
ஐபிஎல் 2022 – 16 ஏப்ரல் 2022 இரண்டு ஆட்டங்கள்
நேற்று, ஏப்ரல் பதினாறாம் நாள் இரண்டு ஆட்டங்கள் நடந்தன முதல் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் இடையே ப்ராபோர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடந்தது. இரண்டாவது ஆட்டம் பெங்களூரு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
லக்னோ vs மும்பை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட்டுக்கு 199 ரன் (ராகுல் 103*, பாண்டே 38, உனத்கட் 2-32) மும்பை இந்தியன்ஸ் அணியை (9 விக்கட் இழப்பிற்கு 181, சூர்யகுமார் 37, ப்ரீவிஸ் 31, அவேஷ் 3-30) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான பீல்டிங், தவறான பந்துவீச்சு, மோசமான பேட்டிங் என அனைத்தும் சேர்த்து அவர்கள் இந்த ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக ஆறு ஆட்டங்களை இழந்துள்ளனர்.
ஐ.பி.எல் போட்டிகளில் கே.எல். ராகுல் தனது மூன்றாவது சதத்தை மும்பைக்கு எதிராக இன்று அடித்தார். அவர் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 அடித்தார். ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி ஆறு தொடர் தோல்விகள் அடைந்துள்ளது. சமீபத்திய தோல்வி மும்பையின் இந்த சீசனுக்கான வாய்ப்புகளின் முடிவைக் குறிக்கிறது, பிளேஆஃப்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற விரும்பினால், மீதமுள்ள எட்டு ஆட்டங்களில் எட்டிலும் வெற்றிகள் பெற்றாக வேண்டும்.
கே.எல்.ராகுல் தனது 100வது ஐபிஎல் ஆட்டத்தில் தனது மேட்ச் வின்னிங் மற்றும் ஆட்டமிழக்காத சதத்தை அடித்துள்ளார். ஆனால் ஓவர்களை முடிப்பதில் தாமதமாக அணியை வழிநடத்தியதற்காக அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
டாஸ் வென்ற மும்பைக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. 200 ரன்களைத் சேஸ் செய்வதில் வழக்கம் போல விக்கெட்டுகளை இழந்தது. ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் ஆறு சிக்சர்கள் அடித்த பொலார்ட் இன்று ஆட்டத்தை எப்படியாவது மும்பைக்கு வெற்றிபெற்றுத் தந்துவிடுவார் என அனைவரும் எதிர்பார்க்க அவரால் நினைத்தபடி ஆட முடியவில்லை.
வரும் எட்டு ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்கள் சென்னை அணியுடன் மும்பை அணி ஆடவேண்டும். மும்பை அணியில் ஏதேனும் அதிரடி மாற்றங்கள் நடந்தால் மட்டுமே அணி வெற்றிப் பாதைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
பெங்களூரு vs டெல்லி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 189/5 (தினேஷ் கார்த்திக் 66*, கிளென் மேக்ஸ்வெல் 55) டெல்லி கேபிடல்ஸ் 173/7 (டேவிட்வார்னர் 66, ரிஷப் பந்த் 34, ஹேசல்வுட் 3/28). பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி பெங்களூரு அணியை மட்டையாடச் சொன்னது. பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அனுஜ் ராவத் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ட்யூ பிளேசிஸ், விராட் கோலி இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
கிளென் மேக்ஸ்வெல் (34 பந்துகளில் 55 ரன்), ஷபாஸ் அகமது (21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்) தினேஷ் கார்த்திக் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ரன்) எடுத்ததால் அந்த அணி 20 ஓவரில் 5 விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது.
டெல்லி அணி மிகச் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கியது. பிரித்வி ஷா 16 ரன்னுக்கு 4.4 ஓவரில் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 50. இரண்டாவதாக வார்னர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 94.
அதன் பின்னர் ஆடவந்த அனைவரும் சரியாக ஆடவில்லை. அதனால் ரன்ரேட் மிகவும் குறைந்து போனது. விக்கட்டுகளும் தொடர்ந்து விழுந்ததால் கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன் எடுக்கவேண்டிய நிலைமை.
எனவே 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 173 ரன் கள் மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வியைத் தழுவியது. விராட் கோலி ஒரு சிறப்பான கேட்சின் மூலம் ரிஷபை ஆட்டமிழக்கச் செய்தார்.