
— எம்.எஸ். அபிஷேக்
- திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஜூன்.26.ல் வருஷாபிஷேகம்
- கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டாகியும் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறவில்லை
- பக்தர்கள் வேதனை; அறநிலையத்துறை அக்கறை காட்டுமா?
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு ஆண்டு இந்த மாதத்துடன் நிறைவடையப்போகும் நிலையில் கோவிலில் அரைகுறையாக நடந்த பணிகள் எதுவும் முடியவில்லை. போதிய பூஜாரிகள் இல்லை, நாதஸ்வரம் மேளம் இல்லை, ஜெனரேட்டர் பொருத்தப்படவில்லை. மியூரல் ஓவியங்கள் முழுமையாகாமல் அலங்கோலமாக காட்சி தருகின்றது. கல்மண்டபம் பாழடைந்து விழும் நிலையில் உள்ளது. . இவற்றை சரி செய்ய அறநிலையத்துறை முன்வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானது, நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பைப்பெற்றது ஆகும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6.ந்தேதி, 418 ஆண்டுகளுக்குப்பின்னர் சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பினன்ர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அதை கணக்கில் கொண்டு, ஆங்கில மாதத்துக்குப்பதில் தமிழ் மாதமான ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூன்.26.ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியன நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் கோவிலில் உள்ள குறைகள் இன்னும் களையப்படாதது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது கோவில் பிரகாரம் மற்றும் வெளிப்புறத்தில் புதியதாக ரூ. 17 லட்சம் செலவில் விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த விளக்குகள் பொருத்தப்படும் போது ஜெனரேட்டரும் அமைக்கவேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை ஜெனரேட்டர் நிறுவப்படவில்லை. இதனால் திடீரென மின் தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது.
கோவிலில் வேலை பார்த்த நாதஸ்வரக்கலைஞர், தவில் கலைஞர் ஆகியோர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. அதன் பின்னர் கோவிலில் பூஜைகளும், மாலை நேர தீபாராதனைகளும் இசையின்றியே நடக்கிறது. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவிலில் திருவிழாக்களின் போது மட்டும் வெளியூர் கோவிலில் இருந்து தற்காலிகமாக இசைக்கலைஞர்களை அழைத்து தவில், நாதஸ்வரம் வாசிப்பார்கள்.
தற்போது கோவிலில் பூஜைகளின் போது தவில், நாதஸ்வரம் இசைக்கப்படாதது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். 25க்கும்மேற்பட்ட பூஜாரிகள் வேலை பார்த்த திருவட்டார் கோவிலில் இன்று வெறும் 5 பூஜாரிகள் மட்டுமே வேலையில் உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் கோவிலில் வழிபாட்டுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பூஜாரிகல் நியமிக்க வேண்டும்.
மியூரல் ஓவியங்கள் முழுமை பெறுமா?
கோவிலின் கருவறையைச்சுற்றி மியூரல் ஓவியங்கள் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு ஓவியங்களை தீட்டினர். ஓவியங்களை தீட்டியவர்கள் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் ஓவியங்கள் அலங்கோலமாக காட்சி தருகிறது.
இதுதொடர்பாக கும்பாபிஷேகத்தின் போது கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், ஆகியோர் “கும்பாபிஷேகம் முடிந்ததும் ஓவியங்களின் முழுமையான வடிவம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன்படி ஓவியங்கள் முழுமையாக வரையப்படும்” என்றனர். ஆனால் இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் மோசமாக காட்சி தருகின்றன. இந்த ஓவியங்கள் முழுமை பெறவேண்டும்.
ஆதிகேசவப்பெருமாளின் கடுசர்க்கரையிலான மூலவர் விக்கிரகத்தின் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்க அங்கியை சிறுகச்சிறுக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதால் புதியதாக தங்க அங்கி செய்து சார்த்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை.
ரோட்டில் ஆக்கிரமிப்பு
திருவட்டார் குளச்சல் ரோட்டில், தபால் நிலைய சந்திப்பில் இருந்து ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு செல்லும் ரோடு வரையில் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருமளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருவட்டார் ஆதிகேசவபெருமாள் சேவா டிரஸ்ட் செயலாளர் தங்கப்பன் என்பவர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்ததோடு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தார்.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் இருந்து சம்பந்தப்பட்ட இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பாக அளவிடும் பணியை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்து. அதன்படி கடந்த 2021.ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.ம் தேதி அதிகாரிகள் அளவிட வருகைதந்தனர். சர்வேயேர் புது சர்வேபடி இடத்தை அளக்கவிருப்பதாக கூறவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய சர்வே எண்ணில் குறிப்பிட்ட அளவின் படியும், பழைய வரைபடத்தின்படியும் அளவீடு செய்யவேண்டும் என்றனர்.
இதையடுத்து ஒரு மாதத்திற்குள் பழைய சர்வே எண்ணின்படியுள்ள வரைபடம் பெற்று அளவீடு செய்யலாம் என உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால்ஒன்றரை ஆண்டு கடந்த பின்னரும் அளவீடு பணிகள் நடக்க வில்லை. தற்போது கோவிலுக்கு வருகை தரும் பக்த்ர்கள் வாகனங்கள் குறுகிய சாலையின் காரணமாக மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றன. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆக கும்பாபிஷேகம் முடிந்ததோடு கோவில் குறித்து எந்தவித அக்கறையும் இன்றி அறநிலையத்துறை செயல்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். பக்தர்களின் வருத்தத்தைப்போக்க அரசும், அறநிலையத் துறையும் முன்ரவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.