
இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், அத்துமீறினால் யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சீனாவை பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதன் தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீன ராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது இரங்கல் தெரிவித்து மோடி பேசியதாவது: எல்லையை காக்கும் முயற்சியில் நமது ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம் வாய்ந்த நாடாகும்.
இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்றார் அவர்.
சீண்டினால் பதிலடி – சீனாவிற்கு மோடி
இந்திய சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சண்டையில் இந்தியத் தரப்பில் 20 வீரர்களும் சீனத்தரப்பில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்த நிலையில் இந்தியாவின் நிலைபாட்டை தெளிவாக விளக்குகிறார் பிரதமர் மோடி. இந்தியாவைச் சீண்டினால் பதிலடி நிச்சயம். இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது என்பதை தெளிவுபடுத்தும் பிரதமர் மோடியின் உரையைத் தமிழில் கேளுங்கள் ! பலருக்குப் பகிருங்கள் !