வீர வாஞ்சிநாதன் 135வது பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
tenkasi collector hanour vanchi statue - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின்135 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரை உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்ற நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், முக்கியப் பங்கு வகித்தவர் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன். இவர், அன்றைய திருநெல்வேலி மாவட்ட சப் கலெக்டர் ஆஷ், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொடூரமான முறையில் நடத்தி, சுதேசிக் கப்பல் விட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளையை சிறையில் சித்ரவதை செய்தார். இதனால், திருநெல்வேலி பகுதி இளைஞர்கள் கொந்தளித்தனர். பாரதமாதா சங்கம் என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்பட்ட அவர்கள், இதற்கு பழி வாங்க எண்ணினர்.

அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த இளைஞன் வாஞ்சிநாதன், கலெக்டர் ஆஷை சுட்டுக் கொல்ல திட்டமிட்டு, மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வைத்து, சுட்டுக் கொன்றார். பின்னர், தாம் போலீஸாரிடம் பிடிபட்டு விடக் கூடாது என்று தன்னைத் தானே சுட்டுக் கொன்று உயிர் துறந்தார்.

அவரது உயிர்த்தாகமும் வீரச் செயலும், அன்றைய இங்கிலாந்து பார்லிமெண்டில் எதிரொலித்தது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிப் பொறுப்புகளில் இருக்க அச்சம் கொண்டனர்.

இவ்வாறு, சுதந்திர தாகத்தை மக்களிடம் மேலும் ஏற்படுத்திய சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு அவரது சொந்த ஊரான இன்றைய தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மணி மண்டபமும் திருவுருவச் சிலையும் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு, வாஞ்சிநாதனின் பிறந்த நாள் , நினைவு நாட்களின் போது, அரசு சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செய்வது வழக்கம்.

அந்த வகையில், வீரவாஞ்சியின் 135 வது பிறந்த நாளான இன்று மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வாஞ்சியின் மணி மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள அவரது அரை உருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.