
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐந்தாவது போட்டி – 05 டிசம்பர் 2022 – ஜப்பான் vs குரேஷியா – குரேஷியா 3-1 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட்டில் வென்றது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் ஜப்பான் – குரோஷியா முழு ஆட்ட நேரம் முடிவு வரை தலா 1 கோல்களுடன் சமநிலையில் இருந்தன. எனவே கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல்கள் அடிக்க தவறின. இதனால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டதில் குரோஷியா வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே கோல் அடிப்பதற்காக கடுமையான போராடின. போட்டி போட்டுக்கொண்டு இரு அணி வீரர்களும் விளையாடி வந்த நிலையில், 43வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டெயசன் மேடா முதல் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் ஜப்பான் அணி தனது ஆதிக்கத்தை தொடரத் தவறியது. இதனால் 55வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. இந்த கோலை அந்நாட்டு வீரர் இவான் பெரிசிக் அடித்தார்.
ஜப்பான் வீரர்கள் பெனால்டி வாய்ப்பில் அடித்த மூன்று கோல்களை சரியாக தடுத்து ஆட்டத்தின் நாயகனாக ஜொலித்தார் குரோஷியா அணி கோல்கீப்பர் டோமினிக் லிவாகோவிக்.
ஆறாவது போட்டி – 05 டிசம்பர் 2022 – பிரேசில் vs தென் கொரியா – பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பிரேசில், தென் கொரியா அணிகள் மோதிய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது. கால் காயத்தால் விளையாடாமல் இருந்த நெய்மர் இந்த ஆட்டத்தில் ஆடினார்; ஒரு கோலும் அடித்தார். உலகக்கோப்பை போட்டிகளில் அவர் அடித்துள்ள 13ஆவது கோல் இது.
ஏழாவது போட்டி – 05 டிசம்பர் 2022 – மொராக்கோ vs ஸ்பெயின் – மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட்டில் வென்றது.
ஸ்பெயின் இந்த ஆட்டத்தில் தோற்றது என்பது இந்டப் போட்டியின் நம்ப முடியாத விஷயம். இத்தாலி, ஜெர்மனி அணிகளுக்குப் பின்னர் ஒரு முக்கியமான அணி வெளியேறி உள்ளது.
ஸ்பெயின் அணி லீக் சுற்றில் ஜப்பான் உடனான தோல்வி அந்த அணியில் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதையே காட்டியது. ஆனால், அந்த அணி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
போட்டியில் 90 நிமிடங்களிலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஸ்பெயினின் டிக்கி-டாக்கா ஸ்டைலில் அடிக்கப்படும் ஷார்ட் பாஸ்களையும் பார்க்க முடியவில்லை. மொராக்கோ வலுவாக டிஃபன்ஸ் செய்தது மட்டுமின்றி கொஞ்சம் கவுன்ட்டர் அட்டாக்கிங்கிலும் கவனம் செலுத்தியது.
இருப்பினும் 90 நிமிடங்களை தாண்டி கூடுதலாக அளிக்கப்பட்ட 30 நிமிடங்களிலும் கோல் அடிக்கப்படவில்லை. கடைசியில் பெனால்டி ஷூட்-அவுட் நடைபெற்றது. இதுவே வெற்றியை தீர்மானிக்கும் விஷயமாக மாறியது. மொராக்கோ அணியின் கீப்பர் பொனுவா, ஸ்பெயின் அணியின் கீப்பர் சைமன் தயாராகினர். முதல் கோல் மொராக்கோ அணியின் சபிரி அடித்து 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
அடுத்து ஸ்பெயினின் பாப்லோ சராபியா அடித்த கோல் தடுக்கப்பட்டது. பின்னர் மொராக்கோவின் ஹகிம் ஸியெச் மற்றொரு கோலை கச்சிதமாக அடித்தார். பின்னர் ஸ்பெயினின் கார்லோஸ் சோலர் அடித்த கோலும் தடுக்கப்பட்டு விட்டது. இதனால் 2-0 என மொராக்கோ முன்னிலை பெற்றது. அடுத்து அடிக்கப்பட்ட மொராக்கோ (பனுவுனே), ஸ்பெயின் (செர்ஜியோ புஸ்கட்ஸ்) அணிகளின் கோல்கள் தடுக்கப்பட்டதால் 2-0 என்ற நிலையே தொடர்ந்தது.
இன்னும் ஒரு கோல் அடித்தால் மொராக்கோ வெற்றி பெற்று விடும் என்ற நிலை வந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பின் உச்சிக்கே சென்றது. மொராக்கோ அணி சார்பில் அச்ரஃப் ஹகிமி வந்தார். 24 வயதாகும் ரைட் பேக். கோல் கீப்பரை ஏமாற்றி நேராக லைட்டான ஒரு ஷாட்டை அடித்து கோல் ஆக்கிவிட்டார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல்முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது மொராக்கோ அணி.
எட்டாவது போட்டி – 06 டிசம்பர் 2022 – போர்ச்சுகல் vs சுவிட்சர்லாந்து – போர்ச்சுகல் 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
போர்ச்சுகலின் பிரபலமான விளையாட்டு வீரர் ரொனால்டோ இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக இந்த ஆட்டத்தில் ஆடிய புதிய வீரர் கொங்காலோ ராமோஸ் ஹாட்ரிக் கோல்கள் அடித்து சாதனை புரிந்தார்.
ராமொஸ் 17ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தார். பின்னர் 51ஆவது மற்றும் 67ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தார். ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மாற்று வீரராக களம் இறங்கினார். ஆனால் பொர்ச்சுகல் அணி ரொனால்டோவின் பங்கு இல்லாமல் சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
காலிறுதியில் போட்டியிடும் அணிகள்
காலிறுதி ஆட்டங்களில் பங்கேற்கத் தகுதிபெற்ற அணிகள் :
- குரேஷியா-பிரேசில் – முதல் காலிறுதி ஆட்டம் – 9 டிசம்பர்
- நெதர்லாந்து-அர்ஜண்டைனா – இரண்டாவது காலிறுதி ஆட்டம்- 9 டிசம்பர்
- மொராக்கோ-போர்ச்சுகள் – மூன்றாவது காலிறுதி ஆட்டம் – 10 டிசம்பர்
- இங்கிலாந்து-பிரான்ஸ் – நான்காவது காலிறுதி ஆட்டம் – 10 டிசம்பர்