உத்தரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட குழு, மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 20 பேர் கொண்ட மலையேற்ற வீரர்கள் கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். இவர்களில் கடற்படையை சேர்ந்த 10 வீரர்கள் சிகரத்தின் உச்சிக்கு செல்வதற்கான பயணத்தை நேற்று தொடங்கினர்.
அப்போது, அப்பகுதியில் எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 6 வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 10 பேரை கொண்ட மலையேற்ற வீரர்களில் 4 பேர் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
மாயமான 6 பேரை தேடும் பணியில் கடற்படை, ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டது.
அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போது 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன இரண்டுபேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.