spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஜம்புத்தீவுப் பிரகடனம்: மாவீரனின் முதல் சுதந்திரப் போர்க்குரல்!

ஜம்புத்தீவுப் பிரகடனம்: மாவீரனின் முதல் சுதந்திரப் போர்க்குரல்!

Unlock to read this content

With an online subscription you get access to daily and weekly updates with news from all across the globe. Stay ahead of the curve with Dhinasari News - தினசரி செய்திகள்
You can rest assured we won't be spamming you, and we will cater the email updates to your interests.
jambudweep

-செங்கோட்டை ஸ்ரீராம்

சின்ன மருது வெளியிட்ட அந்த ஜம்புத் தீவு பிரகடனம்தான்… தென்னிந்தியக் கிளர்ச்சியில் ஜீவனாக விளங்கியது..!

கோபாலநாயக்கனின் தூண்டுதலில்… ஜம்புத்தீவு பிரகடனத்தை சின்ன மருது திருச்சியில் வெளியிட்டான்… திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோயில் மதில் சுவர்களில் அது ஒட்டப்பட்ட போது…. திருச்சி பகுதியே பெரும் கொந்தளிப்பில் இருந்தது..! அதற்கு அடிப்படையாய் இருந்தது… பாளையக்காரர்களின் ஆன்மிக நம்பிக்கையே..! அந்தப் பிரகடனத்தில் அப்படி என்ன எழுதியிருந்தார்கள்..?!

பாரத தேசத்தைத்தான்… ஜம்புத்தீவு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்… அப்படி எனில் சின்ன மருது வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனம் என்பது… பாரத தேசம் முழுமைக்குமானதா..!?

மருது சகோதரர்கள்… ஏன் இதனை ஜம்புத் தீவு பிரகடனம் என்று குறிப்பிட்டார்கள்..?! இது எல்லோருக்கும் இருந்த ஐயம் தான்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் எத்தனை கோடி மக்கள் என் பிள்ளைகளாய் இணைந்திருந்தார்கள்..?! எது என் பிள்ளைச் செல்வங்களைப் பிணைத்திருந்தது..?! தேசங்கள் பலவாய்ப் பிரிந்திருந்தாலும்… இமயம் என்றும் மேரு என்றும் தெற்கு என்றும் வடக்கு என்றும் … என்ன விதமாய்ச் சொல்லிக் கொண்டாலும்… நாவலந்தீவு எனும் ஒற்றைச் சொல்… ஜம்பூத்வீபம் எனும் அந்த ஒற்றைச் சொல்லன்றோ… அனைவரின் அடிநாதமாய்த் திகழ்ந்தது..?! கர்மபூமி என்றும்… தர்ம பூமி என்றும் … என் நிலப் பகுதியை நற்பண்புகளின் அடிப்படையில் குறிப்பிட்டார்களே..!
அந்தக் கர்மத்தில் கட்டுண்டுதானே… இத்தனை வீரர்களும் வாளேந்தி நின்றார்கள்..?! அன்னியனால் அழிவு ஏற்படும் போது… அந்த தர்மத்தைக் காப்பாற்றத்தானே… அவர்கள் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தார்கள்..!?

1801.. ஜூன் 16ஆம் நாள்… திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்த அந்தப் பிரகடனத்தைப் பார்த்த ஆங்கிலேயர்கள்… அதிர்ச்சியில் உறைந்துதான் போனார்கள்..! அவ்வளவு எளிதில்… எதிர்ப்புகள் ஏதுமின்றி இந்த நாட்டைக் கொள்ளையடிக்க இவர்கள் நம்மை விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று மலைத்துத்தான் போனார்கள்…!

சின்ன மருதுவின் பெயரில் ஒட்டப் பட்டிருந்த அந்த ஜம்புத் தீவு பிரகடனம்… என் ஆன்மாவை ஆங்கிலேயனுக்கு உணர்த்தியது… அது இந்த நாட்டைக் காப்பதற்கான உன்னத லட்சியங்களை… இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் காட்டி… அறைகூவல் விடுத்தது…

இதை யார் பார்த்தாலும் கவனத்துடன் படிக்கவும்.. ஜம்பு தீவிலும் ஜம்பு தீபகற்பத்திலுள்ள சகல ஜாதியாருக்கும் நாடுகளுக்கும்… பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் முஸல்மான்களுக்கும் இந்த அறிவிப்பு தரப்படுகிறது… என்று அனைத்துத் தரப்பையும் இந்தப் பிரகடனம் ஒருங்கிணைக்க முயன்றது…

மேன்மை தங்கிய நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விதவை போலாகிவிட்டார்… அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக… இந்த நாட்டை ஏமாற்றி தமதாக்கிக் கொண்டதுடன்… மக்களை நாய்களாகக் கருதி அதிகாரம் செலுத்தி வருகின்றனர் ஆங்கிலேயர் என்று… நாட்டின் இழிநிலையை மக்களுக்கு உணர்த்த முயன்றது…

மக்களிடையே ஒற்றுமை இல்லை… நட்புணர்வு இல்லை… ஐரோப்பியரின் போலி வேடத்தை அறியாமல்… முன்யோசனை இன்றி உங்கள் அரசை அவர்களின் காலடியில் வைத்தீர்கள்..! இந்த இழிபிறவிகளால் ஆளப்படும் நாடுகளின் மக்கள்… ஏழைகள் ஆனார்கள்..! அவர்களின் உணவு நீராகாரம்தான் என்று ஆகிவிட்டது… அவர்கள் இவ்வாறு இன்னலுறுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும்… அதன் காரணங்கள் இவைதான் என்ற அறிவு இல்லாதவர்களாக உள்ளனர்… என்று மக்களின் ஏழ்மையை அவர்களுக்குப் புரிய வைக்க முயன்றது…

கஞ்சி குடிப்பதற்கிலார்… அதன் காரணம் இவை என்ற அறிவுமிலார் என்றானே… என் மைந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி…!? அவன் அப்படி மனம் நொந்து பாடியதற்கு நூறாண்டுகளுக்கும் முன்பே… அதே வார்த்தைகளைச் சொல்லி… இந்தப் பிரகடனத்தில்… மக்களின் அறியாமையைச் சாடியிருந்தான்… சின்ன மருது..!

மானம்கெட்டு… மதியிழந்து… மாற்றான் அடிமையாய்க் காலம் தள்ளி… இப்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்… சாவது எவ்வளவோ மேல்…! அப்படி சாவைத் தழுவுகிறவன் புகழ்… சூரிய சந்திரர் உள்ளளவும் வாழும் என்று அந்தப் பிரகடனத்தில்… ஆளும் வர்க்கத்தினருக்கும் வீர உணர்வூட்டினானே… சின்ன மருது..!


சூரிய சந்திரர்கள் சாட்சியாக… என்று பழங்காலத்தில் சபதம் செய்வார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்… சின்ன மருது வெளியிட்ட ஜம்புத்தீவுப் பிரகடனத்திலும் இப்படி… மானமுள்ளவர்களின் செயல் சூரிய சந்திரர்கள் உள்ளளவும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே..!


அந்தப் பிரகடனத்தில்… இனி வருங்காலத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரை பாத்தியதையை அடையலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது… ஐரோப்பியர் தங்கள் பிழைப்புக்கு மட்டும் நவாபின் கீழ் பணிபுரிந்து இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சி கொள்ளலாம்… ஐரோப்பியர் ஆதிக்கம் ஒழிந்துவிடும் … எனவே ஐரோப்பியர்களின் தலையீடற்ற நவாபின் ஆட்சியில் மக்கள் கண்ணீர் சிந்தாத இன்ப வாழ்வு வாழலாம்… என்று குறிப்பிடப் பட்டது…!

இழிபிறவிகளான ஐரோப்பியரின் பெயர்கூட இல்லாதவாறு செய்வதற்காக… அங்கங்கே பாளையங்களிலும் ஊர்களிலும் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒன்றுபட்டு ஆயுதமேந்தி புறப்படுமாறு வேண்டிக் கொள்கிறோம்… அப்போதுதான் ஏழைகளும் இல்லாதோரும் விமோசனம் பெறுவார்கள்…

எச்சில் வாழ்க்கையை விரும்பும் நாய்களைப் போல ஈனப் பிறவிகளுக்கு அடிபணிகின்றவர்கள் கருவறுக்கப்பட வேண்டும்… என்று… – துரோகியரை முதலில் வீழ்த்துங்கள் என அந்தப் பிரகடனத்தில் வலியுறுத்தப் பட்டது…

இழிபிறவிகளான ஐரோப்பியர்கள்… ஒன்றுபட்டும் தந்திரத்தன்மை கொண்டும்… இந்த நாட்டை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்பதை நாம் அறிவோம்… எனவே வயல்களிலோ… வேறு துறைகளிலோ… அரசின் பொது அலுவலகங்களிலோ… ராணுவத்திலோ… எங்கே வேலை பார்ப்பவராயினும் சரி… பிராமணர்கள் க்ஷத்ரியர்களில் மீசை உள்ள எவராயினும் சரி… இந்த இழி பிறவிகளின் ராணுவ சிப்பாய்களில் எவராக இருந்தாலும் சரி… ஆயுதம் ஏந்தத் தெரிந்த எவராயினும்… தங்கள் துணிச்சலைக் காட்ட இதோ முதல் வாய்ப்பு வந்துவிட்டது… – என்று… புரட்சிக்கான அழைப்பை இந்தப் பிரகடனம் வெளிப்படுத்தியது…

எப்படி இந்தப் புரட்சியை செயல்படுத்த வேண்டும் என்றும்… இந்த ஜம்புத்தீவுப் பிரகடனம் வழிகளைக் காட்டியது…

எங்கெல்லாம் இந்த ஐரோப்பிய இழிபிறவிகளைப் பார்த்தீர்களோ… அங்கேயே அவர்களை அழித்துவிடுங்கள்… வேருடன் களை எடுக்கும் வரை அவ்வாறே செயல்படுங்கள்…

இந்த இழிபிறவிகளிடம் வேலை செய்வோர் எவரும் உயர்ந்தவராகக் கருதப்பட்டு சொர்க்கத்தை அடைந்துவிடப் போவதில்லை என்பதை நானறிவேன்… இதனைக் கருத்தூன்றிப் புரிந்துகொள்ளுங்கள்! நிதானமாக யோசியுங்கள்!

இவற்றையெல்லாம் ஏற்காதவனின் மீசை… என் மறைவிட ரோமத்துக்குச் சமம்… – என்று அந்தப் பிரகடனத்தில் வீரத்தைத் தட்டியெழுப்பும் வகையில் அறைகூவல் விடுத்தான்… சின்ன மருது…

இந்த அழைப்பை ஏற்காதவன் உண்ணும் உணவு சத்து ஒழிந்து… சுவையற்றுப் போகட்டும்… அவனது மனைவியும் குழந்தைகளும் வேறொருவன் உடைமை ஆகட்டும் … அவை அந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவையாகவே கருதப்படும்… – என்றெல்லாம் உள்ளம் கொப்புளிக்க உணர்ச்சித் தூண்டல் வார்த்தைகளை அந்தப் பிரகடனத்தில் பதிவு செய்தான்…

அதுமட்டுமல்ல… இந்தப் பிரகடனத்தை ஏற்காதவன் பேரில் சாபமும் அளித்தான் சின்ன மருது..! அவன் கொடுத்த சாபங்கள் என்ன தெரியுமா..!?


தாம் அழைப்பு விடுத்த போர்க் குரலை ஏற்காதவர்களுக்கு… அப்படியெல்லாம் ஒரு வீரர் சாபம் கொடுப்பாரா…! அது தன்னை, தன் கருத்தை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளவில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடல்லவா…


தாம் முன்வைத்த கருத்தை இந்த மக்கள் ஏற்றுக் கொண்டால்… அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற திட்டமிடலில் தானே அவனும் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டான்..?!

ஆயுதம் ஏந்த முடியும் என்பவர்கள் ஆயுதம் ஏந்துங்கள்… முடியாதவர்கள் இந்தச் செய்தியையாவது உலகத்துக்குப் பிரசாரம் செய்து பரப்புங்கள்… என்று தானே அவனும் தன் வேண்டுகோளை முன்வைத்தான்….

இந்தப் பிரகடனத்தை எழுதியும் சுற்றுக்கு விடவும் மறுப்பவர்கள் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவதுக்கும் …. நரகத்துக்குப் போகிற வேறு பல பாவங்களுக்கும் ஆன குற்றங்களைச் செய்தவர்களாகவே கருதப் படுவார்கள்… என்றல்லவோ அந்தப் பிரகடனத்தில் குறிப்பிட்டான்…

இப்படியெல்லாம் எழுதி … தன் பெயரைக் கையொப்பம் இடும்போது… தான் பேரரசர்களின் ஊழியன் என்றும், ஐரோப்பிய இழிபிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியன் என்றும் குறிப்பிட்டானே..!

இந்தப் பிரகடனத்தைப் பெறக் கூடியவர்களென… ஸ்ரீரங்கத்தில் வாழும் அர்ச்சகர்கள்… ஆன்றோர்கள் அனைத்துப் பொது மக்கள்… என்றல்லவோ குறிப்பிட்டு… திருவரங்கம் திருக்கோயிலின் மதிற்சுவரில் ஒட்டினான்…?!

அதன் அடிக்குறிப்பாக… அனைவருக்கும் மருதுபாண்டியன்… உங்களின் பாதங்களில் விழுந்து விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால்… அரண்களையும் கோட்டைகளையும் ஆலயங்களையும் தொழுகை இடங்களையும் கட்டியவர்கள் நம் மன்னர்களாயிருக்க… அந்த மன்னர்களும் மக்களும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனரே…! இந்த இழி நிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா?! எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள்…?! இந்தப்பணி வெற்றி பெற… உங்கள் நல்லாதரவைத் தாருங்கள்… – என்றும் குறிப்பு எழுதினானே…!

ஆங்கிலேயருக்கு எதிரான இந்தப் பிரகடனத்தில்… ஜாதி… மத… மண்டல… பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து… அனைத்து மக்களும் ஆயுதம் ஏந்தவும்… ஆங்கிலேயருக்கு எதிராக போராடவும் தயாராக வேண்டுமெனவே மருதுபாண்டியர்கள் அழைப்பு விடுத்தார்கள்…

தங்களின் ஆளுகைப் பகுதியிலோ… தங்களுடன் நட்புக் கொண்டவர்களது பகுதியிலோ மட்டும்…இந்தப் போராட்டத்தை அவர்கள் அறிவிக்க வில்லை… இந்த மண்ணுக்கும் அவரவர் பகுதிக்கு உரிமை உள்ளவர்களுக்கும் சேர்த்தேதான்… அவர்கள் போராடத் தயாரானார்கள்…

ஆங்கிலேய அதிகாரி அக்னியூ… மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறான் … எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் சாவு நிச்சயம்… எனவே அடிமைத்தளை அகற்றப் போராடிச் சாவோம்… என்றல்லவா அறைகூவல் விடுத்தார்கள்… !?

விளைவிப்பவன் தன் பசிக்குச் சோறு கிடைக்காமல்… கஞ்சியைக் குடித்து வாடுகிறானே… என்றல்லவா கவலைப் பட்டார்கள்..! தம் கலாசாரத்தை அன்னியன் சீரழிக்கிறானே என்றல்லவா கோபம் கொண்டார்கள்..!?

ஆனால்… இந்தப் பிரகடனத்தைக் கண்ணில் கண்ட ஆங்கிலேயரோ… கொதித்துத்தான் போனார்கள்..! தங்களைக் கொன்று தீர்க்க மக்களைத் தூண்டிவிடும் மருது பாண்டியரை எப்படிக் கொன்று பழி தீர்ப்பது என்று ஆலோசித்தார்கள்…

அப்போதுதான் அவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது..! தங்கள் சிறையில் இருந்து தப்பி ஓடிய ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தது … மாபெரும் குற்றம் என்று சொல்லி… மருதுபாண்டியருக்கு எதிராக பெரும் படை பலத்துடன் களம் இறங்கினார்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார்…!

மருதுபாண்டியர்கள் போர்வீரர்களாகத் தான் சிவகங்கையில் வளர்ந்தனர்… அவர்கள் மன்னர்களாக தங்களைக் கருதிக் கொள்ளவில்லை என்பதைத்தான்… அந்த ஜம்புத்தீவுப் பிரகடனம் புரிய வைத்தது… ஆயுதப் புரட்சி மூலம் அன்னியரை அழிக்க நினைத்த முதல் விதையை அவர்கள் போட்டார்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன்… ! சொல்லப் போனால்… வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ என வெளிநாட்டுப் புரட்சியாளர்கள் இங்கே இல்லாத குறையை மருதுபாண்டியர்கள் தீர்த்து வைத்தார்களோ என்றே நான் நினைக்கிறேன்…


தானறிந்த வகையில் இந்த மாவீரர்களை வெளிநாட்டுத் தலைவர்களுடன் பொருத்திப் பார்த்து புரிந்து கொண்டது போல் கேட்டான் சிறுவன் சிவா…
இருக்கட்டும்… தென்னகத்தில் தொலைநோக்குச் சிந்தனையுடன் புரட்சிகரப் பாதையில் சிந்தித்தவர்கள் மருது சகோதரர்கள் என்பது உண்மைதானே..!

அந்த திருச்சிப் பிரகடனம்… அதுதான் அந்த ஜம்புத்தீவுப் பிரகடனம்… அதைத்தானே காட்டியது..?!

எங்கோ ஒரு சிறு பகுதியில்… சிவகங்கைச் சீமையின் காப்பாளனாக இருந்த மருது பாண்டியன்… தென்னிந்தியா முழுமைக்குமான தளர்ச்சியின் காரணங்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து வெளிப்படுத்தினானே… அவன் தனது ஆய்வில்.. அரசர்களின் அரசியல் சாதுரியமற்ற கொள்கை… ஆள்பவர்களின் கோஷ்டி மனப்பான்மை… ஆங்கிலேயரின் வஞ்சகத்தன்மை… மக்களின் ஒரு பகுதியினரின் அன்னிய அதிகாரத்துக்கு அடிபணியும் போக்கு … அன்னியர் மீதான மோகம்…. இதெல்லாம்தான் தென்னிந்தியாவின் அரசியல் பலவீனத்துக்கு காரணங்கள் என அடுக்கினான்….

அரசர்கள்… ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டு … தன்மானம் இழந்து… தாழ்ந்த நிலையை அடைந்து விட்டார்களென வன்மையாக கண்டித்தான்… ஆள்பவர்களிடையே இருந்த ஒற்றுமையின்மையை ஆங்கிலேயர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையோடு ஒப்பிட்டுக் காட்டினான்….

ஹைதராபாத்தில் நஸீர் ஜங்கும் முஸாபர் ஜங்கும்… கர்நாடகத்தில் சந்தா சாகிப்பும் முகமது அலியும்… தஞ்சாவூரில் பிரதாப் சிங்கும் சரபோஜியும்… பரஸ்பரம் தங்களுக்கு இடையே இருந்த பொறாமையால் மோதிக்கொண்டு சீரழிந்ததை கோடிட்டுக் காட்டினான்….

ஆங்கிலேயரின் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி… அவர்களின் ஆட்சியை உரமிட்டு வளர்த்த மக்களின் ஒரு பிரிவினரது போக்கினைக் கண்டு பெரிதும் கவலை அடைந்தான்… தற்கொலைக்கு ஒப்பான அந்த நிலை நீடித்தால்… இந்திய நாடு முழுவதுமே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் என்று எச்சரித்தான்… பின்னாளில் நடக்கப்போவதை தொலைநோக்குச் சிந்தையுடன் அணுகிய மாவீரர்களாகவே மருது சகோதரர்கள் திகழ்ந்தார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,141FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,903FollowersFollow
17,200SubscribersSubscribe