October 9, 2024, 10:15 PM
29.3 C
Chennai

பிரதமர் மோதியின் மனதின் குரல் (பகுதி 90 முழு வடிவம்)

மனதின் குரல் (90ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள்: 26.06.2022
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்

      எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலுக்காக நீங்கள் எழுதியிருக்கும் ஏராளமான கடிதங்கள் கிடைத்திருக்கின்றன.  சமூக ஊடகங்கள், நமோ செயலியிலும் கூட பல செய்திகள் வந்திருக்கின்றன, இவை அனைத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.  இந்த நிகழ்ச்சியில் நம்மனைவரின் முயற்சி என்னவாக இருந்திருக்கிறது என்றால், ஒருவருக்கொருவர் உத்வேகம் அளிக்கும் விவாதங்கள், மக்கள் இயக்கங்களாக மாறிய விஷயங்கள் போன்றவற்றை நாடு முழுவதற்கும் தெரிவிப்பதாக அமைந்திருக்கிறது. 

இந்தக் கட்டத்தில் தான் நான் உங்கள் அனைவரிடத்திலும் ஒரு மக்கள் இயக்கம் பற்றி இன்று விவாதம் செய்ய விரும்புகிறேன், இது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் அதிக மகத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  ஆனால், அதற்கு முன்பாக இன்றைய தலைமுறையைச் சேர்ந்த, 24-25 வயதுடைய இளைஞர்களிடத்திலே ஒரு வினாவை எழுப்ப விரும்புகிறேன், இந்த வினா மிக ஆழங்காற்பட்டது, இது குறித்து நீங்கள் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும்.  உங்களுடைய பெற்றோர் உங்கள் வயதில் இருந்த போது, அவர்கள் வாழ்க்கையில் வாழும் உரிமை ஒருமுறை பறிக்கப்பட்டது பற்றித் தெரியுமா!! 

இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம்.  ஆனால் இது சாத்தியமானது.  எனது இளைய நண்பர்களே, நமது நாட்டிலே இப்படியும் ஒருமுறை நிகழ்ந்தது.   பல ஆண்டுகள் முன்பாக 1975ஆம் ஆண்டு நடந்தது இது.  இதே ஜூன் மாதத்தில் தான் emergency எனப்படும்அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.  இதன்படி, தேசத்தின் குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன, அப்படிப் பறிக்கப்பட்ட ஒரு உரிமை தான் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் படி, அனைத்து இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்குமான உரிமை.  அந்தக் காலத்தில், இந்தியாவில் மக்களாட்சியை காலில் போட்டு மிதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

தேசத்தின் நீதிமன்றங்கள், அனைத்து சட்ட அமைப்புகள், பத்திரிக்கைகள், என அனைத்தின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தணிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்றால், அனுமதி பெறாமல் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது என்ற நிலைமை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அப்போது புகழ்பெற்ற பாடகர் கிஷோர் குமார் அவர்கள், அரசுக்கு வெண்சாமரம் வீசிப் புகழ்ந்துபாட மறுத்தார் என்பதால், அவர் மீது தடை விதிக்கப்பட்டது. வானொலியில் அவர் நுழைவிற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பல முயற்சிகள், ஆயிரக்கணக்கான கைதுகள், இலட்சக்கணக்கான மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளுக்குப் பிறகு பாரத நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் மீதிருந்த நம்பிக்கை சற்றுக்கூட விலகவில்லை. பாரத நாட்டைச் சேர்ந்த நாமனைவரும், பல நூற்றாண்டுகளாகவே ஜனநாயக வழிமுறைகளின்படி வாழ்ந்து வருகிறோம், ஜனநாயக உணர்வு என்பது நம்முடைய நாடிநரம்புகளில் ஊறியிருக்கிறது என்பதால், இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ ஜனநாயகம் தான். 

பாரத நாட்டு மக்கள் ஜனநாயக வழிமுறைப்படி அவசரநிலையை அகற்றி, மீண்டும் மக்களாட்சியை நிறுவினார்கள். எதேச்சாதிகார மனோநிலையை, எதேச்சாதிகார இயல்பினை, ஜனநாயக வழிமுறைகளின்படி தோற்கடித்த இப்படிப்பட்ட எடுத்துக்காட்டு என்பது உலகிலே வேறு எங்குமே இல்லை.  அவசரநிலையின் போது நாட்டுமக்களின் போராட்டத்திற்குச் சான்றாக இருந்த, உடனிருந்து போராடிய பெரும் பேறு எனக்கும் கிடைத்தது – மக்களாட்சியின் ஒரு படைவீரன் என்ற முறையிலே. இன்று, தேசம் தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டினை, அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வரும் வேளையில், அவசரநிலையின் போது நிலவிய பயங்கரமான சூழ்நிலையை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது. இனிவரும் தலைமுறையினரும் மறந்து விடக்கூடாது. அமிர்தப் பெருவிழாவானது, பலநூறு ஆண்டுகளாக நாம் சிக்குண்டு கிடந்த அடிமைத்தனத்திலிருந்து பெற்ற விடுதலை மட்டுமல்ல; சுதந்திரத்திற்குப் பிறகு, நமது 75 ஆண்டுக்காலப் பயணமும் இதில் அடங்கியிருக்கிறது. வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலிருந்தும் கற்றுக் கொண்டு நாம் முன்னேற வேண்டும். 

   என் மனம் நிறை நாட்டுமக்களே, வாழ்க்கையில் வானத்தோடு தொடர்புடைய கற்பனைகளில் திளைக்காதவர்கள் என்று நம்மில் யாருமே இருக்க மாட்டார்கள், இல்லையா!! சிறுவயதில் அனைவரையுமே நிலவு-நட்சத்திரங்கள் பற்றிய கதைகள் என்றுமே கவர்ந்து வந்திருக்கின்றன. இளைஞர்களைப் பொறுத்த மட்டிலே வானைத் தொடுவது, கனவுகளை மெய்ப்படுவதற்கு இணையானதாக இருக்கிறது. இன்று நமது பாரதம், இத்தனைத் துறைகளில் வெற்றிகள் என்ற வானைத் தொடும் வேளையில், வானம் அல்லது விண் என்பது எப்படி விலகி இருக்க முடியும்! கடந்த சில காலமாகவே நமது தேசத்தில் விண்வெளித் துறையோடு இணைந்த பல பெரிய பணிகள் நடந்திருக்கின்றன. 

தேசத்தின் இந்தச் சாதனைகளில் ஒன்று தான் In-Space என்ற நிறுவனம் நிறுவப்பட்டது.  இது எப்படிப்பட்ட நிறுவனம் என்றால், பாரதத்திலே, விண்வெளித்துறையிலே, பாரதத்தின் தனியார் துறைக்கு சந்தர்ப்பங்களை ஊக்குவிக்கிறது.  இந்தத் தொடக்கமானது, நமது தேசத்தின் இளைஞர்களைக் குறிப்பாக கவர்ந்திருக்கிறது. இதோடு தொடர்புடைய பல செய்திகள், பல இளைஞர்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாக In-Spaceஇன் தலைமையகத்தைத் திறந்து வைக்கச் சென்றிருந்த போது, அங்கே பல இளைஞர்களின் ஸ்டார்ட் அப்புகளின் புதிய எண்ணங்களையும், உற்சாகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. கணிசமான நேரம் வரை நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.  அவர்களைப் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டீர்களானால், நீங்களும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போவீர்கள்.  எடுத்துக்காட்டாக விண்வெளி தொடர்பான ஸ்டார்ட் அப்புகளின் எண்ணிக்கையையும், வேகத்தையுமே எடுத்துக் கொள்ளலாமே!! 

இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்புவரை நமது தேசத்திலே, விண்வெளித் துறையில், ஸ்டார்ட் அப்புகள் என்பது குறித்து யாருமே யோசித்திருக்கவே மாட்டார்கள்.  இன்று இவற்றின் எண்ணிக்கை நூறையும் தாண்டி விட்டது.  இந்த ஸ்டார்ட் அப்புகள் செயல்பட்டு வரும் கருத்து பற்றி ஒன்று முன்பு யாரும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை, அல்லது இது தனியார் துறையால் செய்ய சாத்தியமில்லாததாகக் கருதப்பட்டது.  எடுத்துக்காட்டாக, சென்னை மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப்புகளான அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட்.  இந்த ஸ்டார்ட் அப்புகள் மேம்படுத்தி வரும் ஏவு வாகனங்களால் விண்வெளியில் சிறிய payloadகளை, அதாவது சுமைகளையும் கொண்டு செல்ல முடியும்.  இதனால் விண்ணில் ஏவுவதற்கான செலவு மிகவும் குறையும் என்று அனுமானிக்கப்படுகிறது.

இதைப் போல ஹைதராபாதின் மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பான துருவா ஸ்பேஸானது, சேடிலைட் ட்ப்ளாயர், அதாவது, விண்கல வரிசைப்படுத்தி மற்றும் விண்கலங்களுக்காக உயர் தொழில்நுட்ப சூரியத்தகடுகள் பற்றி பணியாற்றி வருகிறது. நான் மேலும் ஒரு விண்வெளி ஸார்ட் அப்பான திகந்தராவின் தன்வீர் அஹ்மதையும் சந்தித்தேன், இவர் விண்வெளியில் இருக்கும் குப்பைக் கூளங்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விண்வெளியில் குப்பைகளை அகற்றக்கூடிய வகையிலான ஒரு தொழில்நுட்பத்தை அவர் வடிவமைக்க வேண்டும் என்ற சவாலையும் நான் அவருக்கு விடுத்து வந்திருக்கிறேன். திகந்தராவாகட்டும், துருவா ஸ்பேஸ் ஆகட்டும், இரண்டுமே ஜூன் 30 அன்று இஸ்ரோவின் ஏவு வாகனத்திலிருந்து தங்களுடைய முதல் ஏவுதலை மேற்கொள்ள இருக்கின்றன. இதைப் போலவே, பெங்களூருவின் ஒரு விண்வெளி ஸ்டார்ட் அப்பான Astromeஇன் நிறுவனரான நேஹாவும் கூட ஒரு அருமையான விஷயம் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார். இந்த ஸ்டார்ட் அப் உருவாக்கி வரும் ஆண்டெனாக்கள், சிறியவையாக மட்டும் இருக்காது, இவை விலை மலிவானவையாகவும் இருக்கும்.  இந்தத் தொழில்நுட்பத்திற்கான தேவை உலகம் முழுவதிலும் ஏற்படும்.

        நண்பர்களே, In-Spaceஇன் செயல்திட்டத்திலே, மெஹசாணாவைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியான தன்வீ படேலையும் நான் சந்தித்தேன். இவர் ஒரு மிகச் சிறிய செயற்கைக்கோள் மீது பணியாற்றி வருகிறார், இது அடுத்த சில மாதங்களிலே விண்வெளியிலே ஏவப்பட இருக்கிறது. தன்னுடைய செயல்பாடு குறித்து மிகச் சரளமாக தன்வீ என்னிடம் குஜராத்தியிலே விளக்கினார். தன்வியைப் போலவே தேசத்தில் கிட்டத்தட்ட 750 பள்ளி மாணவர்கள், அமிர்தப் பெருவிழாவில் 75 செயற்கைக்கோள்கள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார்கள், இதில் மேலும் சந்தோஷமளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் அதிகப்பட்ச மாணவர்கள் தேசத்தின் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.

        நண்பர்களே, இந்த இளைஞர்களின் மனதிலே தான், இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்பாக விண்வெளித்துறை பற்றிய ஒரு பிம்பமானது, ஏதோ ஒரு  ரகசியத் திட்டம் போல இருந்தது; ஆனால் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட விண்வெளிச் சீர்திருத்தங்கள் காரணமாக, இதே இளைஞர்கள் இப்போது தங்களுடைய செயற்கைக்கோள்களையே ஏவுகிறார்கள்.  தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும் சொல்லுங்கள் ?                            

        என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் கலந்துரையாட இருக்கும் ஒரு விஷயம் குறித்து நீங்கள் கேட்டீர்கள் என்றால், உங்கள் மனம் குதூகலத்தில் கூத்தாடும், உங்களுக்கும் கருத்தூக்கம் பிறக்கும்.  கடந்த நாட்களில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நமது வெற்றியாளரான நீரஜ் சோப்டா மீண்டும் செய்திகளில் நிறைந்திருக்கிறார்.  ஒலிம்பிக்கிற்குப் பிறகு இவர், ஒன்றன் பின் ஒன்றாக புதியபுதிய வெற்றிகளை நிறுவிக் கொண்டிருக்கிறார்.  ஃபின்லாந்தில் பாவோ நூர்மி விளையாட்டுக்களில் நீரஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.  இதுமட்டுமல்ல, ஈட்டி எறிதலில் இவர் தான் ஏற்படுத்திய பதிவினைத் தானே தகர்த்திருக்கிறார்.  Kuortane விளையாட்டுக்களில் நீரஜ், மீண்டும் ஒரு முறை தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.  அதுவும் அங்கே வானிலை மிக மோசமாக இருந்த சூழ்நிலையிலும் கூட இவர் தங்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தன்னம்பிக்கை தான் இன்றைய இளைஞர்களின் அடையாளம்.

ஸ்டார்ட் அப்புகள் தொடங்கி விளையாட்டுக்களின் உலகம் வரை, பாரதத்தின் இளைஞர்கள் புதியபுதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.  இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் நமது விளையாட்டு வீரர்கள் பல புதிய பதிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.  இந்த விளையாட்டுக்களில் மொத்தம் 12 பதிவுகள் தகர்க்கப்பட்டன என்பதும், 11 பதிவுகள் வீராங்கனைகளால் செய்யப்பட்டன என்பதும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.  மணிப்பூரின் எம். மார்ட்டினா தேவி, பளுதூக்கல் போட்டியில் எட்டு புதிய பதிவுகளை ஏற்படுத்தி இருக்கிறார். 

        இதைப் போலவே, சஞ்ஜனா, சோனாக்ஷீ, பாவ்னா ஆகியோரும் கூட தனித்தனியே சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.  இனிவரவிருக்கும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பாரதம் எத்தனை வலுவானதாக இருக்கும் என்பதைத் தங்களுடைய கடும் உழைப்பு வாயிலாக இந்த வீராங்கனைகள் அறிவித்துவிட்டார்கள்.  நான் இந்த அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், வருங்காலத்திற்கான நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். 

        நண்பர்களே, கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் உண்டு.  இந்த முறையும், பல புதிய திறமைகள் வெளிப்பட்டன, இவற்றுக்குச் சொந்தக்காரர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய போராடியிருக்கிறார்கள், இன்று வெற்றி என்ற இலக்கை அடைந்திருக்கிறார்கள்.  இவர்களுடைய வெற்றியில், இவர்களுடைய குடும்பத்தார், தாய் தந்தையருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. 

        70 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுவதில் தங்கம் வென்ற ஸ்ரீநகரைச் சேர்ந்த ஆதில் அல்தாஃபின் தந்தை தையல்காரர் என்றாலும் இவர் தனது மகனின் கனவுகளை நிறைவேற்ற, எந்த ஒரு முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.  இன்று ஆதில் தனது தந்தைக்கும், ஜம்மு கஷ்மீர் முழுவதற்கும் பெருமிதம் சேர்த்திருக்கிறார்.  பளு தூக்குதலில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த எல். தனுஷின் தந்தையுமே கூட ஒரு எளிய மரத்தச்சர் தான்.  சாங்க்லியைச் சேர்ந்த பெண்ணான காஜோல் சர்காரின் தந்தை ஒரு தேநீர் விற்பனையாளர்; காஜோல் தனது தந்தையாரின் வேலையில் உதவி செய்து கொண்டே, கூடவே பளு தூக்குதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.  இவருடைய, குடும்பத்தாருடைய உழைப்பு மணம் சேர்த்திருக்கிறது, பளு தூக்குதல் போட்டியில் காஜோல் பல பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.  இதைப் போன்றதொரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் தான் ரோஹ்தக்கைச் சேர்ந்த தனுவும்.  தனுவின் தந்தை ராஜ்பீர் சிங், ரோஹ்தக்கின் ஒரு பள்ளியில் பேருந்து ஓட்டுநர்.  மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தனு, தானும், தனது குடும்பத்தாரும், தனது தந்தையும் கண்ட கனவை மெய்ப்பித்திருக்கிறார்.

        நண்பர்களே, விளையாட்டு உலகிலே, இப்போது பாரதநாட்டு விளையாட்டு வீரர்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது, கூடவே, பாரதநாட்டு விளையாட்டுக்களும் தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன.  எடுத்துக்காட்டாக, இந்த முறை கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில், ஒலிம்பிக்ஸிலே இடம்பெறும் போட்டிகளைத் தவிர, ஐந்து சுதேசி விளையாட்டுக்களும் இடம் பெற்றிருந்தன.  இந்த ஐந்து விளையாட்டுக்கள், தகா, தாங்க் தா, யோகாஸனம், களறிப்பாயட்டு, மல்லகம்ப் ஆகியன. 

        நண்பர்களே, பாரதத்திலே ஒரு விளையாட்டிற்கான சர்வதேசப் போட்டி நடைபெற இருக்கிறது; இந்த விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலே பிறந்தது.  இந்தப் போட்டி ஜூலை மாதம் 28ஆம் நாள் தொடங்க இருக்கிறது, அது தான் சதுரங்க ஒலிம்பியாட்.  இந்த முறை, சதுரங்க ஒலிம்பியாடில், 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க இருக்கின்றன.  விளையாட்டு மற்றும் உடலுறுதி தொடர்பான நமது இன்றைய விவாதப் பொருள், மேலும் ஒரு பெயர் இல்லாமல் போனால் நிறைவானதாக இருக்காது.  அந்தப் பெயர் தான் தெலங்கானாவைச் சேர்ந்த மலையேறும் வல்லுநரான பூர்ணா மாலாவத்.  பூர்ணா செவன் சம்மிட் சேலஞ்ஜ் என்ற ஏழு சிகரச் சவாலை வென்று, மேலும் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறார்.  உலகின் ஏழு மிகக் கடினமான, உயரமான மலைகளின் மீது ஏறும் சவால்.  பூர்ணா தனது அசகாய நம்பிக்கையின் துணையோடு, வடக்கு அமெரிக்காவின் மிக உயரமான சிகரமான மவுண்ட் தேனாலீ மீது ஏறி, தேசத்திற்குப் பெருமை சேர்த்தார்.  பூர்ணா என்ற இந்தப் பெண் யார் தெரியுமா?  வெறும் 13 வயதிலேயே, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி, அற்புதமான சாதனையைப் படைத்த வீராங்கனை தான் இந்த பூர்ணா.

        நண்பர்களே, விளையாட்டுக்கள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இன்று பாரதத்தின் அதிகத் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான மிதாலீ ராஜ் பற்றிப் பேச நான் விரும்புகிறேன்.  இவர், இந்த மாதம் கிரிக்கெட் போட்டியிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார், இது பல விளையாட்டுப் பிரியர்களை உணர்ச்சிவயப்படச் செய்திருக்கிறது.  மிதாலி ஒரு அசாதாரணமான விளையாட்டு வீரர் மட்டுமல்ல, பல விளையாட்டு வீரர்களுக்கு இவர் ஒரு உத்வேக காரணியாகவும் இருந்திருக்கிறார்.  நான் மிதாலிக்கு, அவரது வருங்காலத்திற்கான ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

pm narendra modi mann ki baat

        எனதருமை நாட்டுமக்களே, குப்பையிலிருந்து செல்வம் என்ற கருத்தோடு தொடர்புடைய பல முயற்சிகள் பற்றி நாம் மனதின் குரலில் விவாதித்து வருகிறோம்.  இதனையொட்டிய ஒரு எடுத்துக்காட்டு, மிசோரமின் தலைநகரான ஐஜ்வாலில் நடந்திருக்கிறது.  ஐஜ்வாலின் ஒரு அழகான ஆறு, சிடேலுயி.  காலப்போக்கிலே இது, குப்பையும் மாசும் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது.  கடந்த சில ஆண்டுகளில் இந்த நதியைக் காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டன.  இதற்காக வட்டார நிறுவனங்கள், சுயவுதவி அமைப்புகள், வட்டார மக்கள் ஆகிய அனைவருமாக இணைந்து, சிடே லுயியைக் காப்பாற்றுவோம் என்பது தொடர்பான செயல் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறார்கள்.  

நதியைத் தூய்மைப்படுத்தும் இந்த இயக்கம், குப்பையிலிருந்து செல்வத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கியளித்திருக்கிறது.  உள்ளபடியே இந்த நதியிலும், இதன் கரையோரங்களிலும் பெரிய அளவில் நெகிழிப் பொருட்களின் குப்பை நிறைந்திருந்தது.  நதியைக் காப்பாற்ற வேண்டி பணியாற்றி வரும் அமைப்பினர், இந்த நெகிழிப் பொருட்களிலிருந்து, சாலையை உருவாக்கத் தீர்மானம் செய்தார்கள்.  அதாவது நதியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நெகிழிப் பொருட்களைக் கொண்டு, மிஸோரமின் ஒரு கிராமத்திலே, மாநிலத்திலேயே முதன்முறையாக ஒரு சாலை போடப்பட்டது, அதாவது தூய்மையோடு கூடவே வளர்ச்சி.

        நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு முயற்சியைத் தான் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய சுயவுதவி அமைப்புகள் வாயிலாகத் தொடங்கி இருக்கிறார்கள்.  புதுச்சேரி கடலோரப் பகுதி.  அங்கிருக்கும் கடற்கரைகளையும், கடலையும் கண்டுகளிக்க மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள்.  ஆனால் புதுச்சேரியின் கடற்கரையிலும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் மாசு அதிகரித்துக் கொண்டிருந்தது.  தங்களுடைய கடல் பகுதியில், கடல் கரைகளில், சுற்றுச்சூழலைப் பராமரிக்க, இந்தப் பகுதி மக்கள் ‘Recycling for Life’ வாழ்க்கைக்கான மறுசுழற்சி என்ற இயக்கத்தைத் தொடக்கினார்கள். 

இன்று புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில், ஆயிரக்கணக்கான கிலோ குப்பைகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்டு, பகுக்கப்படுகிறது.  இவற்றில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது, பிற பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு ஈடுபடுத்தப்படுகிறது.  இதைப் போன்ற முயற்சிகள் உத்வேகம் அளிப்பவையாக இருப்பதோடு, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்கு எதிராக பாரதம் செயல்படுத்தி வரும் இயக்கத்திற்கு விரைவும் கூட்டுகின்றது.

        நண்பர்களே, நான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு விசித்திரமான சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.  நான் இதைப் பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  தூய்மை பற்றிய செய்தியைத் தாங்கிச் செல்லும் இந்த சைக்கிள் ஓட்டுபவர்களின் ஒரு குழு, சிம்லா தொடங்கி மண்டி வரை செல்கிறது.  மலைப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 175 கிலோமீட்டர்கள் தொலைவினை இந்தக் குழுவினர், சைக்கிள் மூலமாக நிறைவு செய்வார்கள்.  இந்தக் குழுவில் பெரியோரும் இருக்கிறார்கள், சிறுவர்களும் இருக்கிறார்கள்.  நமது சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும், நமது மலைகளும் நதிகளும், கடல்களும் தூய்மையாக இருந்தால், நமது ஆரோக்கியமும் அதே அளவு சிறப்பானதாக இருக்கும்.  நீங்கள் இது போன்ற முயற்சிகளைப் பற்றிக் கண்டிப்பாக எனக்கு எழுதி வாருங்கள்.

        என் இனிய நாட்டுமக்களே, நமது தேசத்திலே பருவமழை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.  பல மாநிலங்களில் மழை அதிகரித்து வருகிறது.  நீர் மற்றும் நீர் பராமரிப்புத் திசையில் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.  பல நூற்றாண்டுகளாகவே இந்தப் பொறுப்பினை நமது நாட்டிலே, சமுதாயமானது இணைந்து ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது.  மனதின் குரலில் நாம் ஒரு முறை step wells, படிக்கிணறுகள் பாரம்பரியம் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  படிகளில் இறங்கி எந்தப் பெரிய குளங்களை நாம் எட்டுகிறோமோ அவற்றைத் தான் நாம் படிக்கிணறுகள் என்று அழைக்கிறோம், இவற்றை வடநாட்டிலே பாவ்டீ என்கிறார்கள்.  ராஜஸ்தானின் உதய்பூரில் இப்படிப்பட்ட, பல்லாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு படிக்கிணறு இருக்கிறது – சுல்தான் கீ பாவ்டீ.  இதனை ராவ் சுல்தான் சிங் தான் உருவாக்கினார் என்றாலும், புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் மெல்லமெல்ல இந்த இடம் வறண்டு போகத் தொடங்கி, இங்கே குப்பைக்கூளங்கள் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது. 

ஒரு நாள், சுற்றிப் பார்க்க வந்த சில இளைஞர்கள், இதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டார்கள்.  இந்த சுல்தான் கீ பாவ்டீ படிக்கிணற்றின் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்போதே இந்த இளைஞர்கள் உறுதி பூண்டார்கள்.  இவர்கள் தங்களுடைய இந்த உறுதிப்பாட்டிற்கு வைத்த பெயர் சுல்தானிலிருந்து சுர் தான்.  இது என்னது, சுர் தான் என்று நீங்கள் யோசிக்கலாம்!!  உள்ளபடியே, தங்களுடைய முயற்சிகளால் இந்த இளைஞர்கள், இந்தப் படிக்கிணற்றுக்கு உயிரூட்டியது மட்டுமல்ல, இதனை இசையின் ராகம் தானத்தோடும் இணைத்து விட்டார்கள்.  சுல்தான் கீ பாவ்டீ படிக்கிணற்றின் தூய்மைக்குப் பிறகு, இதை அழகுபடுத்திய பிறகு, அங்கே இசை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.  இது எந்த அளவுக்கு விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது என்றால், அயல்நாடுகளிலிருந்தும் பலர் இதைப் பார்ப்பதற்காகவே வரத் தொடங்கி இருக்கிறார்கள். 

இந்த வெற்றிகரமான முயற்சியில் மிக விசேஷமான விஷயம் என்னவென்றால், இந்த இயக்கத்தைத் தொடங்கிய இளைஞர்கள் பட்டயக் கணக்காயர்கள் தாம்.  யதேச்சையாக, இப்போதிலிருந்து சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் முதல் தேதியன்று பட்டயக் கணக்காளர்கள் தினம் வருகிறது.  நான் தேசத்தின் அனைத்துப் பட்டயக் கணக்காளர்களுக்கும் முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நாம் நமது நீர் நிலைகளை, இசை, இன்னும் பிற சமூக நிகழ்ச்சிகளோடு இணைத்து, இவை பற்றி இப்படிப்பட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தலாமே.  நீர் பராமரிப்பு என்பது உண்மையில் உயிர்ப் பாதுகாப்பு.  நீங்களே கவனித்திருக்கலாம், இப்போதெல்லாம் நிறைய நதி உற்சவங்கள் நடைபெறத் தொடங்கி விட்டன. உங்கள் நகரங்களிலும் கூட இதைப் போன்ற நீர்நிலை இருந்தால், அங்கே ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

        எனதருமை நாட்டுமக்களே, நமது உபநிஷதங்களில் ஒரு உயிர் மந்திரம் உண்டு – சரைவேதி சரைவேதி சரைவேதி – நீங்கள் கண்டிப்பாக இந்த மந்திரத்தைக் கேட்டிருக்கலாம்.  இதன் பொருள் – சென்று கொண்டே இரு, சென்று கொண்டே இரு என்பது தான்.  இந்த மந்திரம் நமது தேசத்திலே ஏன் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது என்றால், தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருத்தல், இயங்கிக் கொண்டு இருத்தல் என்பது தான் நமது இயல்புநிலை. ஒரு நாடு என்ற முறையிலே, நாம், ஆயிரக்கணக்கான வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டு தான் இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம். ஒரு சமுதாயம் என்ற வகையிலே, நாம் எப்போதும், புதிய எண்ணங்கள், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் சென்றிருக்கிறோம். இதன் பின்னே, நமது கலாச்சார வேகத் தன்மை, பயணங்கள் ஆகியவற்றின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.  ஆகையினால் தான் நமது ரிஷிகளும் முனிவர்களும், தீர்த்தயாத்திரை போன்ற தார்மீகக் கடமைகளை நமக்கு அளித்திருக்கிறார்கள்.

பல்வேறு தீர்த்த யாத்திரைகளை நாம் அனைவரும் மேற்கொள்கிறோம்.  இந்த முறை சார்தாம் யாத்திரையில் எந்த அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், என்பதை நீங்களே கூட கவனித்திருக்கலாம்.  நமது தேசத்திலே பல்வேறு சமயங்களில் பல்வேறு தேவ யாத்திரைகள் நடைபெறுகின்றன. தேவ யாத்திரைகள், அதாவது, இதில் பக்தர்கள் மட்டுமல்ல, நமது பகவானே கூட யாத்திரை மேற்கொள்கிறார்.  சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று பகவான் ஜகன்னாதரின் புகழ்மிக்க யாத்திரை தொடங்க இருக்கிறது. ஒடிஷாவின், புரியின் யாத்திரை பற்றி நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும்.  பகவான் ஜகன்னாதரின் யாத்திரை ஆஷாட மாத துவிதியையில் தொடங்குகிறது.  ஆஷாடஸ்ய துவிதீயதிவசே… ரதயாத்திரை, என்று நமது புனித நூல்களில், சம்ஸ்கிருத சுலோகங்கள் வாயிலாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.  குஜராத்தின் அஹ்மதாபாதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத துவிதியையில் ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. 

நான் குஜராத்தில் இருந்தேன், அப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரையில் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து வந்தது. ஆஷாட துவிதீயை, இதை ஆஷாடீ பீஜம் என்றும் அழைப்பார்கள்; இந்த தினத்திலிருந்து தான் கட்ச் பகுதியின் புத்தாண்டும் தொடங்குகிறது.  கட்ச் பகுதியைச் சேர்ந்த எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  இது எனக்கு மேலும் ஒரு காரணத்தின் பொருட்டு விசேஷமானது – ஆஷாட துவிதீயாவிலிருந்து ஒரு நாள் முன்பாக, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் திதியன்று நாங்கள் குஜராத்தில் ஒரு சம்ஸ்கிருதக் கொண்டாட்டத்தைத் தொடக்கினோம், இதில் சம்ஸ்கிருத மொழியில் பாடல்கள்-இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 

இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ஆஷாடஸ்ய பிரதம திவஸே, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் தினம் என்பதே இதன் பொருள்.  கொண்டாட்டத்திற்கு இந்த சிறப்பான பெயரைக் கொடுப்பதன் பின்னணியில் ஒரு காரணம் உண்டு.  உண்மையில், சம்ஸ்கிருதத்தின் மாபெரும் கவியான காளிதாஸன், ஆஷாட மாதத்திலிருந்து மழையின் வருகையைக் கொண்டு மேகதூதம் காவியத்தை எழுதினான்.  மேகதூதத்திலே ஒரு ஸ்லோகம் உண்டு – आषाढस्य प्रथम दिवसे मेघम् आश्लिष्ट सानुम् ஆஷாடஸ்ய பிரதம திவஸே மேகம் ஆஸ்லிஷ்ட சானும், அதாவது, ஆஷாட மாதத்தின் முதல் தினத்தன்று மலைச் சிகரங்களைத் தழுவியிருக்கும் மேகங்கள் என்ற இந்த ஸ்லோகம் தான், இந்த நிகழ்ச்சிக்கான ஆதாரமாக அமைந்தது.

        நண்பர்களே, அஹ்மதாபாதாகட்டும், புரியாகட்டும், பகவான் ஜகன்னாதர் தனது இந்த யாத்திரை வாயிலாக நமக்குப் பல ஆழமான மனிதநேயம் மிக்க செய்திகளை அளிக்கிறார்.  பகவான் ஜகன்னாதர் உலகிற்கே ஸ்வாமியாக இருக்கிறார் என்பது மறுப்பதற்கில்லை; ஆனால் அவரது இந்த யாத்திரையில் ஏழைகள், வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான பங்களிப்பு இருக்கிறது.  பகவானும் கூட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு, நபருடன் இணைந்து பயணிக்கிறார்.  அந்த வகையில் நமது யாத்திரைகள் அனைத்திலும், ஏழை-செல்வந்தர், உயர்தோர்-தாழ்ந்தோர் என எந்த வேறுபாடும் காணக் கிடைக்காது.  அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, யாத்திரை தான் தலையாயதாக விளங்குகிறது. 

உதாரணமாக, மஹாராஷ்டிரத்தின் பண்டர்பூரின் யாத்திரை பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருக்கலாம்.  பண்டர்பூரின் யாத்திரையில், யாரும் பெரியவரும் இல்லை, யாரும் சிறியவரும் இல்லை.  அனைவருமே வார்கரிகள் தாம், பகவான் விட்டலனின் சேவகர்கள் தாம். இன்னும் 4 நாட்கள் கழித்து ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று அமர்நாத் யாத்திரையும் தொடங்க இருக்கிறது. நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கெடுக்க ஜம்மு கஷ்மீரம் வருகிறார்கள். ஜம்மு கஷ்மீரத்தின் வட்டார மக்களும், அதே அளவு சிரத்தையோடு இந்த யாத்திரையின் பொறுப்புக்களை மேற்கொண்டு, தீர்த்த யத்திரிகர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றார்கள். 

        நண்பர்களே, தெற்கிலும் இப்படிப்பட்ட மகத்துவமான சபரிமலை யாத்திரை இருக்கிறது.  சபரிமலையின் மீது குடிகொண்டிருக்கும் பகவான் ஐயப்பனை தரிசிக்க மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை, பயணிக்கும் பாதை முழுமையாகக் காடுகள் நிரம்பியதாக இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகிறது.  இன்றும் கூட மக்கள் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்ளும் போது, சமயச் சடங்குகள் தொடங்கி, தங்கும் வசதிகள், ஏழைகளுக்கு இதனால் ஏற்படும் வாய்ப்புகள், அதாவது இந்த யாத்திரைகள் இயல்பிலேயே ஏழைகளுக்குச் சேவை செய்ய ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது, இது அந்த ஏழைகளுக்கு மிகுந்த ஆதாயமாக இருக்கிறது என்பது தான்.  ஆகையால், தேசமும் கூட இப்போதெல்லாம் ஆன்மீக யாத்திரைகளின் பொருட்டு, பக்தர்களின் வசதிகளை அதிகரிக்க பல முயல்வுகளை மேற்கொள்கின்றது.  நீங்களும் ஒரு யாத்திரையை மேற்கொண்டால், உங்களுக்கு ஆன்மீகத்தோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதத்தையும் தரிசிக்க முடியும்.

        எனதருமை நாட்டுமக்களே, எப்போதும் போலவே இந்த முறையும் மனதின் குரல் வாயிலாக, உங்களனைவரோடும் இணையக்கூடிய இந்த அனுபவம் மிகவும் சுகமளிப்பதாக இருந்தது.  நாம் நாட்டுமக்களின் வெற்றிகள், சாதனைகள் பற்றி ஆலோசித்தோம்.  இவற்றுக்கு இடையே, நாம் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.  ஆனால் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திடம் தடுப்பூசி என்ற வலுவான பாதுகாப்புக் கவசம் இருக்கிறது. நாம் 200 கோடி தடுப்பூசித் தவணைகள் என்ற இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறோம்.  தேசத்தில் விரைவாக முன்னெச்சரிக்கைத் தவணையும் போடப்பட்டு வருகிறது. 

இரண்டாவது தவணைக்குப் பிறகு முன்னெச்சரிக்கைத் தவணை போட்டுக் கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டது என்றால், நீங்கள் அந்த 3ஆவது தவணையை உடனடியாகப் போட்டுக் கொள்ளுங்கள்.  உங்கள் குடும்பத்தாருக்கு, குறிப்பாக மூத்தோருக்கும் முன்னெச்சரிக்கைத் தவணையைப் போடுங்கள்.  நாம் கைகளைச் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்ற அவசியமான முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.  மழைக்காலத்தில் நம்மருகிலே இருக்கும் மாசினால் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களிடமிருந்தும் விழிப்போடு இருக்க வேண்டும்.  நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், மேலும் சக்தியோடு முன்னேறிச் செல்லுங்கள். 

அடுத்த மாதம், நாம் மீண்டும் ஒருமுறை சந்திக்கலாம், அதுவரை பலப்பல நன்றிகள், வணக்கம்.

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பவன் கல்யாண் என்ற தளபதி!

மிஷனரிகள் விஷ தீஷ்ணயம் தாண்டி தடைகளை உடைத்து திமிரி வரும் பவன் கல்யாண் போல்வாரை வாரி அணைத்து பாதுகாப்பது நமது கடமை

ஹரியானா- ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாஜக.,! காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சியமைக்கிறார்!

புள்ளி விவரங்களைப் பார்க்கையில் ஜம்மு - காஷ்மீர் தேர்தல் காங்கிரசின் தோல்வியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பகுதி வாரியாக ஜம்முவின் அனைத்து தொகுதிகளையும் குறி வைத்த பாஜக.,வின் திட்டத்திற்கு பெருமளவு பலன் கிடைத்துள்ளது

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

Topics

பவன் கல்யாண் என்ற தளபதி!

மிஷனரிகள் விஷ தீஷ்ணயம் தாண்டி தடைகளை உடைத்து திமிரி வரும் பவன் கல்யாண் போல்வாரை வாரி அணைத்து பாதுகாப்பது நமது கடமை

ஹரியானா- ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாஜக.,! காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சியமைக்கிறார்!

புள்ளி விவரங்களைப் பார்க்கையில் ஜம்மு - காஷ்மீர் தேர்தல் காங்கிரசின் தோல்வியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பகுதி வாரியாக ஜம்முவின் அனைத்து தொகுதிகளையும் குறி வைத்த பாஜக.,வின் திட்டத்திற்கு பெருமளவு பலன் கிடைத்துள்ளது

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாங்கம் அக்.08- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Related Articles

Popular Categories