
1942- ஆண்டிலேயே மூவர்ண கொடி ஏற்றப்பட்ட முதல் கிராமம் ஆஷ்டி (ஷஹித்)
- கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு இப்போது 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும், 1942 சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வர்தா மாவட்டத்தில் உள்ள ‘கிராந்திபூமி’ என்று அழைக்கப்படும் புரட்சி நிலமான ஆஷ்டி (ஷஹித்) எனப்படும் இடத்தின் புவியியல் மற்றும் வரலாறு சிறிதும் மாறவில்லை.
இங்கிருந்த ஆறு புரட்சியாளர்கள் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தனர். அவர்களது இரத்தம் தோய்ந்த புரட்சியால் ஆஷ்டி கிராமத்தின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது. ஆம்! ஆஷ்டி கிராமத்தில் ஆங்கிலேய காவல் நிலையத்தில் ‘மூவர்ண கொடி ஏற் றிய புரட்சி’ சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால்
பொறிக்கப்பட் டுள்ளது.

வீரேந்திர கடு, உகண்ட்யா 1942 – ஆஷ்டியின் மூவர்ண புரட்சி, குலஸ்வாமி பலிராஜா, என்னும் புத்தகங்களின் ஆசிரியர், குறிப்பிடுகையில், “உலக வரலாற்றின் பக்கங்களை காலங்காலமாக மாற்றியிருக்கலாம், ஆனால் ‘கிராந்திபூமி’ ஆஷ்டி கிராமத்தின் இரத்தக்களரி வரலாறு, இரக்கத்தால் நிறைந்தது, எல்லையற்ற தேசபக்தியை இன்னும் இளைஞர்களுக்கு நினைவூட்டுகிறது. 1942 தேசிய சுதந்திர இயக்கத்தின் சாட்சி.
வரலாறு என்பது இரத்தம், வியர்வை, உழைப்புத் துளிகளால் எழுதப்பட்டிருக்கிறது, ரோஜா மலரின் நறுமணத்தில் பன்னீரை ருசித்துக்கொண்டே ஆயாசமாக சாய்ந்து எழுதப்பட்டதில்லை. எனவே, பெரியவர்களும், வீரர்களும் சரித்திரம் படைக்க ஒரு வாய்ப்பையும் விடுவதில்லை. அதனால் அவர்களின் பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன.
இப்படிப்பட்ட மாவீரர்கள் பிறந்த மண்ணில் ஒரு புரட்சி நிகழ்கிறது. அப்போது அந்த மண்ணின் வரலாறு படைக்கப்படுகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில் “நாட்டின் வர்தா மாவட்டத்தின் முனையில் அமைந்துள்ள ஒரு புரட்சிகர கிராமமான ஆஷ்டியின் வரலாற்று சூழல் மற்றும் புவியியல் அழகு அற்புதமானது என்று சொல்ல வேண்டும். ஆஷ்டி சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான மகாத்மா காந்தியின் புரட்சிகரமான வார்த்தைகளின் சக்தியாலும், சுதந்திரத்திற்காக கர்ஜித்த துக்டோஜி மகாராஜ் அவர்களின் பஜன்களாலும் தேசம் மீது பற்றுக் கொண்டிருந்த கிராம மக்கள், அவர்கள்.
இரு மாமனிதர்களின் காலடித் தடங்களால் புனிதமடைந்த ஆஷ்டியில், புரட்சியின் விதைகள் இந்த புரட்சிகர மண்ணில் வேரூன்றியது. இந்த பெரிய மனிதர்கள் கிராமத்திற்கு வந்தார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் காவல் நிலையத்தின் மீது மூவர்ணக் கொடியை ஏற்றிய நாட்டின் முதல் சுதந்திரக் கிராமம் ஆஷ்டி. 1942 தேசிய எழுச்சியின் போது இங்கிருந்து ஆறு புரட்சியாளர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
அவர்களுடன் இருந்த சத்தியாகிர தொண்டர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் மையமாக இருந்த காவல் நிலையத்தில் நாட்டிலேயே முதன்முறையாக மூவர்ண கொடியை ஏற்றினர்.”
“நிராயுதபாணியான புரட்சியாளர்கள் மீது பிரிட்டிஷ் காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், டாக்டர் கோவிந்த் மால்பே, பஞ்சி கோண்ட், கேசவ் டோங்கே, உதே பான் குப்டே, ரஷித் கா பதான் மற்றும் ஹிராலால் கஹர் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். ஜெனரல் கோபால்ராவ் வாக், கிராந்தி சிங் குலாப்ராவ் வாக், ஜெனரல் பாண்டுரங் சவ்வாலாகே, சர்தார் மோதிராம் ஹோல், கேப்டன் ராம்பாவ் லோஹே, பிரிட்டிஷ் போலீஸ்காரர் உகந்தியா போய் உட்பட எழுச்சியை வழிநடத்திய ‘கிராந்திபூமியின் மண்டல்’ பற்றிய நிகழ்வு நாட்டின் வரலாற்றில் அழியாதது.
1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு சுதந்திரமடைந்தது. ஆனால் 1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் அதாவது 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி சுதந்திரத்திற்கு முன், ஆஷ்டி பிரிட்டிஷ் காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய இந்தியாவின் முதல் சுதந்திர கிராமமாக ஆனது,” என்றார், கடு.
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி காந்தியடிகள் மற்றும் பிற தலைவர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக ஆஷ்டி கிராமத்தில் மக்கள் கொதிப்படைந்தனர். ஆஷ்டி காவல் நிலையத்தில் மூவர்ண கொடியை ஏற்றுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி ஆகஸ்ட் 16, 1942 -ஆம் ஆண்டு சத்தியாகிரக மூலமாக ஆஷ்டியில் சுதந்திரப் போராட்ட வேட்கை விதைக்க தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் இன்ஹாலா கிராமத்தில் இருந்து ரங்கராவ் பாட்டீல், பஞ்சாப் ராவ் மான்கர், பார்ஸோட கிராமத்திலிருந்து ஜான்ராவ் திகே, மோதிராம் லோகண்டே, துள்சிராம் பாச்கரே, நாம்தேவ் கார்கர், கங்காதர் கோரே, ஆஷ்டியை சேர்ந்த பாண்டுரெங்க சவ்வாலாகே, ராம் லோஹே, பாவுராவ் தாம்பஸ்கர், டாக்டர் கோவிந்த் ராவ் மால்பே, கோலன்கர், அப்பாஜி கஞ்சாவாலே, கேஷவ்ராவ் டாங்கே, பஞ்சி கோண்ட், உதேபான் குபடே, ஜோபுஜி போடே முதலியோர் அவர்தம் கிராம மக்களை வழிநடத்தினர். ராம் லோஹேயின் தலைமையில் வடாலாவிலிருந்து ஒரு குழு காலை 10.45 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி புறப்பட்டனர்.
காந்தியடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அகிம்சா வழியில் போராட முடிவெடுத்து இருந்தனர். அவர்களுடன் ஆஷ்டியில் இருந்து ஒரு குழுவும் கலந்து கொண்டனர். மூவர்ண கொடியை போலீஸ் ஸ்டேஷனில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களை செய்தனர்.
அப்பொழுது போலீஸ் நிலைய அதிகாரி ராம்நாத் மிஸ்ரா, ஹெட் கான்ஸ்டபிள் லால்சிங் சோலங்கி மற்றும் காவலாளர் பிரசாத் திவாரி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக் குழுவினர் காவல்துறையைச் சேர்ந்தவர்களிடம் காவல் நிலையத்தில் மூவர்ண கொடியை ஏற்ற அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். காவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
உடனே லோகே அவர்கள் ‘காந்திஜி வாழ்க’ என்று கோஷமிட, அதனைத் தொடர்ந்து கூடியிருந்த குழுமினரும் கோஷமிட்டவுடன் காவலர்கள் சவ்வாலாகேயையும் ஹோலேவையும் கைது செய்தனர். காவலாளிகளான சமந்த் மற்றும் விநாயக் இருவரும் சத்தியாகிரக தொண்டர்களுக்கு எதிராக துப்பாக்கி சூட்டை நடத்த முயன்றனர்.
முதல் குண்டானது கேசவ் தோங்கே அவர்களை தாக்கியது. இரண்டாவதாக பாஞ்சி கோண்ட் அவர்களின் மேல் குண்டு பாய்ந்தது. அதன் பின்னர் டாக்டர் மால்பே அவர்களையும் துப்பாக்கிக் கொண்டு தாக்கியது. உதே பான் குப்டேவும் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே நபாப் கானும் வீர மரணம் அடைந்தார். சிலரை மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் ஐக்கியமாயினர். சிலர் காடுகளில் தஞ்சமாயினர். இதற்கிடையில் கடுக்கியில் இருந்து குலாப் ராவ் வாக் மற்றும் குழுவினர் அங்கு வந்து சேர்ந்தனர்.
அந்தோரா தேள்வாடி பாரஸ்வாடா, டேகோடா, வாகோலி, எரண்ட்வாடி, ஆர்வி பகுதியிலிருந்து சத்தியாகிரகர்கள் ஆஷ்டி வந்து சேர்ந்தார்கள். குலாப்ராவ் கதவின் மேலிருந்து குதித்து உள்ளே செல்ல முயன்றார். அப்போது அவருடைய கால் மாட்டிக்கொண்டதால் கீழே விழுந்தார். இதற்கிடையில் அவர் மீதும் குண்டு உரசிக்கொண்டு சென்றது. ஆனாலும் ஆஷ்டியில் தொண்டர்களின் கோஷமானது தொடர்ந்து கொண்டே இருந்தது.

பெண்களில் அகில்யா பாய் மற்றும் காசாபாய் கோனாரே காயம் அடைந்தனர். இதனால் கலவரம் அடைந்த காவலாளிகள் இமாம் கான், சமந்த், நாராயணன் மூவரும் காட்டுப்பகுதியினை நோக்கி ஓடினர்.
இதற்கு இடையில் மகாதேவ் பிரசாத் மற்றும் லால்சிங் விநாயக் இருவரும் மிஸ்ராவின் அறையில் ஒளிந்து கொண்டனர். ஒளிந்து கொண்டனர். 16 வயதே நிரம்பிய ஹிராலால் கஹார், மிஸ்ராவின் துப்பாக்கி குண்டில் பலியானார்.
இதனால் கோபமடைந்த சிலர் காவல் நிலையத்தின் மேலே ஏறி மண்ணெண்ணெய் தீபந்தங்களை போட்டு காவல் நிலையத்தை எரித்தனர். வெளியில் ஓடிவந்த காவலர்களை கற்களால் அடித்து கொலை செய்தனர்.
இந்நிகழ் வில் வீர மரணம் அடைந்தவர்களை அன்று இரவு 8 மணி அளவில் தகனம் செய்தனர். அப்போது 2,500 மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். சம்பவத்திற்கு அடுத்த நாள் இரண்டு முப்பது மணி அளவில் ஆங்கிலேய சேனை அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்தனர். அப்பொழுது குலாப்ராவ் வாக், உகண்ட் ராவ் சோனோனே, நத்துஜி ஆம்லே, பக்ராம் மோக்தம், வாமன் டபாலே, டாக்டர் துளசிராம் பாச்கரே முதலியாருக்கு தூக்கு தண்டனை முடிவானது. ஆனால் தண்டனையை நிறைவேறுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக அதிகாரிகளின் தொழில்நுட்ப குறைபாட்டினால் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டது.
மூவர்ண கொடியானது மிகுந்த கௌரவத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்றப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பேயே நம் மூவர்ண கொடியானது ஆஷ்டி ( ஷஹித்) நகரில் ஏற்றப்பட்டது. 1942-ஆம் வருடம் நாக பஞ்சமியன்று இந்நிகழ்வு நடைபெற்றதால் இன்றும் ஆஷ்டி (ஷஹித்) நகரில் அனைவரும் இத்தியாகிகளின் தியாகத்தினை நினைவு கூறுகின்றனர்.
இதனால் முதல் சுதந்திர அடைந்த இடமாக ஆஷ்டி ( ஷஹித்) இந்திய வரலாற்றில் பேசப்படுகிறது.