October 20, 2021, 12:13 am
More

  ARTICLE - SECTIONS

  பாஜக., சமூக ஊடகப் பிரிவினர் பங்கேற்ற மதுரை மாநாடு… உண்மையில் என்ன நடந்தது!? என்ன பேசினார்கள்!?

  tamilnadu namo warriors conclave - 1

  பிரச்சாரத்துக்கே போக வேண்டாம்: பாஜகவின் ஸ்மார்ட் பிளான்! – இப்படி ஒரு தலைப்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப் பட்டு வந்தது. ஓரிரு நாட்களாக, மதுரையில் பாஜக., தமிழக சமூக ஊடக பங்கேற்பாளர்கள் கொண்ட கூட்டம் நடந்ததாகவும், அது ரகசியக் கூட்டமாக நடந்ததாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறிய தகவலோ வேறு விதமாக இருந்தது.

  சமூகத் தளங்களில் பரப்பப் படும் செய்தி…

  “தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் தொடங்கி கன்னியாகுமரி வரை இருக்கும் பிஜேபியின் ஐ.டி. விங் நிர்வாகிகளுக்கு நேற்று மாலை அழைப்பு போயிருக்கிறது. ‘இன்று காலை அனைவரும் தவறாமல் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என்பதுதான் சொல்லப்பட்ட தகவல்.

  மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்தான் கூட்டத்துகான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. டெல்லியிலில் இருந்து முரளிதர் ராவ் இன்று காலை அந்த ஹோட்டலுக்கு வந்தார். அதே ஹோட்டலில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. அதே ஹோட்டலில் இருந்த மீட்டிங் ஹாலில்தான் கூட்டம். ஹோட்டல் ஊழியர்கள் கூட யாரும் உள்ளே வர வேண்டாம் என கதவுகள் சாத்தப்பட்டது. நிர்வாகிகளின் அடையாள அட்டையை பார்த்துவிட்டுதான் உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள்.

  கூட்டத்தில் முரளிதர் ராவ் மட்டும்தான் பேசியிருக்கிறார். ’இந்தியா முழுக்கவே நாம ஒரு ஆபரேஷனை கையில் எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அதை செய்யப் போவது நீங்கதான். அதுக்காகத்தான் உங்களை கூப்பிட்டேன். நம்ம கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக் கூடிய இடத்தில் இருப்பது நீங்கதான். சோசியல் மீடியாவில்தான் இந்த உலகமே இயங்கிட்டு இருக்கு. அது இல்லாமல் இன்னைக்கு பெரும்பாலும் யாரும் இல்லை. அதனால நம்ம டார்கெட் எலெக்‌ஷன் முடியும் வரை சோசியல் மீடியாதான். அதைத்தான் எப்பவும் பயன்படுத்திட்டு இருக்கோம்.. இப்போ என்ன புதுசா பண்றதுன்னு நீங்க கேட்கலாம். என்ன பண்ணலாம்னு சொல்லத்தான் நான் வந்திருக்கேன்.

  உங்க தொகுதியில் நம்ம வேட்பாளர் யாரோ அவங்க பிரச்சாரத்தை நீங்க புரமோட் பண்றது ஒருபக்கம் பண்ணிட்டே இருங்க. இன்னொரு பக்கம் எதிரில் யாரு நிற்கிறாங்களோ அவங்களோட மைனஸ் பாயிண்ட்ஸ் நிறைய இருக்கும். உள்ளூர்காரர்களான உங்களுக்கு நிச்சயம் அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதை வைரலாக்குங்க. திரும்பத் திரும்ப போஸ்ட் பண்ணுங்க. வாட்ஸ் அப்ல ஷேர் பண்ணுங்க. புதுப் புது நெம்பர்ல இருந்து வாட்ஸ் அப் குரூப் உருவாக்குங்க. அதுல உங்க தொகுதியில் இருக்கும் உங்களை தெரிஞ்சவங்களை எல்லாம் உள்ளே கொண்டு வாங்க. அந்த குரூப்பில் எதிரணியில் நிற்கும் வேட்பாளரின் மைனஸ்களை பட்டியல் போட்டுகிட்டே இருங்க. ஒருதடவை போட்டதுடன் அமைதியாகிடாதீங்க. அது போய் சேராது. திரும்பத் திரும்ப போட்டுகிட்டே இருக்கணும். இப்படி ஒருநாளைக்கு ஒவ்வொருத்தரும் குறைஞ்சது 20 மெசேஜ் போஸ்ட் பண்ணணும். அப்போ எந்த குரூப்ல பார்த்தாலும் எதிரணியில் இருக்கும் வேட்பாளரின் மைனஸ்தான் வெளியே தெரியவரும். கடைசி 4 நாட்கள் மட்டும் நம்ம வேட்பாளரின் ப்ளஸ்களை எல்லாம் அதேபோல வைரலாக்கணும். அதுவரைக்கும் எதிராளியின் மைனஸ் எல்லாம் மக்கள் மனதில் பதிஞ்சு இருக்கணும். கடைசியாக நாம அனுப்பும் ப்ளஸ் பாயிண்ட்ஸ் கைகொடுக்கும்.

  குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு கடைசி நாளில் நம் வேட்பாளரின் ப்ளஸ்களை எல்லாம் அவர்களோடு ஒப்பிட்டு 30 நிமிடத்துக்கு ஒரு மெசேஜ் போஸ்ட் பண்ணிட்டே இருக்கணும். சோசியல் மீடியாவில் அந்த நாட்களில் என்ன பார்த்தாலும் நம்ம வேட்பாளர் முகம்தான் இருக்கணும்.

  இதைமட்டும் நீங்க செய்யுங்க. நீங்க மட்டும் செய்யணும் என்பது இல்லை. உங்க உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரையும் இதுக்குள் இறக்கிவிடுங்க. அதுக்கு அவங்களுக்கு எதுவும் செய்யணும்னாலும் செய்வதற்கு ரெடியாக இருக்கோம். நீங்க வேட்பாளர்கள் கூட யாரும் பிரச்சாரத்துக்கு போகணும் என எந்த அவசியமும் இல்லை. அப்படி யாரும் வரணும்னு சொன்னால், ‘முரளி பிரச்சாரத்துக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாரு’ என சொல்லுங்க. நாம இப்படி பண்றது என்பது நம்மோடு இருக்கட்டும். அதனால்தான் உங்களை மட்டும் வரச் சொன்னேன். செய்வீங்களா?’ என கையை மேலே உயர்த்தி கேட்டிருக்கிறார்.

  ஒட்டுமொத்த கூட்டமும், ‘செய்வோம் ஜி’ என பதில் கொடுக்க. ‘இதுல எந்த சந்தேகம் இருந்தாலும் நீங்க என் உதவியாளரிடம் சொல்லலாம். அவர் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வருவாரு..’ என்று பேசி முடித்திருக்கிறார்.

  சுமார் எட்டுமாதங்களுக்கு முன்னால் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘அடுத்த தேர்தல் செல்போனுக்குள்ளதான் நடக்கும். அதுக்கு எல்லாரும் தயாராகணும்’ என பேசினார். அதன் தொடர்ச்சிதான் முரளிதர் ராவின் இந்த வாட்ஸ் அப் வைரல் ஆபரேஷன்”

  namo warriors conclave - 2

  இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற வி.பி.முருகன் இது குறித்துக் குறிப்பிட்டபோது… 

  ரகசியமாக நடத்தப்பட்டது அறைக் கதவுகள் மூடப்பட்டு இருந்தது என்பதெல்லாம் அதீத கற்பனை அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்! திருநெல்வேலி தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஐடி பிரிவினர் வந்து இருந்தனர். பதிவு செய்யச் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர்!

  அதில் கலந்து கொண்டது முரளிதரராவ் மட்டுமல்ல; அமைச்சர் செல்லூர் ராஜு முதலில் பேசினார் மிகவும் நகைச்சுவையாக பேசினார்! நிரந்தர பிரதமர் மோடி என முழக்கமிட்டார்! இந்தியாவும் மக்களும் பாதுகாப்பாக இருக்க வேறு வாய்ப்பே இல்லை என்றார். மோடியின் தீவிர ரசிகராகவே பேசினார்!

  அடுத்ததாக ராஜன் செல்லப்பா பேசினார்! என்னுடைய மகன் தான் மதுரையில் தேர்தலில் நிற்கின்றார். அவருக்கும் உங்களுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது; அவர் ஏடிஎம்கே ஐடி விங்கில் பணியாற்றினார். நீங்கள் எல்லோரும் ஐடி விங்க்.  எனவே நாம் எல்லாம் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்றார். தேர்தல் பிரசாரத்தில் மகன் இருப்பதால் இந்தக் கூட்டத்திற்கு வர முடியவில்லை என்றும் மீண்டும் ஒருமுறை தன் மகனுடன் உங்களை சந்திப்பேன் என்றும் உறுதி கூறினார்!

  madurai itwing - 3

  அடுத்ததாக பேசிய முரளிதரராவ் பல்வேறு தகவல்களைப் பட்டியலிட்டார்! பாஜக., நிகழ்த்திய சாதனைகளின் பட்டியலாக அது இருந்தது! கிட்டத்தட்ட ஒரு பொதுக்கூட்டம் போன்ற உணர்வை ஏற்படுத்தியது!

  அவரும் ஹைலைட்டாக கடைசியாக சொன்ன விஷயம், உங்களால்  பதில் சொல்ல இயலாத கேள்விக்கு நீங்கள் பதிலுக்கு ஒரு கேள்வி கேளுங்கள்! அது அவர்கள் பதில் சொல்ல முடியாத கேள்வி ஆக இருக்க வேண்டும் எனக் கூறினார். அவர் பேசியதை பேராசிரியர் சீனிவாசன் மொழிபெயர்த்தார்!

  தொடர்ந்து நாராயணன் திருப்பதி, கே.டி.ராகவன் ஆகியோர் பேசினார்கள்! அவர்கள் இருவரும் நோட்ஸ் எடுக்கும் அளவிற்கு புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்தனர்.

  குறிப்பாக மோடி கேட்டுக் கொண்டதன் படி கேஸ் மானியத்தை 8 லட்சம் பேர் தமிழ் நாட்டில் விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் இது இந்தியாவில் இது ஐந்தாவது நிலை! ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் 12 கொடுக்கப் பட்டுள்ளது தமிழகத்தைப் போல் இரண்டு மடங்கு பெரிதான உத்தர பிரதேசத்துக்கு வெறும் 13 இடங்களில் கொடுக்கப்பட்டது! தமிழ்நாடு புறக்கணிக்கப்படவில்லை! என்றார்.

  இறுதியாக பேராசிரியர் சீனிவாசன் கலகலப்பாக நகைச்சுவையாக நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மாலை நாலு முப்பதுக்கு தொடங்கி, ஏழு நாற்பதற்கு முடிவடைந்தது!

  முக்கியமான விஷயம் அது ஸ்டார் ஹோட்டலில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் நடைபெறவில்லை வேலம்மாள் மெடிக்கல் கல்லூரியில் இருக்கும் ஒரு சாதாரண ஹாலில் நடைபெற்றது!

  முரளிதரராவ் பேசும்பொழுது யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்றும், அங்கு இருக்கும் தமிழர்களுக்கு 60,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பதிவு செய்தார்! ஆனால், இதைத்தான் ரகசியக் கூட்டம் என சிலர் சமூகத் தளன்களில் பதிவு செய்தார்களோ என்ற ஆச்சரியம் எழுகிறது!

  மொத்தத்தில் அது ஐடி விங் குழுவினருக்கான கூட்டம் போல் இல்லை! ஒரு பொதுக் கூட்டம் போல் இருந்தது! சாதனைகள் புள்ளிவிவரங்கள் பகிரப்பட்டன !

  நாங்கள் எதிர்பார்த்தது எங்களுக்கு தேவையான தகவல்கள் செய்திகள் எதைச் செய்ய வேண்டும் செய்யக் கூடாது போன்ற  கருத்துக்களைக் கொடுப்பார்கள்! தினசரி அவற்றை நமக்கு அனுப்பி வைப்பார்கள் என எதிர்பார்த்தோம்! ஆனால் அவர்கள் நாங்கள் செய்வதை மேலும் நன்றாகச் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்! – என்று நம்மிடம் கூறினார் இதில் கலந்து கொண்ட வி.பி முருகன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,566FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-