இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச் –
முதல் நாள் – 01 ஜூலை 2022 – பர்மிங்ஹாம், எட்பேஸ்டன்
– K.V. பாலசுப்பிரமணியன்
போன வருடம் கொரானாவால் நின்று போன இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க வேண்டிய ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று இங்கிலாந்தில், பர்மின்காமில், எட்பேஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரொனா காரணமாக இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டனாக விளையாடினார்.
இந்திய அணிக்கு கவாஸ்கர், வெங்சார்க்கர் போன்ற பேட்ஸ்மென்கள் கேப்டனாக இருந்திருக்கிறார்கள்; பிஷன் சிங் பேடி, வெங்கட்ராகவன் போன்ற பவுலர்கள் (ஸ்பின் பவுலர்கள்) அணித்தலைவராக இருந்திருக்கிறார்கள்; கபில்தேவ் வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் அவர் ஒரு ஆல்ரவுண்டர் கேப்டன்; விக்கட்கீப்பர் தோனி கேப்டனாக இருந்திருக்கிறார்; ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாவது இதுவே முதல் முறை.
ரோஹித் ஷர்மா ஆடாததால் ஷுப்மன் கில்லுடன் யார் தொடக்க வீரராக களம் இறங்குவார்கள் எனக் குழப்பம் இருந்தது. அவசரமாக மாயங்க் அகர்வால் இந்தியாவிலிருந்து இதற்காக இங்கிலாந்து சென்றார். இருப்பினும் ராகுல் ட்ராவிடின் முடிவுப்படி சேத்தேஷ்வர் புஜாரா ஷுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக களம் இறங்கினார்.
ஆட்டம் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் மழையால் தாமதமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் ஆட களம் இறங்கிய இந்திய அணியின் ஸ்டார் பேட்டர்கள் வழக்கம்போல் சொதப்பினார்கள். ஒருகட்டத்தில் 98/5 என்று அணியின் ஸ்கோர் இருந்தது.
டெஸ்ட் மேட்ச் வல்லுநர்கள் எனக் கருதப்படும் புஜாரா, ஹனுமான் விஹாரி, உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 98/5 என்ற ஸ்கோரிலிருந்து ஆட்டத்தின் முடிவில் 338/7 என்ற ஸ்கோரில் இன்றைய ஆட்டத்தை முடித்திருக்கிறது.
ரிஷப் பந்த் 146 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரவீந்த்ர ஜதேஜா 83 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். 73 ஓவர்களில் 338 ரன் என்பது ஒரு நல்ல ஸ்கோர். நாளையும் இன்று போல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நாளை ஜதேஜா சதம் அடிப்பாரா எனப் பார்க்கவேண்டும்.