
காமன்வெல்த் போட்டிகள் – ஒன்பதாம் நாள் (6-08-2022)
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
காமன்வெல்த் போட்டிகளில் ஒன்பதாம் நாளில் இந்தியா 14 பதக்கங்களைப் பெற்றது. இதில் 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதுவரை இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது,
மல்யுத்தப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று பல பதக்கங்களைப் பெற்றனர். 74 கிலோ எடைப்பிரிவில் நவீன் பாகிஸ்தான் வீரர் தாஹிரை வீழ்த்தி, தங்கப் பதக்கம் பெற்றார். இது நவீனின் முதல் காமன்வெல்த் போட்டி. 57 கிலோ எடைப் பிரிவில் ரவி தஹியா நைஜீரியாவின் எபிக்கிவைன்மோவைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் பெற்றார். ரவிக்கும் இது முதல் காமன்வெல்த் போட்டியாகும். 97 கிலோ எடைப்பிரிவில் தீபக் நெஹரா வெண்கலப் பதக்கம் பெற்றார்.
பெண்கள் 53 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகட் இலங்கை வீராங்கனை சமோத்யா கேஷானியைத் தோற்கடித்து தங்கம் வென்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் வினேஷ் போகட்டின் தொடர் மூன்றாவது தங்கப் பதக்கமாகும். மூன்று தொடர் தங்கப் பதக்கங்கள் பெற்ற முதல் இந்திய வீரர் போகட் ஆவார். பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் பூஜா கெலாட் வெண்கலப் பதக்கம் பெற்றார். பெண்கள் 70 கிலோ எடைப் பிரிவில் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
குத்துச் சண்டையில் 60 கிலோ பெண்கள் பிரிவில் ஜாஸ்மின் வெண்கலப் பதக்கம் பெற்றார். நிக்ஹாத் ஸரீன் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 57 கிலோ ஆண்கள் பிரிவில் முகம்மது ஹுஸ்ஸாமுதீன் வெண்கலப் பதக்கம் பெற்றார். 92 கிலோ எடைப் பிரிவில் சாகர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார். எனவே மேலுமொரு தங்கம் அல்லது வெள்ளி நிச்சயம். 67 கிலோ எடைப் பிரிவில் ரோஹித் டோகாஸ் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கப் போட்டியில் ராஜ் அரவிந்தன் அழகர் இன்று தோல்வியுற்றார். ஆனால் பெண்கள் பிரிவில் பாவினா படேல் தங்கப் பதக்கம் வென்றார். இதேபிரிவில் சோனால்பென் படேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸ் பொட்டியில் இந்திய மகளிர் இரட்டையர் அணிகள் காலிறுதிப் போட்டியில் இன்று தோல்வியைச் சந்தித்தன. ஷரத் கமல் ஆண்கள் இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி இரண்டிலும் வெற்றி பெற்றி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆண்கள் இரட்டையரில் அவரது ஜோடி ஜி. சத்தியன்; கலப்பு இரட்டையரில் ஸ்ரீஜா அகுலா. எனவே மேலும் இரண்டு பதக்கங்கள் நிச்சயம்.
பாட்மிண்டனில் கிடாம்பி ஸ்ரீகாந்த் இங்கிலாந்து வீரர் டோபி பெண்டியைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார். அதேசமயம் லக்ஷயா சென் மொரீஷியஸ்சின் பால் என்பவரைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். அதே போல பி.வி. சிந்துவும் காலிறுதியில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். பெண்கள் இரட்டையர் போட்டியில் திரீஸா ஜாலி & காயத்ரி கோபிசந்த் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் சாட்விக் & சிராக் ஜோடி ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல் & சௌரவ் கோஷல் ஜோடி இன்று தோல்வியடைந்தது. இனி வெண்கலப் பத்த்க்கப் போட்டியில் இந்த ஜோடி விளையாடும். லான் பவுல்ஸ் போட்டியில் ஆண்கள் நால்வர் பிரிவில் இந்திய ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது. மகளிருக்கான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி 164/5; இங்கிலாந்து அணி 160/6.
தடகளப் போட்டிகளில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய மகளி அணி (ட்யூட்டி சந்த், ஹிமாதாச், ஸ்ராபனி நந்தா, ஜோதி யர்ராஜி) இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் அவினாஷ் முகுந்த் சாப்லே 300 மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10000 மீட்டர் நடைப் போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தென் ஆப்பிரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குச் சென்றது. இங்கேயும் ஒரு பதக்கம் நிச்சயம்.