
- கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் இரண்டாவது டி20 போட்டி – 01 ஆகஸ்டு 2022
எளிதாகப் பெறவேண்டிய வெற்றியை கஷ்டப்பட்டுப் பெற்ற மே.இ. தீவுகள் அணி
மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள பாசட்டரேவில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை (19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆலவுட், ஹார்திக் பாண்ட்யா 31, ஜதேஜா 27, ரிஷப் பந்த் 24, ஒபட் மெகாய் 6/17) மே.இ.தீவுகள் அணி (19.2 ஓவரில் 141/5, பிராண்டன் கிங் 68, தாமஸ் ஆட்டமிழக்காமல் 31) ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
மேட்ச் தொடங்க மிகவும் தாமதமானது. காரணம் கிரிக்கட் வீரர்களின் விளையாட்டுப் பொருள்கள் கொண்ட பைகள் மைதானத்திற்கு வரவில்லை. திரினிடாடில் இருந்து இந்தப் பைகள் விமானம் மூலம் வரத் தாமதம் ஆயிற்று. எளிதில் வெல்லக்கூடிய ஒரு மேட்சை மே.இ.தீவுகள் அணி கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்றது.
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதல் பந்திலேயே ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். பவர் ப்ளே முடிவில் மூன்று விக்கட்டுகளை இழந்து இந்திய அணி 56 ரன்கள் எடுத்திருந்தது. ஏழாவது ஓவரில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். எனவே பாண்ட்யாவும் ஜதேஜாவும் நிதானமாக ஆடத்தொடங்கினர்.
19ஆவது ஓவரில் மெகாய் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். கார்த்திக் (7 ரன்), அஷ்வின் (10 ரன்), புவனேஷ் குமார் (1 ரன்) மூவரும் அந்த ஓவரில் ஆட்டமிழந்தனர். எனவே ரன் ரேட்டை அதிகப்படுத்த முடியாமல் போனது.
இந்திய அணி 19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மே.இ. தீவுகள் அணி முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினர். பவர்ப்ளே முடிவில் அந்த அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 52 ரன் எடுத்திருந்தது. அப்போது ரன் ரேட் 7.42. இதன் பின்னர் 17 ஓவர் முடியும்போது மே.இ. தீவுகள் அணியின் ரன்ரேட் 6.58ஆகக் குறைந்தது.
அதன் பின்னர் தேவன் தாமசின் அதிரடி ஆட்டத்தால் அணி வெற்றியைப் பெற்றது. மே.இ. தீவுகள் அணியின் ஒபட் மெகாய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.