பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து மழைக்காலம் வரும் போது, இந்தப் பள்ளங்களில் நீர் நிரம்பி அதுவே கூட உயிர்ப்பலியை வாங்கக் கூடும் என்று பொதுமக்கள் பரவலாக குறை கூறுகின்றனர்.

கரூர்:

கரூர் அருகே வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலை மதிப்புள்ள கல் கிடைப்பதாக வந்த தகவலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கற்களைத் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில், கடவூர், கிருஷ்ணராயபுரம், தான்தோன்றிமலை ஒன்றியப் பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சைக்கல் எனப்படும் மரகதக் கற்கள் மற்றும் செவ்வந்திக் கல் ஆகியவை ஆங்காங்கே பரவலாகக் கிடைக்கின்றன. இந்தக் கற்கள் அவற்றின் தூய தன்மை அளவைப் பொறுத்து, லட்ச ரூபாய் வரை விலை போகும்.

முன்பெல்லாம் மழை பெய்து கோடை உழவு செய்த நிலங்களின் மேற்பரப்பில் ஆங்காங்கே சிறிய அளவில் இந்த வகையான கற்கள் கிடைக்கும் என்பார்கள். இதைப் பலரும் சாதாரணமாக நடந்து கொண்டே உன்னிப்பாக கவனித்து எடுத்து விடுவார்கள்.

அண்மைக் காலங்களில் சிலர் ஒன்றாகச் சேர்ந்து குழுவாக மானாவாரி நிலங்கள், தோட்டங்களில் அவற்றின் உரிமையாளரின் அனுமதியுடன் கிணறு போல் ஆழமாகத் தோண்டி அவற்றில் இருந்து இந்த அரிய வகை கற்களை எடுத்து விற்று வருகின்றனர்.

இதை அறிந்த வெளியூர் வணிகர்களும், இந்தப் பகுதிக்கு வந்து நிலத்தின் உரிமையாளருக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பல்வேறு இடங்களில் ஆழமாகவும், அகலமாகவும் தோண்டி இக்கற்களை எடுக்கின்றனர். சிலரோ லட்சக்கணக்கில் செலவு செய்தும் கற்கள் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். இப்படி, மரகத, செவ்வந்திக் கற்களுக்காக பள்ளம் தோண்டும்போது, வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர்க்காரர்களுக்கும் பிரச்னை ஏற்படும். இதனால் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டு, ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது 200 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட வெள்ளியணை பெரிய குளத்தில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அரசின் அனுமதியுடன் விவசாயிகள் சௌடு மண் எடுத்துச் செல்வதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பள்ளங்களில் பச்சைக் கல் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல் பரவியதால் அப்பகுதியினர் கும்பல் கும்பலாக அந்தப் பகுதிக்குச் சென்று, சில நாள்களாக கடப்பாரை, மண் வெட்டி ஆகியவற்றுடன் குளத்தில் பள்ளம் தோண்டி வருகின்றனர்.

இவர்களில் சிலர் பச்சைக் கற்களை எடுத்துவிட்டதாகக் கூறியதால், தங்களுக்கும் அதுபோன்று கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பலரும் குளத்தில் பள்ளம் தோண்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து மழைக்காலம் வரும் போது, இந்தப் பள்ளங்களில் நீர் நிரம்பி அதுவே கூட உயிர்ப்பலியை வாங்கக் கூடும் என்று பொதுமக்கள் பரவலாக குறை கூறுகின்றனர்.

செய்தி: கே.சி.சாமி

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: