
-விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
“முக்தி நிலைக்கு மூலவித்து” என்று பாரதியார் குறிப்பிடும்போது நமக்கு முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியுள்ள “வாதாபி கணபதிம் பஜே” என்ற கீர்த்தனை நினைவுக்கு வரும். இதோ அந்தப் பாடல்
பல்லவி
வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ
அனுபல்லவி
பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்
வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்
சரணம்
பூராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்
கராம்புஜபாச’பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்
ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்
இப்பாடலில் சரணத்தில் முதல் இரு வரிகளில் “பூராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம், முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்” – முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும் சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர். மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர். விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர். மூலாதார க்ஷேத்திரத்தில் இருப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். கடைசி வரிக்கு ‘மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்’ என்றும் பொருள் கொள்ளலாம். கணநாயகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தில்
ஸர்வ விக்ன விவர்ஜிதம் மூலாதாரம் லம்போதரம்
ஸர்வ ஸித்திப் பிரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்.
என்று சொல்லப்படுகிறது.
இறை தத்துவத்தை உணர்த்தி ஞான வழியைக் காட்டவே வேதங்களும் புராணங்களும் உள்ளன. பெரியோர்கள் பல படிகளாக இறை தத்துவங்களை காவியம், ஓவியம், சிற்பம், சங்கீதம் போன்றவைகள் மூலம் உணர்த்தி மக்கள் வாழ்வை மேன்மையடையச் செய்கிறார்கள். இந்த மூலாதார கணபதியும் இறை தத்துவத்தை உணர்த்தும் வண்ணம் அருள்கிறார்.
மாயையால் ஜீவ சக்தி சுருண்டு பாம்பு போல் தூலமான ப்ருத்வி ரூபமாயுள்ள மூலாதார வாயிலில் படுத்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்பினால் அது குண்டலினி சக்தியாகி முதுகெலும்பின் நடுபாதையான சுழி முனையின் வழியாக மேலேறும். மூலாதாரத்திலிருந்து சுவாதிஷ்டான நீர் தத்துவத்தை அடைந்து பின் மணிபூரக அக்கினியில் நுழைந்து பின் அநாஹத வாயுவிலும், பின் அதி சூட்சுமமான விசுத்தியாம் ஆகாயத்திலும் கலந்து, அதனினும் சூட்சுமமான ஆக்ஞா சக்கரத்தில் கலந்து முடிவில் ஸர்வாதாரமான பிரம்மரந்தத்தை அடைந்து ஜீவப் பிரம்ம ஐக்கியம் ஏற்படுகிறது.
இதையே முக்தி என்பர். உயிர் சக்தி மேல்நோக்கி ஒவ்வொரு ஆதாரத்தையும் கடந்து முடிவில் சதாசிவத்துடன் ஒன்றாகி சிவசக்தியாவதை குண்டலினி யோகம் விவரிக்கிறது. ஜீவனுக்கு சம்சாரபந்தமயமான சர்வ துக்கங்களும் நிவர்த்தியாகி, சர்வ சுதந்திரமான பரம்ப்ராப்தி ஏற்படுவதை முக்தி அல்லது மோக்ஷம் என்பர்.
இறை தத்துவத்தையறிந்த இறை நிலை அடையத் தகுதியுடைய ஞானிகளுக்கும், பக்குவமடைந்த பக்தர்களுக்கும், யோகிகளுக்கும், ஆத்ம சாதகர்களுக்கும், சித்த புருஷர்களுக்கும், தபஸ்விகளுக்கும் மூலாதாரக் கனல் கதவை திறக்கச் செய்து சூட்சுமமான ஆறாதாரங்களையும், அதன் சந்திகளையும் அறியச் செய்து ஜீவப்ரம்ம ஐக்கியத்திற்கு வழிவிட மூலாதார கணபதி அருள்கிறார்.
நம் முதுகெலும்பின் இரு புறங்களிலுள்ள சூரிய, சந்திர நாடிகள் அல்லது இடை, பிங்கலை நாடிகள் மூலமாகத்தான் தேகமெங்கும் சரீர, மனோ இயக்கங்கள் வெளி விவகாரங்களுக்காக நடைபெறுகின்றன. ஆனால் தன்னையறியவும், இறைவனையடையவும் தெய்வீக சக்திகளைப் பெற்று லோக க்ஷேமத்தை ஏற்படுத்தவும் முதுகெலும்பின் நடுவே சுழிமுனை நாடி நன்கு வேலை செய்ய வேண்டும்.
அந்நாடியில் பிராணசக்தி நுழைந்து விட்டால் இறைநிலை அடைவது உறுதிப்படும். அச்சுழிமுனை வாசியை பக்குவமடைந்தோருக்குத் திறந்து விடுபவரே இந்த மூலாதார கணபதி மூர்த்தி. ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல் எனும் மகத்தான யோக சாத்திரங்களை உள்ளடக்கிய துதியில் உள்ள அமைப்பில் மூலாதார கணபதி சித்திரவடிவில் தரிசமளிக்கிறார்.
மாயப் பிறவி மயக்கம் அறுத்து
சொற்பதங் கடந்த துரிய ஞானம் காட்டி
கருவிகளொடுக்கும் கருத்தினை அறிவித்து
இரு வினை அறுத்திருள் கடிந்து
ஆறாதாரத் தங்குச நிலையும், பேரா நிறுத்திப்
பெரும் பகை அழித்து மூலாதாரத் தெழு மூண்டெழு கனலைகாலால் எழுப்பும் கருத்தினை அறிவிக்கும்
வித்தக விநாயகன் பாதங்களைச் சரணடைவோம்
மூலாதாரம் என்பது யோக சாத்திரங்களால் குறிப்பிடப்படும் சக்கரங்களில் ஆரம்ப சக்கரம் ஆகும். உறங்கும் நிலையில் குண்டலினி சக்தியானது உறையும் இடமாக மூலாதாரம் சொல்லப்படுகின்றது. இப்பகுதி ஆண் உடலில் தண்டுவடதின் அடிப்பகுதியில், பிறப்புறுப்புகளுக்கும், மலத்துவாரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. பெண் உடலில் கருப்பையின் கழுத்துப்பகுதியில் அமைந்துள்ளது.
இதன் பெயர்க்காரணம் என்ன என்பதைப் பார்க்கும்போது மூலம் என்றால் வேர் அல்லது ஆதாரம்; ஆதாரம் என்றால் இடம் அல்லது மையம். வேர்ப்பகுதி சுழல் மையம் எனலாம். இந்த மூலாதாரம் நான்கு இதழ்களையுடைய அடர்சிவப்பு தாமரை மலராக உருவகப்படுத்தப் படுகிறது. தாமரை இதழ்களின் மையப்பகுதியில் மஞ்சள் நிற சதுரம் உள்ளது.
சதுரத்தின் மத்தியில், படைக்கும் ஆற்றலின் சின்னமாக ஒரு தலைகீழ் சிவப்பு முக்கோணம் உள்ளது. முக்கோணத்தினுள் மனிதனுடைய ஆவி உடலின் சின்னமாக புகை வண்ணத்தில் சுயம்பு லிங்கம் உள்ளது. உறங்கும் நிலையில் உள்ள குண்டலினியை சித்தரிக்கும் வகையில் சென்னிற பாம்பு மூன்றரை முறை தன்னுடைய வாலால் லிங்கத்தை சுற்றி வளைத்துள்ளது. ஏழு துதிக்கைகளையுடைய ஒரு யானையால் சிவப்பு முக்கோணம் தாங்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தீக்ஷிதர் ஏன் திரிகோண மதுஅகதம் என்று பாடினார் என்றி பாடினார் எனப் புரிகிறதா?