலி, “எம்மை என்றும் காக்கவல்லவர் நீரே; உலக பரிபாலன மூர்த்தியாகிய நீர் உமது இயற்கையான கருணையால் காத்தருள்வீர்” என்றாள்.

  பிரமதேவர் “எம்பெருமானே! சர்வ சொத்தையும் உமக்கு சமர்ப்பித்த இந்தப் பலியை விட்டுவிடும். இவன் காக்கத்தக்கவன். அறுகம் புல்லையும் சிறிது நீரையும் கொண்டு பூசித்தவன் உத்தமமான கதியை அடைகின்றான். இந்தப் பலியோ உமக்கு மூன்று உலகங்களையும் கொடுத்தவன். இவனை ஆண்டருள்வீர்” என்றார்.

  பகவான் “அன்புடைய பலியே! நீ சுதல லோகத்தில் சுகமாக இருப்பாயாக; உனது வாசலில் நான் எப்போதும் இருந்து உன்னைக் காப்பாற்றுவேன். உனக்கு நன்மை உண்டாகக் கடவது. இனி வரப்போகிற காவர்ணி மனுவந்திரத்தில் நீ இந்திரனாகப் போகிறாய். நீ எப்போதும் என்னைத் தெரிசித்துக் கொண்டு இருப்பாயாக” என்று அருள் புரிந்தார். பலியை சுதல உலகத்தில் இருத்தி, பகவான் அமரர்கட்கு அமராவதியைக் கொடுத்து, அதிதியை மகிழ்வித்து இந்திரனுக்குத் தம்பியென்னும் முறையில் உபேந்திரனாகி விளங்கினார்.

  “துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
  துலக்க அரிதிரு முருகோனே” —( முடித்த) திருப்புகழ்

  “வடிவுகுறளாகி மாபலியை
  வலியசிறையிட வெளியின் முகடு கிழிபடமுடிய
  வளருமுகில்” — சீர்பாத வகுப்பு.
  …..“படி மாவலிபால்
  மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
  சேவடி நீட்டும் பெருமான்” — கந்தர்அலங்காரம்.

  onam vamana story2
  onam vamana story2

  பூதனை வரலாறு

  வாமனர் யாகசாலைக்கு வரும்போது அவரைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்தியின் மகள் இரத்தினமாலாவுக்கு உள்ளத்தில் – ஐயோ இந்தப் பிள்ளைக்குத் தாயாக இருந்து நான் இவனை அணைத்துத் தாய்ப்பால் அளிக்கும் பாக்கியம் கிடைக்காதா என எண்ணினாள்.

  அதே சமயம் வாமனர் திரிவிக்ரமனாக உருவெடுத்து உலகளந்த பின்னர் பலியின் தலையில் கால் வைத்து அவனை சுதல் லோகத்திற்கு அழுத்தியபோது, இவனுக்கு விஷம் கொடுத்து இவனை நான் கொல்ல மாட்டேனா? என எண்ணினாள்.

  இவளே கிருஷ்ணாவதாரத்தில் பூதனையாக வந்து கிருஷ்ணருக்கு முலைப்பால் கொடுக்க முயன்று, அதன் மூலம் விஷம் கொடுத்த பூதனை என்ற அரக்கியாவாள். அவளுடைய இரண்டு விருப்பத்தையும் பகவான் பூர்த்தி செய்தார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,776FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-