ஐபிஎல் 2022 – கொல்கொத்தா vs பெங்களூரு
– K.V. பாலசுப்பிரமணியன் –
மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கட் மைதானத்தில் நடந்த ஆறாவது ஐபிஎல் போட்டியில் கொல்கொத்தா அணியும் பெங்களூரு அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் டியூ பிளசிஸ் கொல்கொத்தா அணியை மட்டையாடச் சொன்னார்.
அதிரடி ஆட்டக்காரர்கள் பலரைக் கொண்ட கொல்கொத்தா அணியின் மட்டையாளர்கள் நிலைத்து ஆடி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்க முடியவில்லை. அந்த அணியின் ஒரு பேட்ஸ்மென் கூட 30 நிமிடம் மைதானத்தில் நின்று ஆடவில்லை. கிட்டத்தட்ட அனைவரும் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினார்கள். ஆனால் பத்து ஓவருக்குள் ஆறு விக்கட்டுகள் விழுந்துவிட்டன.
பின்னர் ஒரு வழியாக அந்த அணி 18.5 ஓவர் விளையாடி 128 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. மிக எளிமையான ஸ்கொர். எனவே பெங்களூரு மிகச் சுலபமாக எட்டிவிடும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கையில், பெங்களூரு அணியும் சொதப்பியது.
பவர் ப்ளேயில் மூன்று விக்கட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. ரூதர்ஃபோர்டும், ஷபாஸ் அகமதும் சற்று நின்று ஆடி நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் 17ஆவது ஓவரிலும் 18ஆவது ஓவரிலும் மூன்று விக்கட்டுகள் விழுந்ததால் பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குரியதானது.
கார்த்திக்கும் ஹர்ஷல் படேலும் ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு சமயத்தில் இருவரும் ஒரே முனையில் நின்றனர். சுலபமாக ரன் அவுட் செய்ய வாய்ப்பிருந்தது. ஒருந்தாலும் ஓவர் த்ரோ செய்து கொல்கொத்தா அணி கோட்டை விட்டார்கள். அதன் பின்னர் கார்த்தி ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து அணிக்கு வெற்றியத் தேடித்தந்தார்.