
44ஆவது செஸ் ஒலிம்பியாட், பூஞ்சேரி, மாமல்லபுரம் – முதல் நாள் 29.07.2022
- K. V. பாலசுப்பிரமணியன்
44ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பாரதப் பிரதமர் நரேந்திரபாய் மோதியால் 2022 ஜூலை 28 அன்று மாலை தொடக்கி வைக்கப்பட்டது. தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அர்காடி வொர்கோவிச் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆசியாக் கண்டத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986இல் துபாயிலும் 1992இல் மணிலாவிலும் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறை.
இந்தப் போட்டியினை நடத்த மதிய அரசோடு இணைந்து தமிழக அரசு ஒரு மாபெரும் பணியைச் செய்துள்ளது. இந்தப் போட்டிகள் ஆண்கள் பிரிவு (ஓபன் பிரிவு என்றும் அழைக்கப்படுகிறது), பெண்கள் பிரிவு என இரு பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
ஆண்கள் பிரிவில் 187 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் அமெரிக்க, இந்திய ஆண்கள் அணி A, நார்வே அணி மூன்றும் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ளன. பெண்கள் பிரிவில் 167 அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டி நடத்தும் அணி என்பதால் இந்தியாவுக்கு இரு பிரிவிலும் மூன்று அணிகள் அனுமதிக்கப் பட்டுள்ளது
ஆண்கள் பிரிவில் –
A அணி: விதித்.எஸ். குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல். நாராயணன், கே. சசிகிரண்
B அணி: நிஹால் சரின், டி. குஹேஷ், ஆர். பிரக்ஞானந்தா, பி. அதிபன், ரௌனக் சாத்வானி
C அணி: சூர்ய சேகர் கங்குலி, எஸ்.பி.சேதுராமன், அபிஜித் குப்தா, கார்த்திகேயன் முரளி, அபிமன்யு புரானிக்
பெண்கள் பிரிவில்
A அணி: கோனெரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, ஆர். வைஷாலி (பிரக்ஞானந்தாவின் இளைய சகோதரி, இவரது தந்தை ஒரு பயிற்சியாளராக அணியில் இருக்கிறார்), தானியா சச்சதேவ், பக்தி குல்கர்னி
B அணி: வந்திகா அகர்வால், சௌம்யா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரவுத், திவ்யா தேஷ்முக்
C அணி: ஈஷா கார்வடே, சஹிதி வர்ஷிணி, பிரத்யுஷா போத்தா, பி.வி. நந்திதா, விஷ்வா வாஸ்னவாலா
இன்று மகாபலிபுரம் பூஞ்சேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரும்மாண்டமான இரண்டு அரங்குகளில் சதுரங்கப் போட்டிகள் மதியம் மூன்று மணிக்குத் தொடங்கின. அனுராக் சிங் தாகூர், எல் முருகன், மெய்யநாதன், அர்காடி வொர்கோவிச், உதயநிதி ஸ்டாலின், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் போட்டிகளை காய் நகர்த்தி தொடக்கிவைத்தனர்.
ஒரு அணியிலிருந்து நான்கு போட்டியாளர்கள் மட்டுமே விளையாடுவார்கள். இன்றைய முதல் சுற்றிப் போட்டியில் ஹரிகிருஷ்ணா, பிரக்ஞானந்தா, சூர்ய சேகர் கங்குலி ஆகியோர் ஆண்கள் பிரிவில் ஆடவில்லை. பெண்கள் பிரிவில் எட்டு மாத கர்ப்பிணியான ஹரிகா த்ரோணவள்ளி, பத்மினி ரவுத், விஷ்வா வாஸ்னவாலா ஆகியோர் விளையாடவில்லை.
இன்றைய முதல் சுற்று விளையாட்டுகளில் அனைத்து இந்திய அணிகளும் எதிரனிகளை 5-0 என்ற கணக்கில் வென்று வெற்றிமுகத்தோடு போட்டியைத் தொடங்கியுள்ளன.