உலகக் கோப்பை டி20 போட்டிகள் – ஆறாம் நாள் – 21 .10. 2022
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று டாஸ்மேனியா ஹோபர்ட் மைதானத்தில் இரண்டு குரூப் B பிரிவு ஆட்டங்கள் நடந்தன, முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள், அயர்லாந்து அணிகள் மோதின; இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, ஜிம்பாபே அணிகள் விளையாடின. இந்த ஆட்டங்களுக்கு முன்னர் நான்கு அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றிருந்தன. எனவே இன்றைய ஆட்டங்களில் எந்த இரண்டு அணிகள் வெற்றி பெறுகின்றனவோ அவை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
முதல் ஆட்டம்: மேற்கு இந்தியத் தீவுகள்-அயர்லாந்து
மேற்கு இந்தியத்தீவுகள் அணி (146/5, ப்ராண்டன் கிங் 62, சார்லஸ் 24, டிலானி 3/16) அயர்லாந்து அணியிடம் (17.3 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 150 ரன், பால் ஸ்டிர்லிங் 66, ஆண்டி 37, டக்கர் 45*) 9 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்று முதலில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் (1 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சார்லஸ் (24 ரன்), லிவிஸ் (13 ரன்), நிக்கோலஸ் பூரன் (13), போவல் (6 ரன்) ஓடியன் ஸ்மித் (19 ரன்) ஆகியோருடன் இணைந்து பிராண்டன் கிங் (62 ரன்) அணியின் ஸ்கோரை 20 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 146க்கு உயர்த்தினார்.
அடுத்து ஆடவந்த அயர்லாந்து அணி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. மேற்கு இந்தியத் தீவு அணியின் வேகப் பந்து வீச்சாளர்களை எளிதில் சமாளித்து 17.3 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெர்றனர். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாம்பியன்ஷிப்பிலிருந்து வெளியேறியது.
இரண்டாவது ஆட்டம்: ஜிம்பாபே-அயர்லாந்து
ஸ்காட்லாந்து அணி (132/6, முன்சி 54, மெக்லியாட் 25, ரிச்சர்ட் 2/28, சாடாரா 2/14) ஜிம்பாபே அணியிடம் (18.3 ஓவரில் 5 விக்கட் இழப்பிற்கு 133 ரன், எர்வின் 58, சிக்கந்தர் ராசா 40) தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர் ஜியார்ஜ் முன்சி நன்றாக விளையாடினார். மைக்கேல் ஜோன்ஸ் (4 ரன்), கிராஸ் (1 ரன்) இருவரும் சரியாக விளையாடவில்லை. பெர்ரிங்டன் (13 ரன்), மெக்லியாட் (25 ரன்), லீஸ்க் (12 ரன்) முன்சிக்கு துணையிருந்தனர். இருப்பினும் 6.6 என்ற ரன்ரேட்டில் மட்டுமே ரன் சேர்க்க முடிந்தது. அதனால் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 132 ரன் எடுத்திருந்தது.
பின்னர் ஆடிய ஜிம்பாபே அணியில் சகப்வா (4 ரன்), வெஸ்லீ (ரன் எதுவும் எடுக்கவில்லை), சீயன் வில்லியம்ஸ் (7 ரன்) என சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் அந்த அணி 18.3 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 133 ரன் எடுத்து எளிதில் வெற்றிபெற்றது.
அடுத்த சுற்றுக்கு ஜிம்பாபே அணியும் (ரேங்க் 1) அயர்லாந்து அணியும் (ரேங்க் 2) முன்னேறின.
சூப்பர் 12 சுற்றில் குரூப் 1இல் இருக்கும் அணிகள் – ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை. குரூப் 2இல் இருக்கும் அணிகள் – வங்கதேசம், இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாபே.
நாளை 22.10.2022 சூப்பர் 12 ஆட்டங்கள் தொடங்குகின்றன. குரூப் 1இல் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே சிட்னியில் நடைபெறும். இரண்டாவது ஆட்டம் ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பெர்த்தில் நடைபெறும்.