தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்க தேர்வு செய்ய உள்ள கட்டிடங்களில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆய்வு செய்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனைத்து கலெக்டர்களும் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க 17 ஆயிரம் படுக்கை வசதிகள் மட்டுமே தற்போது உள்ளது. இந்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரும் பட்சத்தில் இந்த படுக்கை வசதிகள் போதாது என்பதால் கூடுதல் எண்ணிக்கையில் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 825 அரசு கட்டிடங்கள் மாவட்ட நிர்வாகங்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் 50,852 படுக்கை வசதிகளும், அதற்கான மருத்துவ உபகரணங்களும் வைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வார்டாக மாற்ற பலர் கட்டிடங்கள் தர முன்வந்துள்ளனர். மேலும், அனைத்து மருத்துமனைகள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்களில் சுகாதார உள்கட்டமைப்பு செய்வது தொடர்பாக கண்காணிக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்கள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவினர் கொரோனா வார்டாக அரசு தேர்வு செய்துள்ள கட்டிடங்கள், மற்றும் அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் தர முன்வந்துள்ள கட்டிடங்களை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்ற முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து, அங்கு சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக அறிக்கை அளிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதார உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் கட்டிடங்களை கண்டறிந்து ஆய்வு செய்து அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றுகின்றனர்.
அந்த கட்டிடங்கள் தரைத்தளத்தில் 3 அடுக்கு மாடி கொண்ட கட்டிடங்களாக இருக்க வேண்டும். அந்த கட்டிடத்தில் மின் இணைப்பு மற்றும் விளக்கு வசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு அறையிலும் மின்விசிறி வசதி இருக்க வேண்டும்.
செப்டிக் டேங்க் இணைப்பு இருக்க வேண்டும்.
தேவையான படுக்கை வசதி இருக்க வேணடும். குடிநீர் இணைப்புடன் கூடிய கழிப்பறை இருக்க வேண்டும். அறை காற்றோட்டமாக இருக்க வேண்டும். சமையலறை வசதியுடன் அந்த கட்டிம் இருக்க வேண்டும். அனைத்து கலெக்டர்களும் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை [email protected] என்ற இமெயில் முகவரியில் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.