ஆர்.எஸ்.எஸ்., + இந்திய ராணுவம்: என்ன சொன்னார் மோகன் பாகவத்?

Published:

புது தில்லி:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினார், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் என்று அரசியல் மட்டத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவத்துடன் தங்களது அமைப்பை ஒப்பிட்டு பேசியதாக ஒரு அர்த்தத்தைக் கற்பித்து, மோகன் பாகவத்திற்கு தனது கடுமையான கண்டங்களைத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அவர் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோகன் பாகவத் என்ன சொன்னார்?

பீகார் மாநிலம் முஜாஃபர்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மோகன் பாகவத், “ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களான நாம் ஒரு ராணுவ அமைப்பு கிடையாது. ஆனால், ராணுவத்தில் இருக்கும் கட்டுக்கோப்பும் உறுதியும் நம்மிடம் இருக்கிறது. நாட்டிற்கு தேவை ஏற்பட்டால், நாட்டின் அரசியலமைப்பும், சட்டங்களும் கேட்டுக்கொண்டால், வீரர்களை தயார்படுத்த பொதுவாக ஆறு அல்லது ஏழு மாத காலம் பிடிக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நாம் மூன்றே நாட்களில் தயார் செய்துவிட முடியும். இது நமது திறமை” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் குறித்து பெருமிதமாகக் கூறினார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

பொதுவாக, நாட்டில் ஏற்படும் புயல், பூகம்ப்பம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளாகட்டும், வறட்சி பஞ்சம் போன்ற நெருக்கடிக் காலங்களாகட்டும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து ராணுவம் மற்றும் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து, மக்களுக்கான சேவைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது வழக்கம்.

1961- 1962 இந்தோ சீன இமயப் பகுதி எல்லைப் பிரச்னையில் இந்திய ராணுவத்தை தயார் செய்வதற்கே வாய்ப்பு அளிக்காமல், சீன ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. அதற்கு, அப்போதைய பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, சீனாவின் மீது வைத்த நட்புறவு நம்பிக்கையின் அடிப்பையிலான மெத்தனமே காரணமாக அமைந்தது. ஆனால், அந்தப் போரின் போது, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ராணுவத்துக்கு பேருதவி புரிந்தனர். அதன் அடிப்படையில் தான் 1963 ஆம் வருட குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முழு சீருடை அணிந்து பரேடில் கலந்து கொள்ள நேரு அனுமதி அளித்தார். அதன் பின்னர் 1965ல் நடைபெற்ற போரின் போது உதவிக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு லால் பகதூர் சாஸ்திரி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து 1971 ஆம் வருட பாகிஸ்தான் போரின் போது, அமைப்பு ரீதியாக ஒரு முதல் அரசு சாரா அமைப்பு ரத்த தான இயக்கத்தை நடத்தி, ராணுவத்துக்கு உதவி புரிந்ததும் வரலாறு.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இத்தகைய பின்னணியில் ராணுவத்துடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் தொண்டர்கள் நிறைந்த அமைப்பு என்பதை மோகன் பாகவத் பல இடங்களில் சொல்லி வருகிறார். அதன் ஒரு பேச்சாகத்தான், பீகாரில் நடந்த நிகழ்ச்சியிலும், தங்கள் அமைப்பு குறித்து பெருமிதமாகக் கூறும் போது, கட்டளையிட்டால் நமது தொண்டர்கள் மூன்றே நாட்களில் திரண்டு விடுவார்கள் என்ற கருத்து வெளிப்படப் பேசியுள்ளார். அவரது பேச்சை ராகுல் காந்தி தற்போது சர்ச்சை ஆக்கி வருகிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img