இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டி20 போட்டி, கௌஹாத்தி, 02.10.2022
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (20 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 237 ரன், ராகுல் 57, ரோஹித் 43, சூர்யகுமார் யாதவ் 61, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 49, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17, கேசவ் மஹராஜ் 2/23) தென் ஆப்பிரிக்க அணியை (20 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 221 ரன், டி காக் ஆட்டமிழக்காமல் 69, டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 106, அர்ஷதீப் சிங் 2/62) 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில், 5 ஃபோர், 5 சிக்ஸுடன் 62 ரன் எடுத்தார்.
ஏழு பந்துகள் விளையாடிய தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸ், ஒரு ஃபோருடன் 17 ரன் எடுத்தார். இந்திய அணியின் ரன் ரேட் 11.85ஆக இருந்தது.
அடுத்து விளையாடிய தெனாப்பிரிக்க அணியின் தலைவர் பௌமாவும் ரோஸ்கோவும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மர்க்ரம் ஏழாவது ஓவரில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 47ஆக இருந்தது. அதன் டேவிட் மில்லரும் டி காக்கும் இணைந்து அருமையாக ஆடினர்.
இருப்பினும் அஷ்வின், தீபக் சாஹார் இருவரும் அதிக ரன் கொடுக்காமல் பந்து வீசினர். மற்றவர்கள் வீசிய பந்துகள் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தன. கடைசி ஓவரில் 37 ரன் எடுக்க வேண்டிய ஒரு நிலை.
பந்து வீச வந்தவர் அக்சர் படேல்; எனவே ‘நோ பால்’, ‘வைட்’ வீச வாய்ப்பு குறைவு. எனவே ஆறுபந்துகளிலும் சிக்சர் அடித்தாலும் வெற்றி பெறலாம் என்ற கணக்கோடு 20ஆவது ஓவரை இந்திய அணி வீசியது.
அந்த ஓவரில் மூன்று சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஆனாலும் இதர மூன்று பந்துகளில் இரண்டு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே இந்திய அணி வென்றது.
சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 50 ரன் அடித்து சாதனை செய்துள்ளார். 12 பந்துகளில் யுவராஜ் சிங் 50 ரன் அடித்து இருப்பது இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை. மேலும் சூர்யகுமார் 31 டி20 போட்டிகளில் 1000 ரன் இன்று எடுத்துள்ளார். இந்த வெற்றியோடு இந்திய அணி 2-0 என்றா கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியை வெல்லும் முதல் அணித்தலைவர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெறுகிறார். கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.