
- K.V. பாலசுப்பிரமணியன்
இந்தியா இங்கிலாந்து மூன்றாவது, இறுதி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் – பந்த், பாண்ட்யா அபார ஆட்டம்
17 ஜூலை 2022 ஞாயிறு அன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை (45.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 259 ரன், ஜாஸ் பட்லர் 60, ஜேசன் ராய் 41, மொயின் அலி 34, ஓவர்டன் 32, ஹார்திக் பாண்ட்யா 4/24, சாஹல் 3/60) இந்திய அணி ( 42.1 ஓவரில் 261/5, பந்த் 125 ஆட்டமிழக்கவில்லை, பாண்ட்யா 71, டாப்லீ 3/35) ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இங்கிலாந்து அணியை மட்டையாடச் சொன்னார். அதன் பலனை இரண்டாவது ஓவரில் இந்திய அணி பெற்றது. ஷமி பந்து வீச்சில் ஜானி பெயர்ஸ்டோ, ஜோ ரூட் இருவரும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ராய் (41), பென் ஸ்டோக்ஸ் (27), பட்லர் (60), மொயின் அலி (34), லிவிங்ஸ்டோன் (27), ஓவர்டன் (32) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது.
ஹார்திக் பாண்ட்யா (24 ரன்னுக்கு 4 விக்கட்), சாஹல் (60 ரன்னுக்கு 3 விக்கட்), ஷமி (66 ரன்னுக்கு 2 விக்கட்) எடுத்தனர். பின்னர் ஆடவந்த இந்திய அணியின் முதல் நாலு பேட்டர்களும் வழக்கம்போல் சொதப்பினர். தவான் (ஓரு ரன்), ரோஹித் ஷர்மா (17 ரன்), விராட் கோலி (17 ரன்), சூர்யகுமார் யாதவ் (16) ரன் என ஆட்டமிழந்து வெளியேறினர்.
இக்கட்டான நிலையில் ரிஷப் பந்தும் (125 ரன் ஆட்டமிழக்காமல்) ஹார்திக் பாண்ட்யாவும் (71 ரன்) நிலைத்து ஆடி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். அதிலும் குறிப்பாக 42ஆவது ஓவர் ஆரம்பிக்கும்போது இந்திய அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது.
ரிஷப் பந்த் அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் ஐந்து பவுண்டரிகளை வரிசையாக அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஹார்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.