
44ஆவது செஸ் ஒலிம்பியாட் – ஐந்தாம் நாள் 02.08.2022
– முனைவர். கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று மாமல்லை, பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுகளின் ஐந்தாம் நாள். இன்று நடந்த ஐந்தாவது சுற்றில் இந்தியா ஆண்கள் B அணியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
இதனை அதிர்ச்சித் தோல்வி என்று சொல்ல முடியாது. ஏனெனில் நேற்றே அவரது ஆட்டத்தில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது. சுற்று எண்ணிக்கை அதிகமாக அதிகமாக டென்ஷன் கூடுகிறது. அதன் காரணமாக இருக்கலாம். இன்றைய போட்டிகளில் இந்தியா ஆண்கள் A அணி ருமேனியா அணியுடன் விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெர்றிபெற்றது. ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி, நாராயணன் மூவரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து, தலா அரைப் புள்ளி பெற்றனர். எரிகைசி அர்ஜுன் வெற்றி பெர்று ஒரு புள்ளி பெற்றார்.
இந்தியா ஆண்கள் B அணி ஸ்பெயின் அணியுடன் விளையாடி, பிரக்ஞானந்தாவின் தோல்விக்குப் பின்னரும் 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். குஹேஷ் அதிபன் தத்தம் ஆட்டங்களில் வெற்றிபெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். சரின் நிஹால் ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். பிரக்ஞானந்தா ஸ்பெயின் வீரர் சாண்டாஸ் லடசா ஜெய்மி உடன் விளையாடி தோல்வியடைந்தார்.
இந்தியா ஆண்கள் C அணி சிலி அணியோடு விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. கங்குலி ஆட்டத்தை ட்ரா செய்தார். சேதுராமன், அபிமன்யு இருவரும் வெற்றி பெற்றனர். கார்த்திகேயன் முரளி தோல்வியடைந்தார். ஐந்து சுற்று முடிவில் இந்தியா ஆண்கள் B அணி தரவரிசையில் முதலிடத்திலும் இந்தியா ஆண்கள் A அணி 4ஆவது இடத்திலும் இந்தியா ஆண்கள் C அணி 22ஆவது இடத்திலும் இருக்கின்றன.
இந்தியா பெண்கள் A அணி இன்று பிரான்சு அணியோடு விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, ஆர். வைஷாலி மூவரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப்பிள்ளி பெற்றனர். தனியா சச்சதேவ் வெற்றி பெற்று ஒரு புள்ளி பெற்றார். இந்தியா பெண்கள் B அணி ஜியார்ஜியா அணியோடு விளையாடி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.
வந்திகா அகர்வால், பத்மினி ரௌத் இருவரும் தங்களது ஆட்டாத்தை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். சௌம்யா சுவாமிநாதன் மற்றும் திவ்யா தோல்வியடைந்தனர். இந்தியா பெண்கள் C அணி பிரேசில் அணியோடு விளையாடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் ட்ரா செய்தது. ஈஷா கர்வாடே, விஷ்வா இருவரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து, தலா அரைப்புள்ளி பெற்றனர்.
நந்திதா வெற்றி பெற்று, ஒரு புள்ளி பெற்றார். பிரத்யுஷா தோல்வியடைந்தார். ஐந்து சுற்று முடிவில் பெண்கள் பிரிவில் தரவரிசையில் இந்தியா பெண்கள் A அணி முதலிடத்தையும் இந்தியா பெண்கள் B 18ஆவது இடத்தையும் இந்தியா பெண்கள் C 29 இடத்தையும் பெற்றுள்ளனர்.