
இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டி – 9.07.2022
– K.V. பாலசுப்பிரமணியன் –
சௌத்தாம்ப்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி எட்டு விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் விளையாட வந்த இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் 148 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. இத்தகைய நிலையில் இன்று பர்மிங்ஹாமில் இரண்டாவது டி20 போட்டி நடந்தது. இங்கிலாந்து அணித் தலைவர் ஜாஸ் பட்லர் டாஸ் வென்று இந்திய அணியை மட்டையாடச் சொன்னார்.
இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள். டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிளீசன் இருவரும் டைமல் மில்ஸ், ரீஸ் டாப்லிக்குப் பதிலாக ஆடினர். 34 ஆண்டுகள் 219 நாள் வயதுடைய வில்லி இங்கிலாந்திற்காக இன்று முதன் முறை ஆடுகிறார். இந்திய அணியில் நான்கு மாற்றங்கள். விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்த்ர ஜதேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்று விளையாடினர். முதல் போட்டியில் வெற்றிபெற்ற அணியில் இருந்து இஷான் கிஷன், தீபக் ஹூடா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று விளையாடவில்லை.
முதலில் ஆடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுடன் கோலி தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்த் தொடக்க வீரராக வந்தார். ரோஹித்தும் (20 பந்துகள், 31 ரன்) பந்த்தும் (15 பந்துகள், 26 ரன்) தடாலடி தொடக்கம் தந்தனர். விராட் கோலி மூன்று பந்துகள் விளையாடி 1 ரன் எடுத்தார்.
அதன் பின்னர் விளையாட வந்த சூர்யகுமார் யாதவ் (11 பந்துகள் 15 ரன்), ஹார்திக் பாண்ட்யா (15 பந்துகள் 12 ரன்), தினேஷ் கார்த்திக் (17 பந்துகள் 12 ரன்), ஹர்ஷல் படேல் (6 பந்துகள் 13 ரன்) வழக்கமான அதிரடி ஆட்டம் ஆடவில்லை. ஆனால் ஜதேஜா (29 பந்துகள், 46 ரன்) சிறப்பாக விளையாடினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 170 ரன் எடுத்திருந்தது. ரிச்சர்ட் கிளீசன் 3 விக்கட்டுகளையும் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் ஆடவந்த இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவர் முதல் பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் புவனேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் பட்லர் ஆட்டமிழந்தார். மொயின் அலி (21 பந்துகள், 31 ரன்), டேவிட் வில்லி (22 பந்துகள், 33 ரன்) ஆகிய இருவரைத்தவிர அனைத்து பேட்டர்களும் சொதப்பினார்கள்.
புவனேஷ் குமார் 3 விக்கட், பும்ரா, சாஹல் தலா 2 விக்கட், ஹார்திக் பாண்ட்யா, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட் எடுத்தனர். 17 ஓவருக்குள் இங்கிலாந்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 121 ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இத்துடன் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது.