spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படை

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படை

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி 290
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடி மாமலர்க்குள் – சுவாமி மலை
திருமுருகாற்றுப்படை 2

     திருமுருகாற்றுப்படையை பழமுதிர்ச் சோலை சென்று முருகனைக் கண்டு அருள் பெறலாம் என்று முடிக்கிறார் நக்கீரர். தினை அரிசியைப் பரப்பி வைத்து ஆட்டுக் கிடாயை அறுத்துப் பலி செய்யும் ஒவ்வோர் இடத்திலும் வந்து வேற்றுமை பாராமல் அடியவர்க்கு அருள் செய்வான் முருகன் என்று பாடுகிறார். இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை இவ்வாறு காட்டப்படுகிறது.

     முருகனைக் கண்டவுடன், வழிபடும் முறை என்ன என்பதையும் சொல்லித் தருகிறார் நக்கீரர். முருகனின் பிறப்பு முதல் தொடங்கி அவனது சிறப்புகள் எல்லாம் இப்பகுதியில் ஒவ்வொன்றாக உணர்ச்சி மிக்க தமிழ்நடையில் உரைக்கப் பெறுகின்றன. “இவை அனைத்தையும் உணர்ந்து, பாடி அவன் அடி பணிந்தால் உன் மீது அன்பு கூர்ந்து இனிய மொழிகள் பல கூறிப் பெறுவதற்கு அரிய பரிசில்கள் தருவான்” என்கிறார்.

     நல்ல இலக்கியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருளும் தரும் வகையில் அமைய வேண்டும் என்னும் தமிழ் இலக்கியக் கோட்பாட்டை நாம் அறிவோம். மற்ற இலக்கியங்கள் எல்லாம் அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறி அவ்வழி நடந்து வீடு பெறும் வழியைக் குறிப்பாக உணர்த்தும்: வீடு பெறுவதை மட்டுமே நோக்கமாக, இலக்கியப் பொருளாக வைத்து முதன் முதலில் பாடிய பெருமைக்கு நக்கீரர் உரியவர் ஆகிறார். அருள் பெற வழி கூறும் ஆற்றுப்படை பாடியதால் அவர் இந்தச் சிறப்பை அடைகிறார்.

     திருஏரகம் என்ற நான்காவது படை வீட்டில் எழுந்தருளும் முருகனை அந்தணர்கள் வழிபடும் முறை பற்றி நக்கீரர் சொல்லுகிறார். அவ்வமயம் அந்தணர்கள் எவ்வாறான இயல்பு கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் வழிபாடு இயற்றும் முறையினையும்  திருஏரகத்தில் நக்கீரர் எடுத்துரைக்கிறார்.

     அந்தணர்கள் ஓதல் முதலிய ஆறுவகையான நன்மை பொருந்தியவர்கள். அவர்கள் நற்குடியில் தோன்றியவர்கள். நாற்பத்தெட்டு வருடம் பிரமச்சரியம் கைக்கொண்டு இல்லற வாழ்க்கையைப் பயின்றவர்கள். நித்திய ஓமம் செய்பவர்கள் என அந்தணர்களின் இயல்புகள் சொல்லப்படுகின்றன. அவர்கள் உதயகாலம், மத்தியான காலம், அத்தமன காலம் ஆகிய வழிபடவேண்டிய முக்காலமும் அறிந்தவர்கள். பூணூல் தரித்தவர்கள், துவைத்துப் புலராத ஆடையை அணிந்துகொண்டு ‘சரவணபவ’ என்னும் வேதமந்திரத்தை ஒலித்து வழிபடுபவர்கள் என்று முருகனை வழிபடும் முறை சொல்லப்படுகிறது.

     குரவைக்கூத்து மற்றும் வெறியாட்டு வழிபாட்டு முறைமை குன்றுதோறாடலிலும் பழமுதிர்ச் சோலையிலும் நிகழ்த்தப்படுவன பதிவு செய்யப்பட்டுள்ளன. குன்று தொறு ஆடல் என்பது குன்றுதோறும் ஆடல் எனப் பொருள்படும். முருகனின் ஐந்தாவது படைவீடாகிய இங்கு முருகனை குறவர்கள் வழிபடும் முறை எடுத்துக்காட்டப்படுகிறது.

     இங்கு முருகனுக்குப் பூசைசெய்யும் பூசாரி தலைமாலையை உடையவனாய் நிற்க, குறவர்கள் நல்ல வாசனை மிகுந்த சந்தனத்தைப் பூசி (வேட்டைத் தொழிலைச் செய்யும் குறவர்கள்) நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் ஊறவைத்து முற்றி விளைந்த தேனால் ஆன ‘கள்’ளின் தெளிவை தம் சுற்றத்தவருடன் உண்டு மகிழ்ந்து ‘தொண்டகம்’ என்ற வாத்தியத்தை முழங்கி அத்தாளத்திற்கு ஏற்ப குரவைக்கூத்து ஆடுகின்றனர்.

     பழமுதிர்ச்சோலையில் ‘வெறியயர் களன்’ (திருமுருகு:220) என்றொரு தொடர் வருகிறது. இது வெறியாட்டை நிகழ்த்தும் வேலன் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்யும் இடமாகும்.  பண்டைக்கால மக்கள் தமக்கு உடல் நலம் இல்லாதபோதும் தமக்கு பிற குறைகள் உண்டானபோதும் வேலன், கட்டுவிச்சி ஆகியோரிடத்துக் குறிகேட்டல் வழக்கம். அதன்போது முருகப் பெருமானுக்கு வழிபாடு இயற்றுவர். வேலன்மேல் எழுந்தருளும் முருகன் அடியார் குறை தீர்த்தல் வழக்கம். இவ்வாறான ஒரு வெறியாட்டு நிகழ்வு மிக அழகாக இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     பழமுதிர்ச்சோலையில் முருகனின் இருப்பிடங்கள் பற்றிக் குறிப்பிடும்போது “சதுக்கமும் சந்தியும், புதுப்பூங் கடம்பும், மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்” (திருமுருகு:225-226) என்று ஒரு தொடர் வருகிறது. இங்கு ‘கந்துடை நிலை’ என்பது இறைவனின் அருட்குறியாக கல்தறி நட்டிருக்கும் இடத்தைக் குறிக்கின்றது. பண்டைக்காலத்தில் மக்கள் வணங்கும் ஊர்களில் ‘கல்தறி’ நட்டு வணங்கி வந்தனர் என்ற செய்தி பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்படுகிறது. அதாவது குறித்த கந்துருவினை மலர்களால் அலங்கரித்து அவ்விடத்தை மெழுகி விளக்கேற்றி வணங்கினர்

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்

மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ

வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்

என பட்டினப்பாலையாலும் இது அறியப்படுகிறது. எனவே திருமுருகாற்றுப்படையில் வரும் ‘கந்துடைநிலை’ என்ற தொடர் ‘கல்தறி’ நட்டு வணங்கும் பண்டைய வழிபாட்டை வெளிப்படுத்துகிறது. இதுவே பிற்காலத்தில் சிவலிங்க உருவமாகக் கொள்ளப்பட்டது எனவும் குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe