ஒரு மேயர் படத்தைத் திறப்பது போல் அவசர கதியில் திறந்து விட்டார்களே! டிடிவி தினகரன் ஆதங்கம்

Published:

சென்னை:

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டது. எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தது.

ஜெயலலிதா உருவப்படத்தை அவைத்தலைவர் தனபால் திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப் பட்டது.

ஜெயலலிதாவின் இந்த உருவப் படம், 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்டதாக பெரிய அளவில் உள்ளது. இந்தப் படத்தின் கீழே ஜெயலலிதா அடிக்கடி உச்சரிக்கும் அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜெயலலிதா படத்திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரனும் இந்த விழாவை புறக்கணித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த டிடிகே தினகரன், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்திலேயே ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாக திறந்ததாக தெரிவித்துள்ளார். அவசர கதியில் ஜெயலலிதாவின் படத்தை திறந்தது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பெரிய தலைவரான ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா கட்சி விழா போல் நடைபெற்றதாக குறை கூறினார். ஏதோ ரிப்பன் கட்டடத்தில் ஒரு மேயரின் படத்தைத் திறந்து வைப்பது போல் வெகு சாதாரணமாக திறந்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பெரிய பெரிய தலைவர்களை அழைத்து சிறப்பாக அவரது படத்தை திறந்திருக்கலாம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், தங்களுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்பதால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று கருதி, அவசர கதியில் திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே ஜெயலலிதாவின் படத்தை திறந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Related articles

Recent articles

spot_img