சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுப்போச்சு: காட்டமாக விமர்சித்த ராமதாஸ்

சற்றுமுன் சென்னை தமிழகம்

“ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தை சட்டப் பேரவையில் திறந்திருப்பதால் சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுவிட்டது” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பாமக., ஒருங்கிணைந்த மாவட்ட  பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக ஈரோட்டிற்கு வந்திருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  “சட்டப் பேரவையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் பலரும் சொல்லிவந்தனர். இந்த நிலையில்  அவசர அவசரமாகப் பேரவைத் தலைவர், ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தைத் திறந்திருக்கிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக  இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹார சிறையில்தான் இருந்திருப்பார். அப்படி ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறந்திருப்பது கண்டிக்கத் தக்கது

சட்டப்பேரவையில் காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர் போன்றவர்களின் 10 படங்களை ஏற்கெனவே திறந்திருக்கிறார்கள்.

பொதுவாக குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது வெளிமாநில  ஆளுநரைக் கொண்டுதான் இத்தகைய படங்கள் திறக்கப்படுவது வழக்கம்.  அப்படியிருக்க சட்டப்பேரவைத் தலைவர், ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாகத் திறந்திருக்கிறார். இதனால், சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது.

காந்தி, அம்பேத்கர் ஆகிய  தலைவர்களுக்கு மத்தியில் ஜெயலலிதா படம் இருப்பது அந்தத் தலைவர்களை அவமதிக்கும் செயல். உடனடியாக ஜெயலலிதா படத்தை அகற்றவேண்டும். இல்லையென்றால், மற்ற தலைவர்களின் உருவப் படங்கள் சட்டப் பேரவையில் இருக்கக் கூடாது” என்று காட்டமாக விமர்சித்தார் ராமதாஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.