
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தாம்பத்ய வாழ்க்கையில் உடல் ஒத்துழைக்காமல் தடுமாறுவது இயல்புதான். குறிப்பாக ஆண்களுக்கு கலவியின் போது ஏற்படும் விரைப்பு குறைபாடு பெரும் கவலையைத் தரும் ஒன்று.
நீண்ட கால சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால், அது அவருக்கு உடலில் உள்ள அனைத்து சிறு இரத்தக் குழாய்களையும் சுருக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால்தான் கால்கள் மரத்துப் போவது, கால்களில் புண்கள் ஏற்படுவது, அவ்வாறு புண் ஏற்பட்டால் விரைவில் ஆறாமல் இருப்பது போன்றவை ஏற்படுகின்றன.
அதேபோலத்தான் ஆண்களுக்கு அந்தரங்க உறுப்புக்கு இரத்தம் பாய்வதும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதே வகையில்தான் விரைப்புத்தன்மை குறைபாடும் சிலருக்கு ஏற்படும். இது தொடக்கத்தில் லேசாகத்தான் இருக்கும். அப்போதே அதை உணர்ந்து கொண்டு சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதுதான் சரியான வழி.
அதேபோல உயர் இரத்த அழுத்தமும் தங்களுக்கு உடன் இருந்தால் அதைக் கண்டறிந்து, அதையும் மருத்துவர் ஆலோசனையின்படி கட்டுப்படுத்திக் கொண்டு சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது ஈ.சி.ஜி. எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உண்மையில் விரைப்புத்தன்மைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இதயநோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். காரணம், இரத்தத்தை பம்ப் செய்து அந்தரங்க உறுப்புகளுக்கு அதிவேகமாக அனுப்பும் செயல்பாடு இதய நோய் இருந்தால் தடைபட்டுப் போகும். எனவே விரைப்புத் தன்மைக் குறைபாடு ஏற்படும்.
எனவே, இது போன்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், இதய நோய் வல்லுநரை அணுகி, பிரச்னைகள் தென்பட்டால் சிகிச்சைக்கு தயாராக வேண்டும். புகை, மதுப் பழக்கங்கள் இருந்தால் அவற்றை நிறுத்த வேண்டும். தொடக்கத்திலேயே விரைப்புத்தன்மை குறைவைப் புரிந்து கொண்டு சர்க்கரை மாத்திரை அல்லது ஊசி ஆகியவற்றுடன், இரத்த நாளங்களை வலுப்படுத்தும் விட்டமின் காம்ப்ளக்ஸ் மாத்திரைகளான நியூரோபியான், மெதிகோபால் போன்றவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி கண்டிப்பாகத் தேவை. விரைப்புத் தன்மைக்காக பொதுவாக வயகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இதுபோன்று இதய நோய்கள் இருப்பது தெரிந்தால், அல்லது கல்லீரல் நோய் போன்றவை சிறிதளவு இருந்தால் கூட வயாகரா வகை மாத்திரைகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.