தில்லியிலுள்ள ஷஹீன் பாக்கில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், `காதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்’ என ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போராட்டக்களம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்களில், “ஷஹீன் பாக்கில் எங்களுடன் இணைந்து இந்த காதலர் தினத்தைக் கொண்டாட பிரதமர் மோடியை அழைக்கிறோம்.
உங்களுக்காக காதல் பாடல் ஒன்றையும் வெளியிடுகிறோம். சர்ப்ரைஸாக காதலர் தினப் பரிசு ஒன்றும் உங்களுக்குக் காத்திருக்கிறது. பிரதமர் மோடி, ஷஹீன் பாக்குக்கு வந்து உங்களுடைய பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள். எங்களுடன் உரையாடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் போஸ்டரை #TUMKABAAOGE என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போராட்டக்காரர்களில் ஒருவரான சையது தசீர் அகமது என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அரசியலமைப்புக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என அவர்கள் நிரூபித்தால், நாங்கள் போராட்டங்களைக் கைவிடத் தயாராக இருக்கிறோம். இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை என்கின்றனர்.
ஆனால், நாட்டுக்கு எவ்வாறு உதவப் போகிறது என யாரும் விளக்கம் தரவில்லை. வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொருளாதாரநிலை சரிவு போன்ற மிகப்பெரிய பிரச்னைகளுக்கு எவ்வாறு இந்தச் சட்டம் உதவப் போகிறது?” என்று கூறியுள்ளார்.
மேலும், “போராட்டம் தொடங்கியதில் இருந்தே பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் எந்தத் தொந்தரவுமின்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டு கூறப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஷஹீன் பாக் போராட்டக்காரர்களின் இந்தச் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் போஸ்டரை வித்தியாசமான கேப்ஷன்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.